Friday, 13 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (3)


காலக் கிழவன்

மெல்ல வினாடிக் கோலூன்றி
தட்டுத்தடுமாறி வினோதமான
மாரத்தான் ஓட்டத்தை ஓடுகிறது குட்டையும் 
நெட்டையுமாய் கால்கள் கொண்ட 
மாற்றுத்திறனாளி முதியவராய் காலம்.


 குழல் விளக்கு 

நான்கடி நீள கண்ணாடிக் 
குழாய்க்குள் யாருக்கும் 
தெரியாமல் ஒளிந்திருந்த
ஒளியை குழாயை விட்டு 
வெளியே தள்ளி விட்டு ஓடிக் கொண்டிருந்தது குறும்பு செய்த
சிறுபிள்ளையெனத் தன்னை
மறைத்துக் கொண்ட மின்சாரம்.


எறும்பூறல்

உறவுகள் கைவிட்டு மரித்துப்
போன தம் இனமில்லாத
சிற்றுயிர் உடல்களையும்
தேடிப்போய் இறுதி ஊர்வலம்
நடத்திக் கொண்டிருக்கின்றன எறும்புகள்.


 காகங்கள்

இருட்டில் திருட்டுத்தனமாக
எட்டிப் பார்க்கும் பிடிக்காத
நிகழ்வுகளான எலிகளை
அடித்துக் கொன்று தெருவில்
வீசியதும் கொத்திக்கொத்தி 
அருவெறுப்பூட்ட பறந்து
வருகின்றனவே நினைவுக் காகங்கள்.


நரை
  
கரும் பலகைத் தலையில்
சிக்கலான வாழ்க்கைப் பாடத்தை
புரிய வைக்க அனுபவ சாக்குக்கட்டி
கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக காலமென்ற
பேராசிரியர் எழுதியதோ நரைமுடிகள்?


பூமி

யார் சாப்பிட வேண்டி 
இந்த பூமியை சூரியனின்
சூட்டில் ஓய்வின்றி விடாமல்
சுழற்றிச் சுழற்றி வாட்டுகிறார்கள்
அசைவ உணவு விடுதியில்
மாமிசத்தை தீயில் வாட்டுவது மாதிரி.பதாகை

கொட்டிய ஊழல் மழையில்
லஞ்சப் பணம் சாலைகளில்
12 ' ×10 ' பதாகைகளாக
பூதாகரமாக வளர்ந்திருந்தது.

Tuesday, 10 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (2)

மண் உறுத்தாத சிப்பிக்குள்
முத்தும் 
தோல்வி உறுத்தாத காதலுக்குள்
கவிதையும்
உருவாவதே இல்லை.தேரிக் காட்டு செம்மண் 
சாலையில் வேகமாகச்
செல்லும் வாகனங்கள் நொடிப்
பொழுதில் எழுப்பிய புழுதி
மெல்ல மெல்ல அடங்குவது போல
யாரோ சொன்ன தொடர்பற்ற
ஒரு வார்த்தை கிளப்பிய
விரும்பாத நினைவுகள் மீண்டும்
அடங்க அதிக நேரம் பிடிக்கிறது.ஏறிப் பயணம் செல்ல வேண்டிய
பேருந்து தவிர்த்து பிற எண்
பேருந்துகள் வருவதொத்து
அவள் கனவுவர வேண்டி
துயின்றவனின் கனவில்
வரிசை கட்டி வந்தன
விரும்பாத வேறு பல கனவுகள்.கானல் நீரில் வானவில்
தூண்டில் இட்டு விண்மீன்
பிடிக்கத் தகுந்த கொழுத்த புழு
இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.பனிக்கால குளிருக்கு
அடக்கமாக எச்சில் கூடு
சுற்றிக்கொண்டு
உறங்கிய புழுவிற்கு
மனிதன் சுடுநீர்க் குளியல் 
தந்து மீளா உறக்கத்தில்
ஆழ்த்தி போர்வையை
தந்திரமாக அபகரித்தான்.கேளிக்கை நடன விடுதியில்
மேலாடைகளை ஒவ்வொன்றாகக்
களைந்து சுழற்சி வீசி வீசி
சுவாரசியத்தைக் கூட்டும்
நடனமாதாக வாழ்க்கை 
ஒவ்வொரு நாளாகக் களைந்து கொண்டு 

வந்து கிளர்ச்சியூட்டி
சற்றும் எதிர்பாராத ஒரு கட்டத்தில்
திடிரென்று முடிந்து விடுகிறது.


