Sunday, 27 September 2020

மறுமை

 ஒன்றுமே புரியவில்லை. ஏகப்பட்ட வரிசைகள். உள்ளதிலேயே சிறியதாகத் தெரிந்த ஏதோ ஒரு வரிசையில் நின்று கொண்டு இது என்ன வரிசை என்றேன். பதிலில்லை. ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று நினைத்தவன்

முன்னால் நின்றிருந்த  முகமற்ற உருவத்தை மெல்லச் சீண்டி தமிழ் தெரியுமா என்றேன். 


திரும்பியது. என் நெற்றியை உற்றுப் பார்த்தது.

என் மூளையில் ஏதோ மின்னல். அடுத்த கணம் யாரோ நான் சிங்கம் இது சிங்க வரிசை. நீ மனிதனா அப்போ வலது பக்க பக்கம் ஆறாயிரத்து நாற்பத்தைந்தாவது  வரிசைக்குப் போய் நில்லு என்றொரு குரல் கேட்டது.


வாய் திறந்து பேச அவசியம் இல்லை. வரிசைகளில் நிற்கும் உருவங்களின் நெற்றியை நேராகப் பார்த்து நம் வினாவை நினைத்தாலே விடையை மூளைக்கு யாரோ தெரிவித்தார்கள்.


எப்படியோ பல உருவங்களை உற்று நோக்கி கேள்வி எழுப்பி பதிலைப் பெற்று ஒரு வழியாக  கௌண்டர் எண் 474231965 வந்தடைந்தேன்.

வரிசையை கண்டு பிடித்துச் சேர்ந்து கொண்ட போது "யோவ் யாருய்யா ஊடால பூரரது" என்று மண்டைக்குள் ஏகப்பட்ட சத்தம். 


யாரோ கையைப் பிடித்து இழுத்த மாதிரித் தெரிந்தது.மரியாதை கெட்ட இடமாக இருக்கிறது. 


நாம் எத்தனை செல்வாக்கான ஆசாமி. இங்க வந்தா ஒரு வரவேற்பு வளைவு கூட இல்லை. என்ன ஜனங்க என்னை மறந்து விட்டார்களா என்று நினைத்த போது 

மீண்டும் மூளைக்குள் ," புதுசா, மொதல்ல ஒண்ணா நம்பர் கௌண்டரில போய் பாஸ்புக் வாங்கிக்க" என்று கட்டளையிட்டது.


ஒண்ணா நம்பர் கௌண்டரில் கூட்டம் அலை மோதியது. கௌண்டரில் வரிசை படு வேகமாக நகர்ந்தது. கௌண்டரில் இருந்த பெண்ணுக்கு ரவிவர்மா வரைந்த ரம்பையின் சாயல் இருந்தது.


சிரித்தபடி கையில் ஒரு புத்தகத்தைத் திணித்து " வெல்கம்" என்றாள்.

அப்பாடா, ஒரு பின்னாளில் நேரமிருந்தால் கரைக்ட் பண்ண நம்ம **** வட்டம் மூலம் ஏற்பாடு பண்ணி வேண்டும். நினைப்போடியதுமே பின் மண்டையில் யாரோ அடித்த மாதிரி இருந்தது. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.


ஓ. இங்கே இது தப்பு போலிருக்கு. எல்லாம் விசித்திரமாக இருக்கு என்று நினைத்தபடி அந்த பாஸ் புக்கை பிரித்துப் பார்த்தேன்.

ஒன்றுமே எழுதியிருக்கவில்லை. மறுபடியும் மூளையில் கட்டளை "பாஸ் புக்கில் 

 எண்ட்ரி அதோ அந்த கியாஸ்க்கில் பெயர் ஊர் எண்டர் பண்ணி போட்டுக் கொண்டு வா" என்றது.


நல்ல வேளை கியாஸ்கில் அதிகம் கூட்டம் இல்லை. வரிசையில் எனக்கு முன் நின்றவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அரை மணி நேரம் இருக்கும். இன்னும் அவர் எண்ட்ரி முடியவில்லை.

செம கடுப்பில் ," யோவ் , சீக்கிரம் போட்டுக்கிட்டுப் போவியா. மத்தவங்க போடத் தாவல" என்று நினைக்கவும் அந்த உருவம் திரும்பியது.

அட நம்ம *******மாவட்டம். "யோவ் மானா செனா எப்படியா இருக்கே என்று கேட்க நினைத்தேன்".  மறுபடியும் பதில் மண்டைக்குள்" தலைவா நீங்க எப்போ இங்கே வந்தீய. சாதாவா கொரோனாவா ". 

நா கொரோனா. நீங்க எப்படி"?


அதற்குள் மானா செனா பாஸ்புக் எண்ட்ரி முடிந்து கியாஸ்க் மிஷின் துப்பியது.

என் பாஸ்புக்கை மெஷினில் செருகியதும் திரையில் பெயர் என்றது

மாண்புமிகு.டாக்டர். *******இனக்காவலர் என்று அடைமொழி  எல்லாம் போட்டு உள்ளிட்டால் தவறான தகவல்கள் என்று துப்பியது.

எனக்கே மறந்து போன தாய், தந்தை வைத்த பெயரை உள்ளிட்டதும் ஏற்றுக் கொண்ட மெஷின் அடுத்துக் கேட்டது " இறந்த நாள்".