Friday 29 July 2016

பலசரக்கு - 2

(1) தூய்மை இந்தியா

புற்று நோயாளிகள் காப்பகத்தில்

அருவெறுப்பின்றி, சிரித்த முகத்துடன்

நோயாளிகளின் உடல் துடைத்து விட்ட

செவிலித் தாயின் உடையில் இருந்த

பிளாஸ்டிக் வில்லையில்

“கங்கா” என்று பெயர் பொறித்திருந்தது.


(2) பாசம்
 
 “ முருகா, இந்தா கொழுக்கட்டை

எடுத்துக்கோ வேண்டிய அளவு சாப்பிடு”

என்ற வினாயகர் கையில் வைத்திருந்த

பாத்திரத்தில் நூற்றுக் கணக்கில் கொழுக்கட்டைகள்.


(3) உலகமயமாதல்
 
ஆதாமிடம் ஆசை வார்த்தைகள் கூறிய

சாத்தான் காட்டிய மாதிரி ஆப்பிளில்

“IMPORTED FROM CHINA”

என்று வில்லை ஒட்டியிருந்தது.


(4) தொழில் நுட்பம்

இயேசுவை சிலுவையில் அடிக்க வந்த

காவலர்கள் கையில்

போல்ட் மற்றும் நட்டுகளும்,

ஸ்பானரும், நட்சத்திர திருப்புளியும் இருந்தது.



(5)

ஆதார்

சித்திரகுப்தன் டிஜிட்டல் காமிராவில்

புதிதாக வந்த உயிர்களின்

படத்தைப் பதிவு செய்து

அடையாள அட்டை வழங்குவதற்குக்

 கோரப்பட்ட உலகளாவிய டெண்டரின்

 நகலை அவர் அலுவலகத்தின்


அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருந்தார். 

Wednesday 6 July 2016

பலசரக்கு - 1

கடல் தாயிடமிருந்து கதிரவன் கவர்ந்த நீர்,
மேகமாக உருப்பெற்று கதிரவனைக்
கண்டித்துப் பேரணி நடத்த வானில் கூட,
கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய காற்றால்
சிதறி அழுதவாறு கலைந்து ஓடியதில் 
அடி பட்டு புவியில் விழந்தது தூறல்.



எத்தனை முறை உதைத்து எழுப்பினாலும்
இரவு பெய்த மழையில் நனைந்தபடியே
கழுத்தைச் சாய்த்து நின்றவாறே 
உறங்கிப் போயிருந்த இரும்புக் குதிரைகள் 
உறக்கம் கலையாமல் முனகியவாறு
இயங்க மறுத்து அடம் பிடித்தன.



அணையிலடைபட்டுக் கிடந்த ஆறு
திறந்து விட சீறிப் பாய்ந்து விளை நிலங்களில் 
தேங்கி பயிரின் உயிராகக் கலக்க வந்தால்
தந்திரமாக ஏமாற்றப்பட்டு
சின்ன சின்ன போத்தல்களில் 
மீண்டும் சிறைப்பட்டு அலங்காரமாக 
விற்பனையாவதுதான் உலகமயமாக்கல்.
















காடுகளில் தன் காதல் மரங்களைக் கட்டிக் தழுவிய காற்று
கடலில் மரங்களைத் தேடியது, மரங்களைக் காணாமல்
'
' என்று அழதபடி கரை நோக்கி 
வேகம் கொண்டு வந்தது.
அந்த நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் 
புகுந்து, புகுந்து தேடியதில்
கிடைத்த சில மரங்களை வெறியுடன் கட்டிக் தழுவியது
நாம் காற்று, மரம் அவற்றின் அன்யோன்யம் 
அறியாமல் புயல், மழை, வெள்ளம் என்றும்
புயலி்ல் நகரத்தில் ஆயிரக்கணக்கில் 
மரங்கள் சாயந்தன என்று சொல்கிறோம்.




கட்டிலிருந்து எடுத்துக் கொண்ட சீட்டில் 
வந்த ஆண் கோமாளி, ராஜாவுக்கும், மந்திரிக்கும் 
இடையில் பால் மாறி ராணியாகி ஆட்டக்காரனை 
வெல்லச் செய்வதில் இருப்பதே சூது.



தம் நிர்வாணம் மறைக்க இடையில் பூமியை 
அணிந்து தன் உடலை வளைத்தும்
கரங்களையும் அசைத்தும் 
காற்றின் கீதத்தை இருந்த இடத்திலேயே 
அனுபவித்த மரங்களுக்கு
சந்தோஷத்தில் தங்கள் தலையில் சூடியிருந்த 
பூக்கள் உதிரந்தது கூடத் தெரிவதில்லை.




புத்தனை நோக்கி வந்து விழுந்த வன் சொற்கள் 
தரையில் மோதி எழுத்துக்களாகச் சிதறின.
அவற்றை அமைதியாக தேடித் தேடி 
பொறுக்கி எடுத்த புத்தன் கவனமாக 
ஒன்று சேர்ந்து இன் சொல் உபதேச வார்த்தைகளாக்கினான்.



வீட்டைப் பிரிந்து பள்ளிக்குப் செல்ல மறுத்து 
அடம் பிடிக்கும் குழந்தையைப் போல 
உடலைப் பிரிந்து செல்ல மறுத்து 
அடம் பிடிக்கிறது மரணத்தை எதிர் நோக்கும் மனிதனின் உயிர்