அவள் கனவிற்குள் தான்
வந்தது தெரியாமல்
செல்பேசியில் அவள்
முகநூல் பக்கத்தில் நட்பு
அழைப்பு தந்து கொண்டிருந்தான் அவன் .வாயால் 'உஷ் உஷ்' என 
எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும்
மறு நிமிடமே பேசத் துவங்கும் 
சிறுவகுப்புக் குழந்தைகளாக 
துணி துவைப்பவர் 'ஸ் ஸ்' என்று 
வாய்க்கு வாய் எவ்வளவு முறை 
அடக்கினாலும் துணியாலும் பாறையாலும் 
சப்தம் போடாமல் இருக்கவே முடியவில்லை.


போலீஸ் இல்லாத பாதசாரிகள்
கடக்கும் இடத்தில் சாலையை
மிகுந்த பிரயாசையுடன் கூட்டத்தோடு 

கூட்டமாக கடக்க யத்தனிக்கும் 
முதியவரை இரக்கமே இல்லாமல் 
படு வேகமாக ஒலிப்பானை உரக்க ஒலித்தபடி
 மோதுவது போல வரும் பேருந்துக்கு கொம்பு 
இருக்கிறதோ இல்லையோ ஓட்டுநர்களுக்கு 
நிச்சயமாக இருக்கிறது.


விண்வெளி மெத்தையில் 
உறக்கம் வராமல்
புரண்டு புரண்டு
படுத்திருக்கிறது பூமி.ஒரு உடல் நீங்கி மறுஉடல்
என்று உடல்களில் நுழைந்தும்
நீங்கியும் பயணிக்கிறேன்
வித விதமாய் உடல்கள்
எனக்கு எதுவுமே சரியாக இல்லை
தூரதூரமாய் வெளிச்சம்
காலில் ஏதோ குத்திய வலி
குனிந்து ஒருகால் உயர்த்தி
கையால் பிடுங்கிப் பார்த்தேன்
உடைந்த நட்சத்திரத்தின் எச்சம்
தூக்கி அதனை ஏறிந்த போது பிரபஞ்சத்தின் 

எல்லை வந்துவிட்டது.
இன்னும் ஒருயுகம் திரும்பி நடக்க 

சலிப்பாக இருக்கிறது என்றால்
தற்கொலை செய்து கொள்ள
அண்ட வெளியில் எங்கே குதிப்பது?Saturday, 25 March 2017

முகநூல் கிறுக்கல்கள் (1)

(1) பறவையின் பாதை
கடற்கரை மணலில் நடந்த மனிதனின்
காலடித் தடங்களை ஓடி வந்து அழிக்கும்
அலையாக பறவைகளின் தடத்தை
அழித்து விளையாடுகிறது
மெலிதாய் வீசும் காற்று.

(2) விருட்சப் பாதை 
தான் பறந்த பாதையை
காற்று அழித்து விடும்
என்பதை அறிந்த பறவைகள்
வழியறிய புவி மீது விருட்சங்களை
விதைத்தபடி செல்லுகின்றன.

(3) பாதை தெரிந்தவன்
காற்றைக் கண்ணால் காணும்
வித்தை அறிந்தவனுக்கு வானில்
பறந்த பறவைகளின் பாதையைக்
காண்பதும் சாத்தியம் தான்.

(4) வாதை 
வலியோ வேதனையோ இல்லாது 
உறக்கத்தில் மரணம் யாசித்த 
இருதய நோயாளிக்கு இறைவன் 
மனமிறங்கி சர்க்கரை நோயையும் 
கூடுதலாக அருள்பாலித்து நிறைவேற்றினான்.

(5) படப்பிடிப்பு
தினம் டைரக்டர் யமதர்மனிடம் திட்டு 
வாங்குவதே வாடிக்கையாப் போய்விட்டது. 
இந்த மனிசங்க சரியாக நடிக்காமல் 
எத்தனை டேக் வாங்கி நம்ம உயிரெடுக்கிறாங்க 
என்று சித்திரகுப்த மேனேஜரிடம் 
புலம்பிக் கொண்டிருந்தாள் நித்திரா தேவி, 
உணவு இடைவேளையில்.

