Tuesday, 13 September 2016

ஆலமரம் பஸ் ஸ்டாப்

பெரு நகர பேருந்து நிறுத்த நிழற்குடை
பளபளக்கும் எவர்சில்வர் தூண்கள்

பல நிறங்களில் கூரை உயரத்தில்
மறைத்த குழல் விளக்கொளியில்  பளீரெனத் தெரியும்
பொற்கால ஆட்சி விளம்பரங்கள்

நிழல் தந்த சிற்றரசரின் பெயர் தாங்கிய
பதாகைகளின் கீழே தடித்த குழாய் இருக்கைகள்

உட்கார அதிகபட்ச  அசௌகரியத்துடன்
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும்  அலங்கார  பாதி உடைந்த சிவப்பு ஓடுகள்
தூண்களில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்

மறைவான பின்புற நடைமேடை
இலவச பொதுக் கழிப்பிடம்

சுற்றுபுறத்தில் இரைந்து கிடக்கும் குவார்டர் போத்தல்கள்
50 காசு பிளாஸ்டிக் டம்ளர்கள்
போதையர்களின் பார் (Bar)

இரவில் உடல் குறுக்கி படுத்திருக்கும்  பிச்சைக்கார கிழவன்

காலை மாலையில்  பூக்கார அம்மாவின் விற்பனை மேசை

மதியப் பொழுதுகளில் சோம்பேறி நாய்களின் உறங்குமிடம்

இயற்கை நிழல் தந்த ஆலமரத்தை
வெட்டிய பின்  ஓய்யாரமாக  வந்தது
அந்த பேருந்து நிறுத்த நிழற்குடை

பகலில் நிழலும் தருவதில்லை
மழைக்கு நனையாமல் காப்பதுமில்லை
எந்த பேருந்தும் அந்த நிறுத்தத்தில் நிற்பதுமில்லை

வெய்யிலில் வியர்த்தபடி நிற்கும் பயணிகள் அருகே வெட்டியாக
நின்ற அதன் பெயர்
மாநகரப் பேருந்துப்  பயணிகள் நிழற்குடையாம்.

ஆனால் ஆலமரம் பஸ் ஸ்டாப் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment