Wednesday, 27 February 2019

சொர்க்கவாசல்

51) குளித்து மஞ்சள் குங்குமம்
மலர் மாலை மங்களகரமாக
அனைத்து ஆன்மாக்கள் நாள் கல்லறைகள்.


52) சத்தம் இல்லாமல் வருகிறது 
தீபாவளிப் பண்டிகை
பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு.



53) எவ்வளவோ கட்டுப்படுத்தியும்
ஓசை அடங்கவே இல்லை
ஆசிரியர் இல்லா வகுப்பறை.



54) புகைந்தபடியே உள்ளது
இன்னும் வெடிக்கவில்லை
மாமியார், மருமகள் சண்டை.



55) எவ்வளவு சுட்டாலும்
ஆசை தீரவில்லை 
புதுப்புதுத் திட்டங்கள்.


56) திரையரங்கில் பாலாபிஷேகம்
கீழே மெல்ல ஊர்கின்றன
சாலையில் வாகனங்கள்.



57) பொது நடைமேடை 
கடைகளுக்கு இடமே இல்லை
இருசக்கர வாகனங்கள்.



58) கோணி போட்டு முகம் மூடி
இறுகக் கட்டியிருந்தது
திறப்புவிழா நடக்காத சிலை.



59) பலநாள் சுற்றிக் கரை கடந்தது 
வேகமாக நகர்ந்து பலமாகப் பொழிந்தது
முகநூலில் வதந்தியும் பொய்களும்.



60) எண்ணெய் இட்டதும்
கவிபாட மறந்து போனது
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி.



61) சொர்க்கவாசல் கதவு 
மெல்ல யாரோ திறக்க 
உள்ளே யாருமில்லை.



62) அத்தனை நட்சத்திரங்களும் நிலவும்
அள்ளி அள்ளி உண்டாலும் 
தீர்ந்து போகவில்லை இருள்.



63) தோலுரித்துக் காட்டியும்
குழப்பமே மிஞ்சியது
கைப்பற்றப்பட்ட மாமிசம்.



64) தினந்தோறும் கரு மை பூசி
முதுமையை மறைக்க முயற்சி
தோற்றுப் போகிறது காலம்.



65) பகலில் ஊருக்காக ஓடி ஓடி உழைப்பு 
இரவில் நிராதவாய்ச் சாலை ஓரம் ஓய்வு 
அழைப்பு மகிழ் உந்துகள்.



66) இறப்புக்குப் பின்னும் 
தொங்கலில் வாழ்க்கை
கசாப்புக் கடை.



67) வாடிக்கையாளர்கள் இறைவன்
கடப்போருக்கு பத்ர அரச்சனை 
அங்காடி வாழையிலைக் கடை.



68) கட்டண நிறுத்தமே வாய்ப்பதில்லை
சிறுநீர் நடைபாதையே வாய்க்கிறது
பணக்காரர்களின் சொகுசு உந்துகளுக்கு.



69) சூடான கல்லுக்கும் கரண்டிக்கும் போர்
வீரமரணம் அடைந்தது மாவீரன் மாவு 

உடலெங்கும் விழுப்புண்கள்.


70) சுடப்பட்டு இறந்தது மாவு
உடல் முழுவதும் துளைகள்
தோசையாய் மறுபிறவி.



71) இரங்கல் பேரணி
தொண்டர்கள் அஞ்சலி
உணவகத்தில் சுட்டு.



72) காற்று மாசு எதிர்ப்புப் போராட்டம் 
கட்சித் தலைவர்களுக்கு வரவேற்பு
பத்தாயிரம் வாலா முழக்கத்துடன்.


73) பட்டை திருநீறு குங்குமம் 
ஆத்திகக் கோலத்தில்
ஆயுத பூசை அலமாரிகள்.


74) நதியின் புனித நீராட்டு விழா 
முடியக் காத்திருந்தன
உள்ளூர் கனரக வாகனங்கள்.


75) ஊரெங்கும் ஒளி வெள்ளம்
ஏழைப் பங்காளர் இல்லத் திருமணம்
இருண்டு கிடந்தது ஏழையின் இல்லம்.


76) ஒன்பது நாள் கால்கடுக்க நின்றன
ஓராண்டு உறக்கம் கொள்ள
கொலு பொம்மைகள்.


77) தண்ணீர் ஊற்ற ஊற்ற
அதிவேகமாய் வளர்ந்தது
வயிற்றுப் பசி.


78) எவ்வளவோ தண்ணீர் விட்டும்
அணைக்க இயலவில்லை
வயிற்று நெருப்பு.


79) கையில் கத்தி
வருகைக்கு காத்திருப்பு
மேலை நாட்டு உணவகம்.


80) செருப்பு கட்டிய முருங்கைமரம்
அவமானத்துடன் கோபம்
சாட்டையாய் காய்கள்.


81) தலைவர்கள் வீட்டு சுற்றுச்சுவர்
சுத்தமாக வெள்ளையாய் 
தெரு நிறைந்து விளம்பரங்கள்.


