Tuesday 31 May 2016

தனித்திருந்தது நிலாப்பெண்

கண்ணடித்தன விண்மீன்கள்

அவற்றைப் போய் நல்லா நாலு வார்த்தை கேட்கலாமென்றால்,

இந்த பூமி இழுத்துக் கொண்டு கூடவே
 பீச், மால், கொடைக்கானல் என்று சுற்ற வைக்கிறான்.



சரி, இவனை காதலித்துத் தொலைப்போம் என்றால்
யாரோ ஆம்ஸ்டிராங்காம், அவனை விட்டு என்னை வேவு வேறு பார்க்கிறான்.

நம்பிக்கை கெட்ட ஜென்மம்.
மனிசப்பய வாழற இடத்துக் காரன் அவனை மாதிரித்தானே இருப்பான்.

சூரியன் வேற தினம் தினம் வந்து மேக்கப் போட்டு அழகாக்கி விட்டு மனதைக் கரைக்கிறான். 

காதலிக்கவில்லையானால் ஒளிதரமாட்டேன் என்று குறுக்கே வந்து பிரச்சனை பண்ணுகிறான்.

மாதாமாதம் இவனுங்களுக்குப் பயந்து ஒளிகிறதும், காணாமல் போவதும், திரும்ப வருவதுமாயிற்று என் வாழ்க்கை.

பெரும் குழப்பம் யாரைத்தேர்ந்தெடுப்பதென்று.

வழி தெரியாமல் பாழும் கிணற்று நீரில் நீந்தியபடி சிந்திக்கிறேன்.
யாராவது கூட துணைக்கு இருங்களேன். பிளீஸ்

Monday 30 May 2016

இரவு விடுதி நடனப் பெண்

கதிரவன் உதயத்தில் பார்த்த அந்தக் காட்சி

நேற்றைய பின்னிரவு பிறை நிலவும் எரியாத சோடிய விளக்குகள் தூணும் பார்த்ததுதான்

கடலில் கட்டு மரம் தள்ளிப் போனவர்களும்
இரவில் பாய்போட்டுத் தூங்கியவரும் அறியாதது



மண்ணும் உப்பும் கலந்த அந்தக் காற்றும், நீரும் தீண்டி போதும் எந்த சலனமும் அதற்கு இல்லை.

அம்மணம் மூடிய ஒரு இடுப்பு சேராத நீல ஜீன்ஸ் கால்சட்டை மேனியும், முதுகும் இரத்தம் உறைந்து கருநீல வரிகளாய்

மண்ணில் முகம் புதைந்து, வானுக்கு முதுகு காட்டிய மாநிற உடல் மீது கடற்காக்கைகள் உட்கார்ந்து கதை பேச

கடற்கரையில் கால் கழுவ வந்த காலைக் கடன் முடித்திருந்த வடநாட்டு சுற்றுலாப் பயணிகள்
கூட்டமும்

கண்டும் காணத மாதிரி ஒதுங்கியே போன தகவல் தரப் பயந்த நடக்க வந்த  ஓய்வூதியர்கள்

விரித்துக் கிடந்த  கைவிரல் நகங்களில் கருப்பு நகப் பூச்சும் கருப்பு பிளாஸ்டிக் வளையல்கள்

அந்தக் காவல் நிலையத்தில் அலறிய தொலைபேசியை எடுத்துப் பேச யாருமில்லை.

நேரம் ஆக ஆக கூடிய கூட்டத்தின் "உச்" கொட்டல்கள்.  "அறியாத வயசு", "பாவம், யாரும் பெத்த புள்ளையோ" சம்பாஷணைகள்.

காவலர் வந்து எடுத்துப் போன அதை கூறிட்டு அறிக்கை தயாரித்த  மருத்துவர்கள்

அருவெறுப்பின்றி காயம் கட்டுப் போடும் துணியில் கட்டிக் கிடத்திய பணியாளர்கள்

யாருக்கும் தெரியவில்லை அது யாரென்று.

