Friday 30 September 2016

மன்னாதி மன்னன் - ஜோக்ஸ் (2)

(11) "அரண்மனையில் அந்தப்புரத்தைப் பழுது பார்க்க வந்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்தீர்கள் மன்னா"?

"இருபது சதவீதம் கமிஷன் கொடுத்தால் வழக்கமாக பழுது பார்க்காமலே பில் தருவேனே, அது போல இப்போதும் தந்தால் போதுமா என்கிறார் அமைச்சரே"


(12) "அமைச்சரே, பக்கத்து நாட்டு மன்னர் நம் தலைநகர் அருகே பல ஏக்கர் நிலம் வாங்கியுள்ளாராமே. இது எப்படி நடந்தது"?

"அது, நீங்கள் மைத்துனர் பேரில் செய்யும் ரியல் எஸ்டேட் பிசினஸில் அவர் பினாமி பேரில் வாங்கியிருக்கிறார் அரசே".


(13) "மன்னா உடனடியாக ஒரு இலட்சம் பேருக்கு இலவச சிம் கார்ட் வழங்கும் திட்டத்தை ஏன் அறிவிக்க சொன்னீர்கள்"?

"சீனியர் சிங்கர் சீசன் 15 வது போட்டிகளில் அரசியார் கலந்து கொள்ளப் போவதாக நேற்றிரவு சொன்னார், அமைச்சரே" 


(14) "தலைவரே, மணல் திருட்டை ஒழிக்க என்ன செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் சொல்ல"?

" சகாரா பாலைவனத்தை குத்தகைக்கு எடுத்து பிரச்சனைகளைத் தீர்க்க ஆப்ரிக்க 
நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும்"

 Picture courtesy : http://cinema.dinamalar.com







(15) "பாகிஸ்தானில் நடக்க இருந்த சரக்கு மகாநாட்டை ஒத்தி வைத்து விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் அங்கே சரக்கு கிடைக்கவில்லை என்றால் 
சரக்கு கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப் போராடுவோம்"

"அய்யோ, அது சரக்கு மாநாடு இல்லை தலைவரே அது சார்க் கூட்டமைப்பின் மகாநாடு"


(16) " ஊதிய உயர்வு கேட்டு அரண்மனை ஊழியர்கள் போராடப் போகிறார்களாம் மன்னா"

"அப்படியா, இனி அரண்மனை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை பாதியாக குறைத்து ஆணை பிறப்பியுங்கள். அதை ரத்து செய்ய போரடுவார்கள். இதை விட்டு விடுவார்கள்"

(17) "அமைச்சரே, அரசியார் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். உடனே தக்க ஏற்பாடுகள் செய்யுங்கள்"

"அடடா மன்னா, தமிழ் திரையுலகில் பேய்ப்பட சீசன் முடிந்து விட்டதாக ஆஸ்தான இயக்குநர் சொல்கிறாரே, இப்படி தாமதமாகச் சொன்னால் என்ன செய்வது"


(18) "அப்பப்பா ஒரே வெயில், புழுக்கம். பச்சைமலையில் இரண்டு வாரம் தங்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே"

"மன்னா, கிரானைட் காரர்களுக்கு ரகசியமாக விற்ற பின் இப்போது அந்த மலை உங்கள் சுவிஸ் வங்கியில் உள்ளது".

(19)  "மிக உயர்ந்த தொழில் நுட்ப ரகசியத்தைக் கடத்த முயன்ற அண்டை நாட்டு ஒற்றன் கைது என்று செய்தித்தாளில் படித்தேன் அமைச்சரே. அது என்ன ரகசியம்"?

" அது ....தாங்கள் அரசியாரின் சேலைகளைத் துவைப்பதை விலாவாரியாக தன் செல்பேசி யில் படம் பிடித்திருந்தான் மன்னா".

(20) "மன்னர் மன்னா, அண்டை நாட்டிலிருந்து நிறைய தரமற்ற பொருட்கள் கடத்தப்பட்டு மலிவு விலையில் கிடைத்து வருவதால் தரமான நம் நாட்டுப் பொருட்கள் விற்பனை பாதிப்படைகிறது. இதை எப்படித்தடுப்பது?

"அது ஒரு பிரச்சனையே இல்லை.  தரமற்ற பொருட்களை நாமும்  தயாரித்து அண்டை நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று குறியிட்டு விற்பனை செய்யச் சொல்லிவிடலாம்".