(6) கணக்கு நோட்டு
என்ன இது? 
பாபக் கணக்கை எல்லாம் 
புண்ணியக் கணக்கு நோட்டில்
தலைப்பை மாற்றி எழுதி
எடுத்து வருகிறாய் என்ற 
எமதர்மனிடம் பாபக் கணக்கு நோட்டுகள் 
விரைவில் காலியாகி விடுகிறது. 
புண்ணியக் கணக்கு நோட்டுகள் 
பல அப்படியே எழுதப்படாமல் காலியாக 
உள்ளன என்றான் சித்திரகுப்தன்.

(7) உறக்கம் 

எத்தனை மணி நேரம் 
எத்தனை நாள்
எத்தனை முறை 
ஒத்திகை 
கண் இமைக்கும்
கண நேர மரணத்திற்கு.

(8) வர்ண ஜாலம்

பெருமழை பெய்த நாளின்
பின் மதியப் பொழுதொன்றில்
வழுக்கும் சேற்று சாலையில் 
பொத்தல் விழுந்த குடை ஒருகையிலும் 
மறு கையில் சீமெண்ணைப் போதலுமாய் 
நடந்து வந்த அந்த ஏழைச் சிறுவன் 
கால் வழுக்கிய கணத்தில் 
கை தவறி உடைந்த போத்தலில்
மிகுந்த சிரமத்திற்கிடையே 
வாங்கி வந்த மண்ணெண்ணைய் 
சேற்று நீரில் காட்டிய வர்ணஜாலத்தை 
ரசிக்க முடியவில்லை.

(9) உயிர்ப்பயணம்

அண்டவெளியில் உயிர்களின் வாழ்க்கைப் பயணம் 
முடிவற்ற பயணத்தின் பல கட்ட ராக்கெட்டாக பூத உடல்கள்
ஒவ்வொரு கட்டமாக ராக்கெட்டுகள் இறப்பில் கழன்று விழ
முன்னேறும் பயணத்தில் அதிவேகமாக எரிந்தவாறு வெளியேறிக் கொண்டிருக்கிறது கணநேரமும் நில்லாத காலமெனும் எரிபொருள் 
செயற்கைக்கோள் பளுவாக ஏற்றிச் செல்லும் ஆன்மா 
எரிபொருள் தீர்ந்து இந்திரிய இன்பமெனும் 
வட்டப் பாதையில் நிலை பெற்று விட்டால் 
அதில் உழன்றபடியே சுற்றிச் சுற்றி வந்தழியும்
ராக்கெட்டை செலுத்தியவனையும் செல்லுமிடத்தையும்
அறிதலே வாழ்வின் பொருள் என்பதுணர்ந்த ஆன்மா 
கல்பகோடி காலத்தில் தானாகவே
அண்டமாகிப் போகிறது.

(10) இரட்டை வேடதாரிகள்
அன்னையர் அனைவரும் தெய்வம் என்று ஒருபுறம் சொல்லி 
விலைமகள் என்று மறுபுறம் எள்ளி 
இரட்டைவேடமிடும் வெட்கம் கெட்ட 
கேவலமான சமூகம் 
வரப்போகும் யாரோ ஒருவனுக்காக நள்ளிரவிலும் தன்னை அழகு படுத்திக் கொண்டு 
கதவு திறந்து காத்திருக்கும் பாலியல் தொழிலாளி நிலைக்கு 
தன்னையும் ஆக்கி விட்ட வேதனையிலும்
அந்தகைய கேடு கெட்ட மனிதர்களுக்கும் அலங்காரமாய் 
ஆசி வழங்க ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் 
நடு இரவில் ஆலயங்களில் செய்வதறியாமல் பரிதாபமாக நின்றன 
சிலையாகிப் போன பெண் தெய்வங்கள்.

(11) முதிர்ச்சி
அந்த கூட்டத்தில் இலக்கிய மழையில்
நனைந்து வீடு திரும்பிய இளைஞனின்
தலை நரைத்துப் போய் இருந்ததது.

 (12) விதி 
வண்டி இழுத்த போது அடிவாங்கிய
மாட்டின் தலைவிதி இறந்தும்
இன்னும் பலமாக மேள வாத்தியத்தில்
வாங்க வேண்டும் என்று எழுதியிருந்தது.