நேற்றைய பின்னிரவில் அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் ஆட்டம் ஆடி விட்டு சம்பளம் பணம் வாங்கிக் கொண்டு

வயோதிகப் பெற்றோர், ஊதாரிக் கணவன், மனவளர்ச்சி குன்றிய பிள்ளை, கவலை மேகங்கள் மனதில் ஓட

தெருவிற்கு வந்து அழைப்பு ஊர்தி வரக் காத்திருந்த இடைவெளியில்

படகுக்காரில் சென்ற கழுகுகள் உயிர் போக கொத்திச் தின்று கடற்கரையில் எறிந்து விட்டுப் போனது

அந்த பின்னிரவு பிறைநிலாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது
கழுகுகள் படுக்கையில் சுகமாகப் படுத்து உறங்கியதும்

இரை கடற்கரையில் செத்துப் கிடந்ததும்

வழியில் காசு கை மாறியதும்.

மறு நாள் நிலா வானுக்கு வரவில்லை. வானம் கருப்பு அணிந்தும்,
சோடிய விளக்குத் தூண்களில் புதிய விளக்குகள்

அது கிடந்த இடத்தில்  ஒளிப்பூ சொரிந்தும் அஞ்சலி செய்தன

Saturday 28 May 2016

சாந்தி சாந்தி சாந்தி

இரை எடுத்த கருப்பு மலைப் பாம்புச்  சாலைகள் சந்தித்த நாற்சந்திதனில்,

நின்ற உலோக தென்னை மரங்களின் உச்சிகளில் காய்த்தி்ருந்த ஒளித் தேங்காய்கள்

வழியோரக்கடைகள் நெற்றியில் கலர் கலராய் விலாசத் திருநீறு

ஓடி வந்த வாகனங்களில் கொள்ளிக் கண்கள்


இலை ஆடை களைந்த மரங்களின் மேனியை இச்சையுடன் தழவ வந்த மெல்லிய காற்று

மேகத்திரை போட்ட வானத்தில் பதுங்கிய விண்மீன்கள்

தாழப் பறந்த இயந்திரப் பறவையின் உறுமல்கள்

வண்ணங்களில் கண்ணடித்தும் முகம் காட்டாத தாரகைகள்

இவை பார்த்தபடி நகர எல்லை கடந்தால்,

தூரத்து மலையில் பற்றி எரியும் செந்நெருப்பு

எங்கிருந்தோ மிதந்து வரும் பாண்டி முனி உடுக்கொலி

கூடவே வரும் சில் வண்டுகளின் ரீங்காரம்

கடந்து காணமல் போகும் வாகனங்களின் சிவப்பு விளக்கொளிகள்

குரைக்காமல் கூட வரும் நாயாக நிழல்

இலக்கின்றி போகிறவனுக்கு பிடிவாதமாய் வழி சொன்ன மைல் கற்கள்





இருட்டுக்கும் தனிமைக்கும் என்றும் பொருத்தம்தான்
சாலை தாண்டி எதிர்ப்புறம் போக ஏதோ மோதிய நினைவு

வலியெடுத்த கால்களுக்கு ஆலமரத்தடி வேர்கள்

விழதுகளில் தொங்கியபடி ஆநிரைகளின் இளங்குடல் பெட்டிகள்

கண்ணயர்ந்த காலம் கேட்ட போல் இருந்த “வா போகலாம்” என்ற குரல் அந்தக் குரல் யாருடையது?

ஏதோ வெளி வந்தது ஒளியாய் மாறி ஒளி தேடி ஓட்டம்

ஓடிய அனைத்தும் ஒளியாக
கூட வர ஓட்டம் நின்றதும்

ஒளி நிறைத்தது
நிறைத்த ஒளியில் அனைத்தும் இணைந்து அடையாளம் அழிந்து
ஒன்றான ஜோதியாய்

சாந்தி சாந்தி சாந்தி.

Wednesday 25 May 2016

காலமானவன்

ஆன் யுவர் மார்ட் கெட் செட் ரெடி கோ,

டப் என்ற சப்தம் வந்ததும் ஓட ஆரம்பித்தேன்.