Tuesday 27 September 2016

மன்னாதி மன்னன் - ஜோக்ஸ் (1)

(1) "அமைச்சரே, இளவரசருக்கு தொலைநோக்கு சிந்தனை அதிகம் என்று அரண்மனைக் காவல் அதிகாரி சொன்னாரே. அப்படியா"
"ஆம் மன்னா. தலைநகர பெண்கள் மார்கழி மாதம் தெருக்களில் கோலம் போடுவதை அரண்மனை கண்ட்ரோல் அறையிலிருந்தே ரசிக்க எல்லாத் தெருக்களிலும் கேமிரா வைக்க இப்போதே உத்தரவிட்டுள்ளாரே".





(2) "இருநாட்களாக இரவு நேரத்தில் பாலியல் குற்றங்கள் எதுவும் நடந்த செய்திகள் வரவில்லையே அமைச்சரே"
"நம் இளவரசர் ஒருவார நல்லெண்ண சுற்றுப்பயணமாக பக்கத்து நாட்டுக்குச் சென்று இரண்டு நாட்களாகி விட்டது அரசே"



(3) "மன்னா நீங்கள் போருக்கே போவதில்லையே, அப்புறம் எதற்கு போர்கருவிகள் வாங்க விளம்பரம் தந்திருக்கறீர்கள்"?
"அதுவா, இளவரசர் கமிஷன் பணம் பாக்கெட் மணிக்காக விளம்பரம் தந்திருப்பார்".


(4) "மன்னா, உங்கள் உத்தரவுகள் தெளிவாக இல்லாததால், பெரும் குழப்பம். பார்ப்பதை எல்லாம் கலவரம் செய்பவர்கள் திருடுகிறார்களாம் கேட்டால் உங்கள் உத்தரவுப் படி நடப்பதாக வேறு சொல்கிறார்களாம்".
"அப்படியா, தெளிவாகத் தானே உத்தரவிட்டேன்".
"கலவரம் செய்வோருக்கு மன்னர் எச்சரிக்கை. கண்டதும் சுட உத்தரவு என்று".




(5) "மன்னா பக்கத்து நாட்டின் அரசர் தடுப்பணைகளை நம் நாட்டில் பாயும் நதி மீது கட்டப் போகிறாராம். நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்"
"சற்றும் தாமதிக்காமல் அவருக்கு திருமுகம் அனுப்புங்கள். மணல், ஜல்லி சப்ளை கூலி வேலை செய்யும் ஆட்கள் காண்ட்ராக்டை என் மைத்துனருக்கே வழங்க வேண்டுமென்று"





 Image courtesy: www.tamil.2daycinema.com



(6) "மன்னா இந்த காவேரி பிரச்சனை பற்றி சக்கரவர்த்தி உங்களைக் கேட்டதற்கு அவர் மயக்கமடையும்படி என்ன பதில் அளித்தீர்கள்"?
"அது என் சொந்த பிரச்சனை. அரசியே அதைப் பற்றி கேட்கவில்லை. பிரச்சனை பெரிதானால் ஜீவனாம்சம் தந்து விடுகிறேன் என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன் அவ்வளவுதான், அமைச்சரே”


(7) "அமைச்சரே பக்கத்து நாட்டில் நடக்கும் மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள நமக்கு அழைப்பு அனுப்பவில்லையே"
" ஆம் மன்னா. எல்லாம் தோல்வி பயம் தான் காரணம். புறமுதுகிட்டு ஓடுவதில் உங்கள் வேகம் உலகறிந்ததாயிற்றே”.



(8) "மன்னா நம் நாட்டில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது என்று எல்லாரும் சொல்கிறார்கள்"
"அப்படியா, இனி எல்லா அரசு அலுவலர்களும் மொட்டையடித்து வர உடனே உத்தரவிடுகிறேன் அமைச்சரே"



(9) "அமைச்சரே, பக்கத்து நாட்டில்
என்னை நல்ல leftist என்று பேசிக் கொள்கிறார்களே"
"ஆம் அரசே எந்தப் போரிலும். போர்களத்தை விட்டு முதலில் ஓடுவது நீங்கள்தான் என்பதால் அப்படி அழைக்கிறார்கள்".


(10) " என்ன தரகரே, மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் ஏன் இப்படி வள்வள் ன்னு விழறாங்க. அவர்களைப் பற்றி ஏன் எச்சரிக்கை செய்யவில்லை"
"இல்லை அரசே, அவர்கள் பையனின் ஜாதகத்தில் குடும்பம் பற்றிய தகவல் என்ற இடத்தில் ஆத்திரடாக்ஸ் பேமிலி என்று குறிப்பிட்டிருந்தார்களே”.