Friday, 18 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (10)

(91)
"அண்ணே, ஒரு சந்தேகம்ணே"
"சீக்கிரம் கேட்டுத் தொலைடா"
"ஒரு நாட்டில கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டாமல் வேற நாட்டுக்கு ஓடிப் போயிட்டா அவிங்க கடனை வராக் கடனா தள்ளுபடி பண்ணிடறாய்ங்க. உலக வங்கியில் கடன் வாங்கிட்டு கட்டாமல் எங்கேண்ணே போகணும்"?(92)
"அந்த ஆளுக்கு அடிக்கடி நிறைய கடன் கொடுத்தீங்க . இப்ப வாங்கிய கடனை கட்டாமல் ஓடிப் போயிட்டான். இப்படி கடன் வாங்கும் போது செக்யூரிட்டி பார்த்தீர்களா"?
"ஆமாம் சார். ஒவ்வொரு தடவை கடன் வாங்க வரும் போதும் அவரு கூட யூனிபார்ம் போட்ட 10 செக்யூரிட்டிகளை கூட்டிக்கிட்டு வருவார், நாங்க பார்த்திருக்கோம் சார்".(93)
"அண்ணே, கல்யாணத்திற்கு இரண்டரை இலட்சம் பணம் தராங்களாம்".
"அதுக்கென்னடா இப்போ?
"ஒரே நேரத்தில் ஒரே மேடையில் நம்ம கட்சித் தொண்டர்கள் 1000 ஜோடிகளுக்கு நீங்க தலைமை தாங்கி மெகா திருமணம் பண்ணி வச்சு ரொம்ப நாளாச்சே, அதான் நெனப்பூட்னேன்ணே".(94)
"அடுத்த சென்மத்தில நாம எல்லாம் பாக்டீரியா, வைரஸ் இப்படித்தான் பொறக்கப் போறோம்ணே".
"அதெப்படிடா பெரிய தீர்க்கதரிசியாட்டும் சொல்லற"?
"அதுன்ணே ஒருத்தருட்ட கடன்பட்டா இல்லாட்டா கடன் கொடுத்து ஏமாந்தா அடுத்த பிறவியில பிள்ளையா பொறந்து கடன கழிக்கணுமின்னு கேள்விப்பட்டேண்ணே. 63 பேருக்கு இத்தனை கோடி ஜனங்க பிள்ளையா பொறக்க இது தவிர வேற வழியில்லையேண்ணே".(95)
"என்னப்பா உங்க வீட்டு கிட்ட இரவில் திருட்டு நடக்குது பயமாக இருக்கும் என்று சொன்னாயே. இப்ப எப்படி இருக்கு"?
"போன மாசம் ஒரு ATM திறந்தாங்க இப்போ 10 நாளா இரவும், பகலும் 24 மணி நேரமும் எப்படியும் 50 பேர் நிற்கிறாப்டி, பயமே இல்லை".
(96)
"ஏணுங்க அந்த ATM ல் பணமே வரவில்லையே. அப்புறம் எதுக்கு அதுகிட்ட ஒருத்தரு ATM அப்படின்னு போர்ட் போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்காரு"?
அவரு 'ஆறுதல் டெல்லிங் மேன்'னாம். பணம் எடுக்க வரவங்களுக்கு ஆறுதலா தோளில் தட்டிக் கொடுத்து அனுப்புவாராம்".(97)
" ஏணுங்க அந்த பேங்க்கில் ஒரு கவுண்டரில் கிளார்க்கும் இன்னொரு கவுண்டரில் ஒரு வஸ்தாத் பயில்வானும் உட்கார்ந்து இருக்காங்களே ஏன்"?
"கிளாரக் 'வாடிக்கையாளர் சேவை'க்கும், பயில்வான் பிரச்சனை பண்ணும் 'அடாவடிக்கையாளர் சேவை'க்கும் அப்படின்னு பிரிச்சிட்டாங்களாம்"(98)
"வாடிக்கையாளர் சேவை மையத்தில் 500 ரூபாய் பணம் மாற்றப் போன என்னை நல்லா ஏமாத்திட்டாய்ங்க அண்ணே".
"என்னடா உன்னையா ஏமாத்திட்டாய்ங்க? எப்படி டா".
"உள்ளே போனா விதவிதமா இடியாப்பம் சேவை விற்பனையாம்.லெமன் சேவை மாதிரி 20 வகை சேவை 500 ரூபாய் ன்னு பாரசல் பண்ணி தலையில கட்டிட்டாய்ஙகண்ணே ".(99)
"அண்ணே கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வர சூப்பர் ஐடியா எல்லாம் வைச்சிருந்தேன். ஆனா யாரும் என்னை மதிக்கலை. இப்ப கஷ்டப்படறாங்க".
"இவரு பெரிய பொருளாதார வல்லுநர், பிளான் சொல்லப் போறாரு. சரி சொல்லு"
"அது ஒன்னும் இல்லண்ணே. 50000 ரூபாய் நோட்டுங்க அடிச்சி எவ்வளவு வேண்டுமின்னாலும் 500,1000 ரூ நோட்டு கொடுத்து மாற்றிக்கலாம் என்று சொல்லி இருந்தா, சைலன்டா மாற்ற வர ஆளுங்க மாத்தின பின்னால் 2 மாதம் கழித்து அந்த 50000 ரூபாய் நோட்டெல்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டிருக்கலாம்ணே".