அதிக வேகம் வேண்டாம்,


நீ ஓடுவது மாரத்தான் என்று குரல் கேட்க,

பக்கத்து டிராக்கில் ஓடும் அவனை அப்போதுதான் பார்த்தேன்.

சினேகமாய் சிரித்த அவனிடம்

"உன்னை ஆரம்பத்தில் பார்த்த நினைவில்லையே", "எங்கே நின்றாய்" எனறேன்.

"உனக்குப் பின்னால், ஆனால் நிற்கவில்லை", எனறான்.

புரியவில்லை என்றதற்கு போகப்போகத் தெரியும் எனறான்.

நான் மகிழ்ச்சியுடன் ஓட அவன் முயல் போல வேகம் எடுத்தான்.

தளர்ந்து சோகமானால் மெதுவாக நத்தை போல் ஊர்ந்தான்.

எவ்வளவு ஓடினாலும் களைப்பின்றி சிரித்தவனிடம் ,

போட்டி நம் இருவருக்கு மட்டுமா என்றேன்.

"பலருடன் தனித்தனியே ஒரு செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் மாதிரி" என்றான்.

மீண்டும் "புரியவில்லை" என்றேன்.

சிரித்தபடி புரியும் தருணம் புரியும் என்றவனை புரிந்து கொண்டபோது

நான் அவனாகி இருந்தேன்.

நான் காலமாகி விட்டதாக பிறர் கூறினர்.

தனி ஊசல்

அவனுக்கு ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி ஊசல்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு நீளம்.

அனுபவித்து வாழ நினைத்தால் அதிக நீளம்

அவசரமாக வாழ குறைந்த நீளம்.



அலையும் காலமோ நீளத்திற்கும், மண்ணின் ஈர்ப்புக்கும்
ஆடுவதும் ஆடிஅடங்குவதும் நீளம் சார்ந்து அப்படியே.

இறப்புக்கும் பிறப்புக்கும் இடையே ஆடும்  இந்த ஆட்டம்
இறுதியில் ஒரு நாள் மெல்ல மெல்ல நின்று போகும்.

அடுத்து அலைக்கும் வரையில் பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவே அமைதி கொள்கிறது ஆன்மா சிலகாலம்,
அலைத்து விட்டு காலம் ஓட விட்டு எண்ணிக்கை ஆரம்பமாயிற்று.

சுழி, ஒன்று, இரண்டு............. என வருடங்களில் வாழ்வின்
அலைவுகளை எண்ண ஆரம்பித்தவன் திறமை சாலி தான்.

எப்படி ஒற்றை ஆளாக இத்தனை ஊசல்களில் அளவெடுக்கிறான்.
வியந்து போனேன் அந்த இறைவனை எண்ணி.


தொண்டன் -2016.

முருகேசனுக்கு தலைவரிடம் அலாதி மரியாதை.
யாராவது எதாவது தப்பாச் சொன்னா கோவம் வரும்.
கண்மண் தெரியாமல் அடித்துக் கூட விடுவான்.
தலைவருக்காக உயிரையும் தரத் தயார்தான்.
மூணு நாளா வேலை இல்லை. இரண்டு நாள் எப்படியோ தள்ளியாச்சு.

குழந்தைகளுக்கு நாளையிலிருந்து கொடுக்க ஒண்ணுமில்லை. புரோக்கர் ரவி வந்து கூப்பிட்டார்.
கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டறது, தோரணம் கட்டறது, கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது கொடிகள் நடுவது இதெல்லாம் அவர்தான் காண்டிராக்ட்.
அவனுடைய தலைவருக்கு எதிரிக் கட்சிக் கூட்டமாம்.
ஊர்வலம், பொதுக்கூட்டம் இரண்டு நாள் வேலை
சாப்பாடு, போஸ்டர் ஒட்டுக் கூலி தனி.
எல்லாம் சேர்ந்து 2000 ரூபாய் வரும்.

