Wednesday, 31 August 2016

பந்த பாசம்




மார்ச்சுவரி வாசலில் கனைத்தபடி நின்ற தொத்தல் குதிரை

பார்ட்டிபார்த்துப் பேச போன புரோக்கர் எதிர் பிளாட்பாரத்தில் டீ கடையில்

பக்கத்து டாஸ்மாக்கில் சோகம் போக்க பானம் பருக சொந்தங்கள்

கிண்டிக்கு. 3000 ரூபாய் என பேரம் பேசியபடி அமரர் ஊர்தி ஓட்டுனர்கள்

பீடி பிடித்த படி நேற்று பார்த்த தெலுங்குப் படக் கதை பற்றி பேசியவாறு சுகாதாரப் பணியாளர்கள்

யார் வீட்டிற்கு கொண்டு போக என்று முடிவுக்கு வராத பிள்ளைகள், முடிவெடுக்க விடாத மருமகள்கள்

அழும் போதும் கூட  "அம்மா போட்டிருந்த நகை எனக்குத்தான் என்று
சொன்னாங்களே" என்ற பெண்

ஓரமாய் மர நிழலில் பாண்டேஜ் துணி சுற்றி கிடத்தப்பட்ட உடல்

எல்லாவற்றையும் கண்டும் காணாத மாதிரி நின்று கொண்டிருந்த அந்த வயோதிக மனிதர்

"நம்ம ஹோமுக்கே கொண்டு போயிடலாம் செகரெட்டரி சார், அவளை" என்றதும்

கண்ணுக்குத் தெரியாத நிம்மதி பாண்டேஜ் துணி சுற்றிய உடலின் ஆன்மா உட்பட எல்லோருக்கும்.


********************************************************************************************************


கவிதை எழுத வார்த்தைகள் தேவை

உங்களிடம் பயனற்று உபயோகமின்றி இருக்கும்

வார்த்தைகளை என் போன்றவர்களுக்கு தானமாக வழங்குங்கள்.
பழைய வார்த்தைகளைக் கொடுத்து

புதிய வாரத்தைகளை புத்தாண்டு தள்ளுபடியில்
வாங்கி கவிதை எழத உத்தேசம்.

எங்கு அதிகம் தள்ளுபடி கொஞ்சம் சொல்லுங்கள்.

கதர் சட்டை போல சுதேசி கவிதை எழத நினைத்தால்
 
ஜீன்ஸ் பேண்ட் போல மொழி மாற்றிய கவிதையே
பேனாவில் ஊற்றெடுக்கிறது.

























சிருங்கார ரசத்துடன் காதல் கவிதை எழத நினைத்தால் 

வயதான கவிஞனைப பார்த்து பேனா கிண்டலாகச் சிரிக்கிறது.

நான் இன்று கவிதை எழுதவே முடியாது. 

நாளை மீண்டும் முயற்சி செய்வேன்

வேதாளம் சுமந்த விக்ரமனாக.

No comments:

Post a Comment