82) செல்லுமிடம் அறியவில்லை
ஊர்வலத்தின் காரணகர்த்தா
இறுதி ஊர்வலம்.


83) வெளிநாடுகளில் பிள்ளைகள்
இந்தியாவில் பெற்றோர்
விற்கப்பட்ட தெய்வச் சிலைகள்.


84) நொடிக்கொரு முறை கோவிந்தா
பகுத்தறிவு தலைவர்
தனி உதவியாளர் அழைப்பு.


85) விலக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை
தள்ளிப் போனது இடைத்தேர்தல்
கொட்டவில்லை பணமழை.

86) ராமனையும் சீதையையும் 
சேர்த்து வைத்தது
சிலைக் கடத்தல் தடுப்புத்துறை.


87) பலங்கொண்டு அடிக்க அடிக்க 
நிற்காமல் அதிகமாகிறது 
கோவில் மணி ஓசை.


88) மழையில் நிரம்பியது அற்றகுளம்
சோகத்தில் சிறுவர்கள் 
விளையாட மைதானம் இல்லை.


89) சுற்றுச்சூழல் சீர்கேடு
மௌனமாகக் கண்ணீர்
அறை குளிர்பதனக் கருவி.


90) தெருப் பெயர் பலகை
வழிகாட்டியது மறுமைக்கு
ஒட்டப்பட்ட சுவரொட்டி.


91) நேற்று தொடங்கியது தேர்வு
முன்னரே தரப்பட்டது மதிப்பெண்
ராசிகளுக்கு குரு பெயர்ச்சி.


92) ஊர் மந்தை ஆலமரத்தடி
ஒன்றாகவே ஆடும் புலியும்
விளையாட யாருமற்ற கட்டம்.


93) எளிதாக வந்தது
கொழுத்த லாபம்
வடையில் பெரிய துளை.


94) பையில் விற்காத முகமூடிகள்
மறைக்காமல் காட்டுகிறது
விற்பவரின் சோகம்.


95) திரண்டதும் அடித்துக் கலைப்பு 
முழங்கினாலும் போராட்டம் இல்லை
வானில் கரு மேகங்கள்.


96) வல்லவனுக்கு வல்லவன்
தனியார் பள்ளியில் பெட்டியை 
உடைத்துக் கொள்ளை.


97) படைத்தவனுக்குப் படையல்
நாலு வரி நோட்டு 
தலையெழுத்து சரியில்லை.


98) மேடு பள்ளங்கள் இல்லை
பிடிப்பின்றி ஓடுகிறது 
தேய்ந்து போன டயர்.


99) தரம் பார்க்காமல் எடுத்துச் செல்ல 
மூட்டை மூட்டையாக இலவசங்கள் 
முகநூலில் பொய்த் தகவல்கள்.


100)  சாலை நடைமேடைக் கொலு 
வரிசையாய் பொம்மைக் கடைகள்
பக்கத்து உணவகத்தில் சுண்டல்.


Tuesday, 26 February 2019

முதல் மணி

1) முதல் மணி அடித்து விட்டது
நேரமாகி விட்ட பதைபதைப்பு
கோவிலில் நுழைகிறார் இறைவன்.



2) கிழட்டு கடலலைக்குப் பார்வை மங்கல் 
தினம் வரும் என்னை வந்து வந்து பார்த்து 

அடையாளம் தெரியாமல் திரும்புகிறது.


3) பிறவிப் பெருங்கடல் கடக்கப் பயிற்சி
பிறவி எடுக்க பெருங்கடல் 
நீந்திக் கடக்கும் உயிரணுக்கள்.



4) வேகமாக வந்து தாக்கியதும்
திசைக்கொன்றாக சிதறி ஓட்டம்
கேரம் விளையாட்டு காய்கள்.



5) அடிபட்ட வெண்புறா மாற்றாக
அரிந்து தரப்பட்டது தொடை 
மாமிச விற்பனைக் கடை.



6) நின்று தேங்கி மெல்ல ஓடுகிறது
பாதை சரியில்லை
மணல் எடுத்த நதியில் நீர்.



7) பேசாத வியாபாரி
கூவிக் கூவி விற்பனை
ஒலிப்பானில் பதிவிட்ட விளம்பரம்.



8) மாம்பழம் கிடைக்க வாய்ப்பில்லை
இருந்தும் விடாமல் உலகை
சுற்றுகிறது சந்திரன்.



9) முள்ளிலிருந்து விடுபட்டதும்
மகிழ்ச்சியில் துள்ளுகிறது
கூடையில் போடப்பட்ட மீன்.


10) அந்தகனின் பிச்சைப் பாத்திரம்
குலுக்கியதும் துள்ளிக் குதிக்கின்றன
செல்லாக் காசுகள்.



11) வீட்டுக்குச் செல்ல நேரமாகி விட்டதோ 
மணி பார்த்துக் கொண்டிருந்தது
மணிக்கூண்டில் மாலைச் சூரிய ஒளி.