ஆனா மனசு கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்தான்.
பிச்சை எடுத்தாலும் இந்த கேவலமான வேலையை செய்ய மாட்டேன் என்றவனை நாய் வித்த காசு குறைக்கவா செய்யும்.
குடும்பத்தை,புள்ளயைப் பாரு என்று செல்லாயியும், ரவியும் கரைத்தனர்.
சரி வேற வழியில்லாமல் சம்மதித்து அட்வான்ஸ் இருநூறு ரூபாய் வாங்கியாச்சு.

ராவெல்லாம் கொசுக்கடியில் போஸ்டர் ஒட்டி முடிச்சிப்படுக்கும் போது மணி மூணு. காலையில ஆறு மணிகெல்லாம் பச்சைத்தண்னியை குடிச்சிட்டு, துரைப்பாக்கத்திலிருந்து தி. நகர் வந்து காத்திருந்தான்.



ஆட்டு மந்தை மாதிரி லாரியில் நூறு பேரோட ஏற்றிவிட்ட கட்சிக்காரர் ஆளுக்கு ஒரு சுலோக நோட்டீஸ் தந்து எப்படி சொல்லவேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். வழியேற வாழ்க ஒழிக கோஷம் போட்டபடி பயணம். ஆனால் தலைவர் ஒழிக மட்டும் சொல்ல மனசு இடந்தரவில்லை.

யாராவது சிலரோடு பேசிப் பார்க்கலாமே என்றால் அவர்களில் யார் கட்சிக்காரர், யார் தன்னைப்போல கூலிக்கு வந்தவர்கள் என்று தெரியவில்லை.எதாவது பேசப் போய் தன்னிலை மறந்து பேசிட்டால் பிரச்சனை வருவது மட்டுமில்லாமல் அடிவேறு கிடைக்கும். அதனால் ஒண்றும் பேசவில்லை. விவரம் விசாரித்தவர்களிடம் ரவி அண்ணன் ஆள் என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

மத்தியானம் வரைக்கும் ஒண்ணுமேசாப்பிடதரவில்லை.
அப்புறம் ஒரு பிரியாணி பொட்டலமும், தண்ணி பாக்கெட்டும் கிடைத்தது.
மறைமலை நகர் பக்கத்தில் இறக்கிவிட்டனர்.அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கூட்ட மேடை வரை ஊர்வலம். ஊர்வலம் தொடங்கி முக்கால் மணி நேரமாயிற்று. அரை குறைச் சாப்பாடு,
முந்திய நாள் தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது. போதாத குறைக்கு பிடிக்காத கட்சி வேறு. திடீரென முன்னால் எதோ குழப்பம்.
எதிர் திசையில் கூட்டம் ஓடிவர தள்ளு முள்ளு. என்ன ஏதுன்னு தெரியதுக்குள்ள முருகேசனை நெடித்தள்ளியது கூட்டம்.


அடித்துவந்த வெள்ளம் மாதிரி தள்ளாடியபடி ஓடத்தலைப்பட்ட முருகேசனை மிதித்தபடி முன்னேறியது கூட்டம்.

காலையில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் முருகேசன் மற்றும் ஐம்பது பேரின் மரணம் தலைப்புச் செய்தியானது. கூட்டம் நடக்கவில்லை என்றாலும் அந்த தலைவர் மறு நாள் முருகேசன் வீட்டிற்கு ரவியோடு வந்து ஆறுதல் சொன்னார். இறுதிச் செலவுக்கு இரண்டாயிரம் தந்தவர், விரைவில் ஒரூ லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து தருவதாக வாக்களித்தார்.

கட்சி ஆபிசுக்கு ரவி அண்ணனுடன் பலமுறை அலைந்து விட்டாள். அங்கே கட்சி உறுப்பினர் அட்டை கேட்டனர்.