(100)
"அண்ணே நாளைக்கு மூத்த குடிமக்கள் மட்டுமே பணம் மாற்ற முடியுமாம்.
"அதுக்கு இப்ப என்னடா. அத்த எதுக்கு என்கிட்ட சொல்ற"?
"நாளைக்கு பணம் மாத்த கொள்ள நம்ம கட்சியின் 
இளைஞர் அணிச் செயலாளர்களா பொறுப்பில்  இருக்கிற வட்ட, நகர, பேரூர், ஒன்றிய, மாவட்ட, மாநில   பெரிசுங்க யாரும் கண்டிப்பாக பேங்க் பக்கம் போகாம இருக்கிறது மாதிரி பாத்துக்கிடுங்க".
Like
Comment


Wednesday, 16 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (9)

(81)
"அண்ணே நீங்க சொன்ன மாதிரி வருமான வரிக் கணக்கை தாக்கல் பண்ண முடியாதாம். தப்பா இருக்காம்ணே. ஆடிட்டரு போன் பண்ணிச் சொன்னாரு".
"அப்படியா, என்ன பிரச்சனையாம்? கேட்டியா".
"அதான்ணே சின்னக்காவிற்குக் கொடுத்ததை எல்லாம் செகண்ட் ஹவுஸிங் இன்ட்ரெஸ்ட்டா காட்டக் கூடாதாம்ணே".(82)
"நீங்க ஆபீசருக்கு மாமூல் கொடுத்துட்டீங்கதான் ஒத்துக்கிறேன். அதுக்காக அவர் விரலில் அழியாத அடையாள மை வைப்பேன் என்கிறதை எல்லாம் ஏத்துக்க முடியாது சார்".(83)
"அந்த ஆலமரத்தடி இட்லிக் கடை ஆயாவை 200 ரூபாய் தரோமின்னு கூலி பேசி வரிசையில் நிக்க வைச்சு பணம் வாங்க கஷ்டப்பட்ட மாதிரி பேசச் சொல்லி பேட்டி எடுத்தமே, அத நம்ம கட்சி டீவியில் போட வேண்டாமாம், தலைவர் சொல்லிட்டாராம்".
"ஏணுங்கண்ணே, எதனாலயாம்ணே"?
"அந்தக் கிழவி 400 ரூபாய் வாங்கிக்கிட்டு எளிதாக இன்னிக்கே மூணு தபா பணம் வாங்கிட்டதா எதிரிக் கட்சி டீவிக்கும் பேட்டி கொடுத்ததாம்".(84)
"என்னடா முனியா, ஊருல்ல உள்ள எல்லா பேங்கிலும் கடன் வாங்கிட்டு ஓடிப் போயிடலாம் அப்படின்னு எப்படி அவ்ளோ தைரியமாய்ச் சொல்கிறாய்"?
"நம்ம ஊருத் தலைவர் அதை எல்லாம் பேங்க் ஆளுங்க கிட்ட சொல்லி வராக்கடனா தள்ளுபடி பண்ணிடலாம் கவலைப் படாதே, எத்தினி கோடியானாலும் நான் பார்த்துக்கிறேன் என்று உறுதி சொல்லிட்டாரு".