Tuesday 13 September 2016

தோரண வார்த்தைகள்

காகித வெண் சுவர்களில்
பதிந்திருக்கும்
முற்றுப் புள்ளி ஆணிகளில்
கட்டிவிடப்பட்ட
கவிதை வரிக் கொடியில்
கண்ணீரில் நனைந்து
கனத்துத் தொங்கிய வார்த்தைகள்
உன் நினைவுக் காற்றில்
அலைந்து ஆடிக் காய்ந்ததில்
உலர்ந்து லேசாகிப் போனது
என் மனம்


நாளைய குர்பானியில்
உயிர் போகப்போவதறியாமல்
நேற்றே ஹோலி கொண்டாடி
விட்டு வந்தன கலர் கலராய் ஆடுகள்
ஆந்திராவிலிருந்து.
















கண்ணாடிக் கோப்பை
நீரில் இட்ட
பனிக்கட்டி கரைந்து
கோப்பையின் நீரைக்
குளிர்வித்து காணாமல்
போவது போல் உன் நினைவை
இட்டதும் மனதில் குளுமை தந்து
காணாமல் போகிறாய்
என் மேனிதான் வியர்த்துப் போகிறது
கோப்பையின் மேற்புறமாக.


ஆலமரம் பஸ் ஸ்டாப்

பெரு நகர பேருந்து நிறுத்த நிழற்குடை
பளபளக்கும் எவர்சில்வர் தூண்கள்

பல நிறங்களில் கூரை உயரத்தில்
மறைத்த குழல் விளக்கொளியில்  பளீரெனத் தெரியும்
பொற்கால ஆட்சி விளம்பரங்கள்

நிழல் தந்த சிற்றரசரின் பெயர் தாங்கிய
பதாகைகளின் கீழே தடித்த குழாய் இருக்கைகள்

உட்கார அதிகபட்ச  அசௌகரியத்துடன்
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும்  அலங்கார  பாதி உடைந்த சிவப்பு ஓடுகள்
தூண்களில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்

மறைவான பின்புற நடைமேடை
இலவச பொதுக் கழிப்பிடம்

சுற்றுபுறத்தில் இரைந்து கிடக்கும் குவார்டர் போத்தல்கள்
50 காசு பிளாஸ்டிக் டம்ளர்கள்
போதையர்களின் பார் (Bar)

இரவில் உடல் குறுக்கி படுத்திருக்கும்  பிச்சைக்கார கிழவன்

காலை மாலையில்  பூக்கார அம்மாவின் விற்பனை மேசை

மதியப் பொழுதுகளில் சோம்பேறி நாய்களின் உறங்குமிடம்

இயற்கை நிழல் தந்த ஆலமரத்தை
வெட்டிய பின்  ஓய்யாரமாக  வந்தது
அந்த பேருந்து நிறுத்த நிழற்குடை

பகலில் நிழலும் தருவதில்லை
மழைக்கு நனையாமல் காப்பதுமில்லை
எந்த பேருந்தும் அந்த நிறுத்தத்தில் நிற்பதுமில்லை

வெய்யிலில் வியர்த்தபடி நிற்கும் பயணிகள் அருகே வெட்டியாக
நின்ற அதன் பெயர்
மாநகரப் பேருந்துப்  பயணிகள் நிழற்குடையாம்.

ஆனால் ஆலமரம் பஸ் ஸ்டாப் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.

Tuesday 6 September 2016

இலையும், காற்றும்.

1) உணவு சமைத்து
ஆசை ஆசையாக
ஊட்டி  மரங்களை
வளர்த்தன இலைகள்.
காற்று தழுவிய மயக்கத்தில்
தன்நிலை மறந்த மரம்
உதிர்த்தது இலைகளை.

2) காற்று வந்து ஆன் யுவர் மார்ட்
கெட் செட் ரெடி கோ சொல்லக்
காத்திருந்தன உதிரத் தயாராக
இருந்த பழுத்த இலைகள்.

3) தாம் இறந்து போனது தெரியாமல்  மரத்திலிருந்து குதித்து விளையாடிக்  பழுத்த இலைகளுக்காக
கண்ணீர் வடித்தது மேகம்.

4) மழையில் குளித்து
குளிரில் நடுங்கிய மரங்கள்
தலையை காற்றில் உதறி உதறி
உலர்த்திக் கொண்டன.

5) குளக்கரையில் அரச மரத்தின் கீழே
அமர்ந்திருந்த ஆனை முகனுக்கு
இலைகளை உதிர்த்து
அர்ச்சித்ததுப் போனது
மெல்லிய தென்றல் காற்று.