Saturday 10 March 2018

முகநூல் கிறுக்கல்கள் - 10


1) எத்தனை வயதாகி விட்டது 
இருந்தாலும் பாருங்களேன் 
இந்த கிழட்டுக் காலத்தை
துளியும் வெட்கமில்லாமல் 
கடிகாரத் தண்டுல் அமர்ந்து
சிறு பிள்ளையைப் போல ஊஞ்சலாடுகிறது.


2) உருட்டும் விழியோ, ஓங்கிய அரிவாளோ
இன்றி சிரித்தவாறே மிரட்டின
வெண் சட்டைப்பையில் அரசியல் தெய்வங்கள்.


3) நடைபாதை குடிசை வீடு
கூரை 15×10 ஃப்ளக்ஸில் 
"அனைவருக்கும் இல்லம்".


4) தலைக்கவசம் அணியாதவரை 
துரத்திச் சென்ற காவலர் அவசரத்தில்
தலைக்கவசம் அணியவில்லை.


5) இந்த காலம் ஏன் இப்படி கனக்கிறது.
எத்தனை கோடி பேர்களின் உழைப்பு
தேவைப்படுகிறது சற்றே நகர்த்த.


6) என்ன ஆயிற்று இந்த வெள்ளை
ஒளிக்கு? இப்படி மேகத்தைக் கண்டதும்
ஏழு வண்ண சிறகு விரித்து மயிலாகி விடுகிறதே.


7) ஆழ்மனத்தின் அம்மணம்
மூடி மறைக்கும் ஆயத்த ஆடை
உபசார வார்த்தைகள்.


8) சாலையோரம் நிர்வாணமாய் செத்துக்
கிடந்தவனை உற்சாகமாக வழியனுப்ப 
வழியேற ஆறுக்கு நாலு கட்சிக் கொடிகள்.


9) கறுப்பையும் வெள்ளையையும்
மறைத்துக் கொண்டன தடுப்புச்சுவரில்
ஒட்டிய தலைவர்களின் சுவரொட்டிகள்.


10) காலாகாலத்தில் வரச் சொன்னாள் தாய்,
காலா சுவரொட்டி ஒட்டியே காலம்
முழுவதும் கழிந்தது ரசிக மகனுக்கு.

11) பறவைகளைப் பறக்கவிட்டேன்
நிலமெங்கும் விருட்சங்கள்.
கூண்டில் அடைத்து வைத்தேன்
வீடெங்கும் நாறும் எச்சங்கள்.


12) அனுதினமும் ஹோலிதான்
வண்ண முகத்துடன் ஒடுகிறாள்
மகிழ்ச்சியின்றி அமராவதி.


13) பட்டினி கிடந்தவனின் தட்டில் 
அரசுகள் இட்ட அறுசுவை விருந்து,
புளித்துப் போன புள்ளிவிவரங்கள்.


14) மழலைகளின் அழுகுரல்
இறைவன் விண்ணில், இடையில் 
இரைச்சலுடன் போர் விமானங்கள்.


15) அழுத பிள்ளைக்கு அரவணைப்பு
அழாத பிள்ளைக்கு சுரீர் அடி
பிரசவ அறை மருத்துவர்.


16) மகிழ்ந்தனர் பாண்டியனின் 
ஊழல் அமைச்சர்கள்
மதுரையை கண்ணகி எரித்ததில்.


17) ஏகப்பட்ட ஆக்கிரமிப்பு கோவிலில்
புறநகரில் குடியேற 
ஆசைப்பட்டது தெய்வம்.


18) உரசி ஏரித்து விடக் காத்திருக்கும் 
எதிரிகள் இருபுறமும் வெளியே 
உறங்குது பெட்டிக்குள் தீக்குச்சிகள்.


19) கோவில் நிவேதனப் பொங்கலில்
கடவுள் தேடிய முந்திரிப் பருப்பு 
அதிகாரி வீட்டு பீங்கான் தட்டில்.


20) படுக்கையில் சிறுவர்கள் சண்டை
பஞ்சாக நீலவானில் பரவிக் 
கிடக்கும் மேகங்களின் ஓட்டம்.


21) ஒப்பனைக்கு தேர்வான 
பூசணிக்காய்க்கு வாய்த்தது
கண் திருஷ்டி அசுரன் முகம்.


22) கொக்கி போட்டு திருடாத
விளக்கு அலங்காரம்
இரவு வானில் விண்மீன்கள்.


23) கணவன் வரத் தாமதம்
கவலையுடன் மனைவி
ஆபத்தில் தொலைக்காட்சி நாயகி.


24) யூ ட்யூப் காணொலி பார்த்து
மகளுக்கு சேலைகட்டும் தாய்
அலுவலகத்தில் பாரம்பரிய உடைநாள்.


25) காலையில் பறக்கவிட்ட
விடுதலை நாள் வெண்புறா
மதியம் விருந்து மேசையில்.


26) குளிர் பதன அறையில் உறக்கம்
நடைபாதை வாசியின் ஆசை 
நிறைவேறியது சவக்கிடங்கில்.


27) அமைதியைத் தின்று 
தின்று வார்த்தைகள்
தடித்திருந்தன.


28) நாற்பதாண்டு கால சீரான ஓட்டம்
சில ஏழைகளின் வாழ்க்கை
வீராணம் குழாய்களில்.


29) அமைச்சர் பார்வையிட வந்த இடிந்து 
போன மயானச்சுவர், சுவரொட்டியில் 
"உங்கள் ராஜியம் சமீபமாயிருக்கிறது".


30) "நீ வருவாய் என நானிருந்தேன்" 
பின்புறத்தில் வாசகம்
இறுதிப் பயண வாகனம்.