Wednesday, 3 August 2016

சாவின் வாசனை

தெருவெங்கும் பூக்கள்
பிய்ந்தும், கசங்கியும்,

அறுந்த மாலைகள், கட்சிக்கரை நாடாக்கள்
இறைத்த பொறி, வீசிய வெற்றிலை

ஆட்கள் இல்லாத பிளாஸ்டிக் நாற்காலிகள்
வெறிச்சோடிய பந்தல்

ஓரங்கட்டிய ஃபிரீசர் கண்ணாடிப் பெட்டி
அழுகை சத்தமற்ற மயான அமைதி

பெயிண்ட் வாளியில் நீரும்
அதில் மிதக்கும் பெயிண்ட் டப்பாவும்

வார் அறுந்த ஒற்றைச் செருப்பு 
பொது குப்பைத் தொட்டியில்

பாதி தெரிந்த நைந்த பாயும்,
பிசுக்குத் தலையணையும்

ஈரமான மண்ணை தாண்டிச் செல்லுகையில்
தூரத்தே கேட்கும் சேகண்டி ஒலியும்,

சங்கின் முழக்கமும்
டண்டணக்கா ஆட்டமும், விசிலுடன்
வேட்டுச் சத்தம்

யாரோ என்றாலும் மனதைப்
பிசைந்த வலி

வரும் பேருந்துகளில் கருப்பு நிறத்தில்
"கண்ணீர் அஞ்சலி" சுவரொட்டிகள்

அரிச்சந்திரன் உத்தரவு வாங்கி
மயானம் புகுந்த பின்னும்

கூடவே வந்தது சாவின் வாசனை
துரத்தியபடி அடுத்த கால்மணி நேரத்திற்கு
 உற்ற நண்பனைப் போல.


No comments:

Post a Comment