Tuesday, 26 February 2019

முதல் மணி

1) முதல் மணி அடித்து விட்டது
நேரமாகி விட்ட பதைபதைப்பு
கோவிலில் நுழைகிறார் இறைவன்.



2) கிழட்டு கடலலைக்குப் பார்வை மங்கல் 
தினம் வரும் என்னை வந்து வந்து பார்த்து 

அடையாளம் தெரியாமல் திரும்புகிறது.


3) பிறவிப் பெருங்கடல் கடக்கப் பயிற்சி
பிறவி எடுக்க பெருங்கடல் 
நீந்திக் கடக்கும் உயிரணுக்கள்.



4) வேகமாக வந்து தாக்கியதும்
திசைக்கொன்றாக சிதறி ஓட்டம்
கேரம் விளையாட்டு காய்கள்.



5) அடிபட்ட வெண்புறா மாற்றாக
அரிந்து தரப்பட்டது தொடை 
மாமிச விற்பனைக் கடை.



6) நின்று தேங்கி மெல்ல ஓடுகிறது
பாதை சரியில்லை
மணல் எடுத்த நதியில் நீர்.



7) பேசாத வியாபாரி
கூவிக் கூவி விற்பனை
ஒலிப்பானில் பதிவிட்ட விளம்பரம்.



8) மாம்பழம் கிடைக்க வாய்ப்பில்லை
இருந்தும் விடாமல் உலகை
சுற்றுகிறது சந்திரன்.



9) முள்ளிலிருந்து விடுபட்டதும்
மகிழ்ச்சியில் துள்ளுகிறது
கூடையில் போடப்பட்ட மீன்.


10) அந்தகனின் பிச்சைப் பாத்திரம்
குலுக்கியதும் துள்ளிக் குதிக்கின்றன
செல்லாக் காசுகள்.



11) வீட்டுக்குச் செல்ல நேரமாகி விட்டதோ 
மணி பார்த்துக் கொண்டிருந்தது
மணிக்கூண்டில் மாலைச் சூரிய ஒளி.



12) பல இடங்களில் வேகம்
சில இடங்களில் நின்று பயணம்
தொடுதிரை கைபேசியில் விரல்.



13) தினந்தோறும் காதலர் தினம் 
கை நிறையக் காதல் பரிசுகள்
காற்று சுமந்த மகரந்தங்கள்.



14) யாருக்கும் கெடுதல் செய்யவில்லை
அடித்துத் துரத்த மகிழ்ச்சி ஆரவாரம்
கிரிக்கெட் விளையாட்டில் பந்து.


15) காற்று வந்து கட்டி அணைக்க
வாழ்வை முடித்துக் கொண்டது
துடித்துப் போன தீபச் சுடர்.



16) ஆவேசமாய் கட்டி அணைக்க
வந்தது சூறைக்காற்று
நடுங்கியது தீபச் சுடர்.



17) காதலர் தினம் 
பூங்காவில் கையில் தாலியுடன் 
பண்பாட்டுக் காவலர்கள்.



18) நாளை காதலர் தினம்
இன்றைக்கே வானில் பறந்த
ஏற்றுமதியான ரோஜா மலர்கள்.



19) அடி மேல் அடி வைத்து 
யோசனையுடன் இடதும் வலதுமாய் 

உலாவுகிறது கவிஞனின் பேனா.


20) தலை விரித்துச் சாமியாடியது
பேய் பிடித்ததாக நம்பப்பட்ட
ஒற்றைப் பனை தேரிக் காற்றுக்கு .



21) நீர் இன்றி வாடவில்லை
அழகான வண்ண மலர்கள்
பீங்கான் சாடியில் நெகிழிச் செடிகள்.



22) மருத்துவமனையில் இறப்பு அறிவித்ததும் 
கொளுத்திய கையோடு புதுசாய் சித்தி 
பழையன கழிந்து புதியன புகுந்த போகிப் பண்டிகை.



23) உள்ளே போய் வெளியே வருபவர்கள் 
பட்டணத்தார் போன்று மாற்றம்
நியாய விலைக்கடை பொங்கல் பரிசு.



24) இரவுக்கு ஆயிரம் கண்கள்
எல்லாக் கண்களிலும் மையெழுதி
கருத்திருக்கிறது வானம்.



25) விண்மீன்களுக்கு நூறு சதம் இட ஒதுக்கீடு
கோபத்தில் வரவில்லை நிலா
கருப்பு அணிந்த வானம், அமாவாசை.