(85)
"நம்ம ஆயாவை வரிசையில நிக்க வைத்து பேர் வாங்கறது நமக்கு செட் ஆவாதுன்னு சொன்னா நீங்க கேட்கவில்லை".
"ஏண்டா, செய்தி பேப்பரில் மொத பக்கத்தில் வரலையா"?
"கொட்டை எழுத்தில மொத பக்கத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 'கருப்புப் பணத்தை மாற்ற வயதான தாயை கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து கொடுமை' அப்படின்னிட்டு போட்டிருக்காய்ங்கண்ணே".
(86)
"மேனேஜர் சார் எனக்கு உங்க பேங்கில் கடன் தர வேண்டும்".
"சார், நீங்க ஏற்கெனவே கடன் வாங்கி கட்டாமல் பாக்கி வைச்சிருக்கீங்க. ஏன் கட்டவில்லை"?
"அடுத்த வாரம் கட்ட நினைத்திருந்தேன். அதுக்குள்ள பணம் செல்லாதுன்னு ஆயிடுச்சா. செல்லாத பணத்தை கொடுத்தால் தாயா புள்ளையா பழகின உங்களை ஏமாற்றின மாதிரி இல்லையா. அதுதான் கட்டவில்லை சார்".(87)
"அண்ணே கருப்புப் பணத்தை அடியோடு சிம்பிளா ஒழிச்சிடலாம்ணே"
"டேய், என்னடா புதுசா கரடி விடறயா"?
"ஆமாண்ணே. பனாமா, சுவிட்சர்லாந்து நாடுகளோட அதிபர்கள் கிட்ட பேசி அவிங்க நாட்டு நோட்ட மதிப்பிழக்க வைச்சிட்டா பிரச்சனை தீரந்திடுமேண்ணே".(88)
"சார் நான் டிஸ்டிலெரி ஆரம்பித்து ஜின் வகை மது தயாரிக்கப் போறேன். கடன் கிடைக்குமா சார்"?
"கிடைக்கும்,ஆனா அதற்கு மார்ஜின் காட்ட வேண்டும்".
"அவ்வளவு தானே சார். அந்த 'குயின் ஸ்பேரோ' கம்பெனி மாதிரி காலண்டரில் தாராளமாக மார் ஜின் விளம்பரத்தில் காட்டிடறேன்".(89)
"சார் அந்த பாரோயர்(Borrower) பயங்கர விவரமா இருக்காரு".
"அப்படியா, எஹை வைத்து அப்படிச் சொல்லறீங்க"?
"பின்ன என்ன சார் லோனுக்கு விண்ணப்பம் பண்ணும் போதே வாராக் கடன் புக்கில வரவு வைச்சிடுங்க. எதுக்கு இரட்டை வேலை. உங்க வேலைப்பளு குறையும் என்கிறார் சார்".


(90)"உங்க பாங்க்கில் கடன் வாங்க நிறையப் பேர் இரண்டு வரிசையாக பிரிந்து நிற்கிறாங்களே. ஏன் இரண்டு வரிசை சார் ? 
"அதில் ஒன்று சாதா வரிசை. அதுக்கு எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவா வைச்சிருப்பவர்களுக்கு. இதில் லோன் கிடைக்க தாமதம் ஆகும்.
மற்றது எக்ஸ்பிரஸ் கிரீன் சானல் வரி்சை. இதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போக பாஸ்போர்ட், விஸா,அடுத்த வாரத்தில் லோன் கிடைச்சதும் ஓடிப்போக விமான டிக்கெட் காட்டினால் போதும். உடனே சாங்ஷன் பண்ணிடுவோம்".Tuesday, 15 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (8)

(71)
"அவரு மோடி பொருளாதாரத்தின் கழுத்தை ஒரு திருகு திருகி விட்டு போனாலும் போனாரு அண்ணே,
இங்க 6 வது நாளா குவார்டர் பாட்டில் கழுத்து மூடி திருக முடியாத நாம சுய நினைவோட இருக்க வேண்டியதாப் போச்சேண்ணே".(72)
"அந்த கட்சியிலிருந்து 4058 வது வட்டச் செயலாளரை நீக்கிட்டாங்களே. அப்படி என்ன செய்து விட்டாரண்ணே"?
"அது ஒன்னும் இல்லடா, மண்சோறு சாப்பிட 5 லோடு பச்சை மண்ணு வாங்கியதா கணக்குக் கொடுத்தாராம்".(73)
"என்னடா சென்றாயா ஏண்டா இப்படி மூட் அவுட்டாகி மூலையில உக்கார்ந்திட்டே"?
"போண்ணே, புது 2000 ரூபாய் நோட்டில என் படம் போட்டிருந்தது ன்னு நினைச்சு ஆசையாக வாங்கிப் பார்த்தா எதோ சந்திராயனாமே அது படம் போட்டு இருந்திச்சண்ணே. அதான்ணே".(74)
"அண்ணே உங்கள மாவட்டச் செயலாளரா கட்சி அறிவிப்பு வந்திருக்காமே. இந்தான்ணே என் எளிய பரிசு பிடிங்கண்ணே".
"ஏண்டா ஸ்வீட்டிற்கு பதிலா உறுகாய் பாட்டில், லூசாயிட்டயா"?
"அதெல்லாம் இல்லண்ணே. உங்களுக்கு இனிமே அதிகார போதை தலைக்கேறிடும் அப்படின்னு கட்சியில பேசிக்கிட்டாய்ங்க".(75)
"கட்சியிலிருந்து நீக்கிட்டா என்னண்ணே, நாம 'மாற்ற முடியாமல் தவிக்கும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் சங்கம்' ஆரம்பித்திரலாம்ணே. அதில் பணம் செலவு பண்ணி தலைவராயிடலாம் அண்ணே".


(76)
" நேற்று 'பழைய காலுறை' தொலைக்காட்சியில் 'மறைந்து நின்று ஏசு' நிகழ்ச்சியில் என் பேச்சு எப்படி டா இருந்திச்சு"?
"தலைவரே நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா என்னதான் ஆவேசமா பேசினாலும் தூங்கும் கருப்புப் பண முதலையை இடறாதே என்றெல்லாம் பேசறது கொஞ்சம் ஓவர்தான்ணே".(77)
"கால மாற்றத்தில வர எல்லாம் தலை கீழா மாறிப்போச்சண்ணே".
"ஏன்டா, சொல்வதை கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேன்"
"அதுவான்னே, முன்னெல்லாம் 'எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச்' போன பல பேர் இப்ப 'எக்ஸ்சேஞ்ச் எம்பிளாய்மெண்ட்' க்கு போறாங்களே அத்த சொன்னேண்ணே".


(78)
"ஏண்டா மாரி, ஆன் லைன் பேங்கிங்தான் இப்பெல்லாம் பண்ணிட்டிருக்கேன் அப்படின்னு ஊர்க்குள்ள சொல்லிக்கிட்டு அலையறயாமே, எப்படா கம்பியூட்டர் எல்லாம் கத்துக்கிட்ட"?
"அட போங்கண்ணே, தினந்தினம் பேங்கில லைன்ல நின்னு நோட்டு மாத்திட்டு வரேனில்ல, அதை அப்படி பந்தாவா சொல்லிக்கிட்டேன்ணே".

(79)
"அந்த கல்யாண வீட்டில் சாப்பிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் கூப்பிட்டு இடது கையில் மருதாணி போடறாங்களே என்ன உபசாரம் என்ன உபசாரம்".
"அதெல்லாம் ஒன்றுமில்லை. யாரும் இரண்டாம் தடவை பந்திக்கு சாப்பிட வராமல் தடுக்க செய்த ஏற்பாடாம்".


(80)
"ஏண்ணே அம்மா, தம்பி, அக்கா, ஆயா, நைனா எல்லாரையும் பேங்குக்கு அனுப்பினீங்க. பேங்க் போயி மாத்த நாங்க  எல்லாம் இல்லை"?
"ஏன். அதில் என்ன சிக்கல்டா"?
"சிக்கல்லாம் இல்லண்ணே. எதிரிக் கட்சிக்காரங்கதான் கருப்புப் பண முதலையின் குடும்பம் நோட்டு மாற்ற தெருவில் நிற்கிறது ன்னு அவிங்க டீவி செய்தியில் போட்டு மானத்தை வாங்குறான்ணே".