Wednesday 31 August 2016

பலசரக்கு - (3)

(1) நீரில் உருவான காற்றுக் குமிழ் 
உடைந்த போது
பிரிக்கப்பட்டிருந்த காற்று, காற்றையும்
நீர், நீரையும் கலந்தன.
குமிழ் என்ற மாயை மறைந்தது.

(2) பறவைகளுக்கும், தேசாந்திரிக்கும்
கை காட்டி மரங்கள் தேவைப்படுவதில்லை.


(3) தரதரவென கோபத்துடன்
அழைத்துச் செல்லும் 
தகப்பனாக காற்றும், 
பள்ளி செல்ல மறுத்து 
அடம் பிடித்து அழும் 
சிறுபிள்ளையாக
மழை மேகமும்.

(4) வருணன் சாம்பல் மேக டிஸ்டெம்பர் 
நீல வானில் வர்ணம் பூசிய
போது பூவியில் சொட்டிய 
துளிகளாக சாரல் மழை.

(5) அன்பை எல்லோரிடமிருந்தும் எவ்வளவு 
சிறிய அளவினதானாலும் மகிழ்வுடன் 
பெற்றுக் கொள்ளுங்கள்.
அதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்குங்கள்.


பந்த பாசம்




மார்ச்சுவரி வாசலில் கனைத்தபடி நின்ற தொத்தல் குதிரை

பார்ட்டிபார்த்துப் பேச போன புரோக்கர் எதிர் பிளாட்பாரத்தில் டீ கடையில்

பக்கத்து டாஸ்மாக்கில் சோகம் போக்க பானம் பருக சொந்தங்கள்

கிண்டிக்கு. 3000 ரூபாய் என பேரம் பேசியபடி அமரர் ஊர்தி ஓட்டுனர்கள்

பீடி பிடித்த படி நேற்று பார்த்த தெலுங்குப் படக் கதை பற்றி பேசியவாறு சுகாதாரப் பணியாளர்கள்

யார் வீட்டிற்கு கொண்டு போக என்று முடிவுக்கு வராத பிள்ளைகள், முடிவெடுக்க விடாத மருமகள்கள்

அழும் போதும் கூட  "அம்மா போட்டிருந்த நகை எனக்குத்தான் என்று
சொன்னாங்களே" என்ற பெண்

ஓரமாய் மர நிழலில் பாண்டேஜ் துணி சுற்றி கிடத்தப்பட்ட உடல்

எல்லாவற்றையும் கண்டும் காணாத மாதிரி நின்று கொண்டிருந்த அந்த வயோதிக மனிதர்

"நம்ம ஹோமுக்கே கொண்டு போயிடலாம் செகரெட்டரி சார், அவளை" என்றதும்

கண்ணுக்குத் தெரியாத நிம்மதி பாண்டேஜ் துணி சுற்றிய உடலின் ஆன்மா உட்பட எல்லோருக்கும்.


********************************************************************************************************


கவிதை எழுத வார்த்தைகள் தேவை

உங்களிடம் பயனற்று உபயோகமின்றி இருக்கும்

வார்த்தைகளை என் போன்றவர்களுக்கு தானமாக வழங்குங்கள்.
பழைய வார்த்தைகளைக் கொடுத்து

புதிய வாரத்தைகளை புத்தாண்டு தள்ளுபடியில்
வாங்கி கவிதை எழத உத்தேசம்.

எங்கு அதிகம் தள்ளுபடி கொஞ்சம் சொல்லுங்கள்.

கதர் சட்டை போல சுதேசி கவிதை எழத நினைத்தால்
 
ஜீன்ஸ் பேண்ட் போல மொழி மாற்றிய கவிதையே
பேனாவில் ஊற்றெடுக்கிறது.

























சிருங்கார ரசத்துடன் காதல் கவிதை எழத நினைத்தால் 

வயதான கவிஞனைப பார்த்து பேனா கிண்டலாகச் சிரிக்கிறது.

நான் இன்று கவிதை எழுதவே முடியாது. 

நாளை மீண்டும் முயற்சி செய்வேன்

வேதாளம் சுமந்த விக்ரமனாக.

Wednesday 3 August 2016

சாவின் வாசனை

தெருவெங்கும் பூக்கள்
பிய்ந்தும், கசங்கியும்,

அறுந்த மாலைகள், கட்சிக்கரை நாடாக்கள்
இறைத்த பொறி, வீசிய வெற்றிலை

ஆட்கள் இல்லாத பிளாஸ்டிக் நாற்காலிகள்
வெறிச்சோடிய பந்தல்

ஓரங்கட்டிய ஃபிரீசர் கண்ணாடிப் பெட்டி
அழுகை சத்தமற்ற மயான அமைதி

பெயிண்ட் வாளியில் நீரும்
அதில் மிதக்கும் பெயிண்ட் டப்பாவும்

வார் அறுந்த ஒற்றைச் செருப்பு 
பொது குப்பைத் தொட்டியில்

பாதி தெரிந்த நைந்த பாயும்,
பிசுக்குத் தலையணையும்

ஈரமான மண்ணை தாண்டிச் செல்லுகையில்
தூரத்தே கேட்கும் சேகண்டி ஒலியும்,

சங்கின் முழக்கமும்
டண்டணக்கா ஆட்டமும், விசிலுடன்
வேட்டுச் சத்தம்

யாரோ என்றாலும் மனதைப்
பிசைந்த வலி

வரும் பேருந்துகளில் கருப்பு நிறத்தில்
"கண்ணீர் அஞ்சலி" சுவரொட்டிகள்

அரிச்சந்திரன் உத்தரவு வாங்கி
மயானம் புகுந்த பின்னும்

கூடவே வந்தது சாவின் வாசனை
துரத்தியபடி அடுத்த கால்மணி நேரத்திற்கு
 உற்ற நண்பனைப் போல.


கள்ளிப்பால்

மரண தண்டனை உங்களுக்கு
இல்லை

சட்டம் ஒரு ஜல்லிக்கரண்டி
எண்ணெய் வடிப்பது போல

எளிதாக உங்களுக்கு
வழி தரும்.

உங்கள் உடற்பசிக்கு, காமத்திற்கு
மிருக வெறிக்கு

பலியான எங்களுக்கு என்றுமே
நீதி வாய்க்கவில்லை

வெறியோடு கொன்றவனுக்கு
ஆதரவுக் கரமளித்து மனிதம் பேசுவீர்

யாரேனும் எதிர்த்து சுட்டினால்
அவனைக் கொன்றால் போன உயிர் திரும்பி வருமா 
என்று வேதாந்தம் பேசுவீர்


உயிரோடு எரித்தாலும், அரிவாளால் வெட்டினாலும், கற்பழித்துக் கொடுரமாகக் கொன்றாலும் 
அதிலும் சாதியும், அரசியலையும்
புகுத்தி நீர்க்க வைப்பீர்.

இனிமேல் பிறந்தவுடன் வழக்கம் போல் கள்ளிப் பால் 
பருகத் தந்து உயிர் துறக்க ஏற்பாடு செய்யுங்கள்

அழுகிப் போன மன நோய் மனிதர் களுடன் வாழ்வை விட அதுவே மேல்.