26) மௌனமாக கை கழுவ
மேசை மீது காத்திருந்தது ரசீது
கை விடப்பட்ட நோயாளிக்கு.



27) புண்ணிய நதிகளில் நீராட
வேகமாகக் கரைந்தது
பக்தனின் குளியல் சோப்பு.



28) மார்கழி மாத சபா இசை நிகழ்ச்சிகள்
எதிர்பார்த்து ஏங்கிய ஆர்வலர்கள்
சிற்றுண்டிச் சாலை உணவு வகைகள்.



29) புத்தாண்டின் முதல் ஏமாற்றம்
பல் பொருள் அங்காடியின் அறிவிப்பு
"ஆயிரம் ரூபாய்க்கு மேல் இலவச தின நாள்காட்டி".



30) சுண்ணாம்பு காணாத சுவர்கள்
வீட்டின் வறுமையை மறைக்க
புதிய நாட்காட்டி கிடைக்கவில்லை.



31) அழகான இதழ்களைக் காட்டி மயக்கி
திருட்டுத்தனமாகக் குடித்துத் தீர்க்கின்றன
குளத்து நீரைத் தாமரை மலர்கள்.



32) நடைபாதை கிருஸ்மஸ் மரம்
புதிய கிழியாத காலுறைகள்
கட்டிச் சென்றார் சாண்டா தாத்தா.



33) நடுநிசியில் ஆலய மணி ஒலி 
திடுக்கிட்டு விழித்த கடவுளர்கள்
ஆங்கிலப் புத்தாண்டு தினம்.



34) ஆங்கிலப் புத்தாண்டு பலன்
திருவாதிரைக்கு வெளிநாடுபயணம்

கடத்தப்பட்டது நடராசர் சிலை.


35) ஆங்கிலப் புத்தாண்டு தின நடுநிசி
அமைச்சர்கள் முகத்தில் விழிக்க
காத்துக் கிடந்தனர் இந்துக் கடவுளர்கள்.



36) நட்டாற்றில் மண்குதிரை
பயமின்றி அய்யனார்
ஊர் முழுதும் பெரு வெள்ளம்.



37) தினந்தோறும் கோடிகளில் புரண்டும்
அதிகமாக ஒன்றும் ஒட்டவில்லை
பங்குச் சந்தை வியாபாரம்.



38) சாய்ந்து சுவரோரம் ஓய்வு
ஊனமுற்ற இரப்பவனின்
செயற்கைக் கால்கள்.



39) அலங்கார சிம்மாசனத்தில்
அழுக்கு உடைக் காவலன்
ஆளில்லா திருமண மண்டபம்.



40) இக்கரையும் அக்கரையுமாய்
அலையும் மேய்ச்சல் மாடோ
காலம் மேயும் கடிகார ஊசல்.



41) அங்குமிங்கும் அலைந்து
காலத்தைக் கழிக்கும் கடிகார ஊசல்
கைவிடப்பட்ட பெற்றோரோ?



42) இடதும் வலதுமாய் ஓடி ஓடி 
அலைகிறதே இந்த கடிகார ஊசல்கள்
தேர்தல் கூட்டணிக்கு முயற்சியோ?



43) காத்திருக்கும் காதலனோ 
பொறுமையின்றி இடதும் வலதுமாய்
அலைகிறதே கடிகார ஊசல்.


44) அங்குமிங்கும் அலைகிறதே
இந்த கடிகார ஊசல்கள்
தேடுபவர் கிடைக்கவில்லையோ?



45) ஆயுதம் காட்டாமல் அகிம்சை மிரட்டல்
தேர்வடச் சங்கிலி கட்சிக்கரை வேட்டி 

சட்டைப்பைக்குள் சிரிக்கும் தலைவர்கள்.


46) பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் 
போராடாமல் அகிம்சையாக நிறைவேற 

சட்டைப்பையில் கனக்கிறார் தேசப்பிதா.




47) பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினர்
ஏட்டுக்கல்வி கற்காத பாமரர்கள்
புயல் நிவாரண முகாம்.


48) பூங்காவில் காலியாக இருக்கைகள்
காதல் சோடிகள் யாருமில்லை
அந்தி நேரத்தில் மழை.

49) இரவு முழுவதும் வானும் மண்ணும்
வாய் ஓயாது ஆசையாய் பேசியது
செய்தியில் கனமழை.

50) ஒன்றுக்குப் பத்தாகத் தலைகள்
சிந்திக்கத் தோன்றவில்லை
இலங்கை வேந்தன்.







1 comment:

  1. எல்லாமே இரசிக்க வைத்தன நண்பரே

    ReplyDelete