செல்லாயிக்கு இரண்டு வருடத்திற்குப் பின் கட்சி தர இருந்த ஒரு லட்சம் ரூபாய் அவன் வேற கட்சி என்பதால் கிடைக்காமலேயே போனது.
ரவி புரோக்கரின் நிரந்தர ஆட்கள் பட்டியலில் செல்லாயி சேர்க்கப்பட்டு இப்போது இரண்டாண்டுகள் முடிந்து விட்டது. மாதம் நான்காயிரம் சம்பளமாம்.
கூட்டத்திற்கு தலைவர்கள் பெயர் வைக்க பிள்ளையோடு வேண்டுமாம். இதெல்லாம் முருகேசனின் நண்பன் பாண்டி நாலு நாள் முன்பு வீட்டில் வெள்ளை அடிக்க வந்த போது சொன்ன தகவல்.

Sunday 22 May 2016

எரிந்து போன நினைவுகள்

அடர்ந்த மூங்கில் காடு ஊடாக வீசும் வெப்பக் காற்றாக என் மனத்தில் உன் நினைவுகள்.

உரச உரசப் பற்றி எரிந்தது மனம்.

எரிந்து வெந்தடங்கிய காட்டில் தப்பித்த உயிர்களின் மரண ஓலமும், கூச்சலுமாய் கலவரமானது.

நெருப்புக்குக் காரணம் மூங்கிலா காற்றா?

இரண்டுமே இல்லையா?

அல்லது இரண்டுமேதானா?

புரியவில்லை.

எரிந்து சாம்பலான அத்தனையும் துளிர்க்க உயிர்க்க வழியில்லை.

காற்று எப்போதும் உயிர்த்தே இருப்பது இயற்கையின் நியதி.

மேகத்தைக் குளிர்வித்து பொழியும் மழையாக நீறுபூத்த நெஞ்சத்து நெருப்பை அணைக்க வருவாயா? இல்லை,

மேகங்களின் பளபளக்கும் கத்திச் சண்டை மின்னல்களையும், இடிக்குரல் முழக்கங்களையும் ரசித்தபடி என் நிலை மறந்து கடந்து செல்வாயோ?

எப்படி என்றாலும் உன் நெற்றியில் எரிந்த என் மனச் சாம்பல் பூசு.

முடிந்தால் சாம்பலை அள்ளிச் சென்று கங்கையில் மழை பொழிந்து கரைத்து விடு.

அதுவே நீ தரும் பரிசென அமைதியடையும் என் ஆன்மா.



காற்று

காற்று நல்ல கரைப்பான்.
எத்தனையோ கோடானு கோடி வாரத்தைகளை அது கரைத்துள்ளது.

காற்று நல்ல மறைப்பான்
எத்தனை பேர் பேசிய வாரத்தைகளை மறைத்து வைத்திருக்கிறது.

காற்று உண்மையான சோஷலிஸ்ட்.
மதம், இனம்,சாதி, ஏழை,பணக்காரன் என்று பேதம் பார்க்காமல் அன்பாகத் தழவுகிறது.

காற்று கண்ணுக்குத் தெரியாத காலன்.
எத்தனை நோய்கள் பரப்புகிறது.

காற்று ஒரு அப்பாவி.
அதற்குத் தெரியாது எது செய்தி,எது வதந்தி என்று.

காற்று ஒரு நல்ல காவல்காரன்.
சூரிய ஒளியை சோதித்து புற ஊதாகதிர் களைந்தே அனுமதிக்கிறது.

காற்று ஒரு மாயக்காரன்.
ஒன்றுமில்லா வெளியை நீலநிறமாய் காட்டும் மாயக்கலை அறிந்தது.

காற்று நல்லதொரு பொறுமைசாலி.
குப்பைத் தொட்டியாக எண்ணி எத்தனை வாயுக்களை தினமும் அதில் கொட்டுகிறோம்.

காற்று நல்ல தேசாந்திரி.
எத்தனை நாடுகள் வழியே பயணம் செய்கிறது.

காற்று நல்லதொரு குரு.
மேகங்களை அழகாக வழி நடத்தி மழை பொழிய வைக்கிறது.

அங்கே காற்றடிக்கிறதென்றால் அதிர்ஷ்டம்.
அங்கே காற்றாடுகிறதென்றால் துரதிருஷ்டம்.

காற்றே உயிர்.

காற்றே இசை.

காற்றே வாழ்வு.

பஞ்ச பூத காற்றே வணங்குகிறேன்.

புத்தனின் உறக்கம்


பொம்மை வியாபாரியின் நான்கு குழந்தைகளுடன் விளையாட கொள்ளை விருப்பம் புத்தனுக்கு.

விளையாடிய களைப்பில் உறங்கப் போயின குழந்தைகள்.

குடிசை வீட்டில் வைக்கோல் படுக்கையில் மீண்டும் மோனதவத்தில் ஆழ்ந்தான் புத்தன்.

காலையில் வியாபாரி சந்தைக்கு வந்தவன் இலை உதிர்த்த அரச மர அரைகுறை நிழலில் வித விதமான புத்தர் பொம்மைகளை கடை பரப்பினான்.

வெயிலில் உட்காரந்த புத்தன் ஆவலுடன் விளையாட ஆரம்பித்தான் வியாபாரியின் குழந்தைகளுடன்.

குடை நிழலில் இருந்தும் வியர்த்துப் போய் இருந்தான் வியாபாரி.

காரில் வந்த செல்வந்தர் புத்தன் சிரிப்பில் மயங்கி கையால் தலையைத் தாங்கியபடி இருந்த புத்தனை நல்ல விலை தந்து வாங்கினான்.

புத்தனுக்கு விளையாட்டை நிறுத்தவும் குழந்தைகளைப் பிரியவும் மனமில்லை.

செல்வந்தரின் வீட்டு குளிர் பதன வரவேற்பறையில் கண்ணாடி கதவுடைய காட்சிப் பெட்டியில் தனிமையில் கௌதமன்.

வெயில் இல்லை லேசாக குளிர்ந்தது என்றாலும் புழுக்கமாக இருந்தது கௌதமனுக்கு.

சந்தைக்கடை சத்தமோ குழந்தைகள் கூச்சலோ இல்லை ஆனாலும் மனம் அமைதியாக இல்லை புத்தனுக்கு.

இருப்புக் கொள்ளாத கௌதமன் மெதுவாக வந்து வியாபாரி வீட்டில் வைக்கோல் படுக்கையில் படுத்து மோனத்தில் ஆழ்ந்தான்.

கண்ணாடி காட்சிப் பெட்டியில் பொம்மை அலங்காரமாக இருந்தது.


5 மூன்று வரிக் கவிதைகள்.

1) நல்லது, கெட்டது என்று கண்டது எல்லாவற்றையும் பறந்து பறந்து கொத்தித் தின்றபடி இருந்தது மனக் காக்கை.



2) விலங்காகச் சீற்றத்துடன் அலைந்து உடலாலும், மனதாலும் வேட்டையாடிக் கொன்று தின்றவற்றின் எச்சங்களின் அழுகல் நாற்றமும் உறுத்தும் நினைவாய் எலும்புகளும் நாசியை நிறைத்திருக்கும் மரணத்தின் வாசனை

3) மனதில் விதைக்கப்பட்ட வாழ்வின் நிகழ்வுகள் உறங்கிக் கிடக்க,
ஏதோ ஏமாற்றத்தில் கண்ணீர் மழையில் காலம் அனுபவ மண்வெட்டியால் தாறுமாறாய் வெட்டிய வரண்ட ஓடைகளில் உப்பு தண்ணீர் ஓடியதில் கருப்பும் வெளுப்புமாய் முகத் தோட்டத்தில் முளைக்க ஆரம்பிக்க புன்னகைப் பூ மலர்வது நின்று போனது.




4) பிறந்த போது கையில் கட்டியிருந்த அடையாளச்சீட்டு,
ஓடிக் கொண்டிருந்த மூச்சுக் காற்று நின்று போன பின், ஆறுக்கு நான்கு குளிர் பெட்டியில் கால் கட்டை விரலுக்கு மாறிப் போனது
வாழ்ந்த வாழ்வுக்கு ஆதார் அட்டையா அல்லது விலைச் சீட்டா என்று புரியவில்லை.