12) பல இடங்களில் வேகம்
சில இடங்களில் நின்று பயணம்
தொடுதிரை கைபேசியில் விரல்.



13) தினந்தோறும் காதலர் தினம் 
கை நிறையக் காதல் பரிசுகள்
காற்று சுமந்த மகரந்தங்கள்.



14) யாருக்கும் கெடுதல் செய்யவில்லை
அடித்துத் துரத்த மகிழ்ச்சி ஆரவாரம்
கிரிக்கெட் விளையாட்டில் பந்து.


15) காற்று வந்து கட்டி அணைக்க
வாழ்வை முடித்துக் கொண்டது
துடித்துப் போன தீபச் சுடர்.



16) ஆவேசமாய் கட்டி அணைக்க
வந்தது சூறைக்காற்று
நடுங்கியது தீபச் சுடர்.



17) காதலர் தினம் 
பூங்காவில் கையில் தாலியுடன் 
பண்பாட்டுக் காவலர்கள்.



18) நாளை காதலர் தினம்
இன்றைக்கே வானில் பறந்த
ஏற்றுமதியான ரோஜா மலர்கள்.



19) அடி மேல் அடி வைத்து 
யோசனையுடன் இடதும் வலதுமாய் 

உலாவுகிறது கவிஞனின் பேனா.


20) தலை விரித்துச் சாமியாடியது
பேய் பிடித்ததாக நம்பப்பட்ட
ஒற்றைப் பனை தேரிக் காற்றுக்கு .



21) நீர் இன்றி வாடவில்லை
அழகான வண்ண மலர்கள்
பீங்கான் சாடியில் நெகிழிச் செடிகள்.



22) மருத்துவமனையில் இறப்பு அறிவித்ததும் 
கொளுத்திய கையோடு புதுசாய் சித்தி 
பழையன கழிந்து புதியன புகுந்த போகிப் பண்டிகை.



23) உள்ளே போய் வெளியே வருபவர்கள் 
பட்டணத்தார் போன்று மாற்றம்
நியாய விலைக்கடை பொங்கல் பரிசு.



24) இரவுக்கு ஆயிரம் கண்கள்
எல்லாக் கண்களிலும் மையெழுதி
கருத்திருக்கிறது வானம்.



25) விண்மீன்களுக்கு நூறு சதம் இட ஒதுக்கீடு
கோபத்தில் வரவில்லை நிலா
கருப்பு அணிந்த வானம், அமாவாசை.



26) மௌனமாக கை கழுவ
மேசை மீது காத்திருந்தது ரசீது
கை விடப்பட்ட நோயாளிக்கு.



27) புண்ணிய நதிகளில் நீராட
வேகமாகக் கரைந்தது
பக்தனின் குளியல் சோப்பு.



28) மார்கழி மாத சபா இசை நிகழ்ச்சிகள்
எதிர்பார்த்து ஏங்கிய ஆர்வலர்கள்
சிற்றுண்டிச் சாலை உணவு வகைகள்.



29) புத்தாண்டின் முதல் ஏமாற்றம்
பல் பொருள் அங்காடியின் அறிவிப்பு
"ஆயிரம் ரூபாய்க்கு மேல் இலவச தின நாள்காட்டி".



30) சுண்ணாம்பு காணாத சுவர்கள்
வீட்டின் வறுமையை மறைக்க
புதிய நாட்காட்டி கிடைக்கவில்லை.



31) அழகான இதழ்களைக் காட்டி மயக்கி
திருட்டுத்தனமாகக் குடித்துத் தீர்க்கின்றன
குளத்து நீரைத் தாமரை மலர்கள்.



32) நடைபாதை கிருஸ்மஸ் மரம்
புதிய கிழியாத காலுறைகள்
கட்டிச் சென்றார் சாண்டா தாத்தா.



33) நடுநிசியில் ஆலய மணி ஒலி 
திடுக்கிட்டு விழித்த கடவுளர்கள்
ஆங்கிலப் புத்தாண்டு தினம்.



34) ஆங்கிலப் புத்தாண்டு பலன்
திருவாதிரைக்கு வெளிநாடுபயணம்

கடத்தப்பட்டது நடராசர் சிலை.


35) ஆங்கிலப் புத்தாண்டு தின நடுநிசி
அமைச்சர்கள் முகத்தில் விழிக்க
காத்துக் கிடந்தனர் இந்துக் கடவுளர்கள்.



36) நட்டாற்றில் மண்குதிரை
பயமின்றி அய்யனார்
ஊர் முழுதும் பெரு வெள்ளம்.



37) தினந்தோறும் கோடிகளில் புரண்டும்
அதிகமாக ஒன்றும் ஒட்டவில்லை
பங்குச் சந்தை வியாபாரம்.



38) சாய்ந்து சுவரோரம் ஓய்வு
ஊனமுற்ற இரப்பவனின்
செயற்கைக் கால்கள்.



39) அலங்கார சிம்மாசனத்தில்
அழுக்கு உடைக் காவலன்
ஆளில்லா திருமண மண்டபம்.



40) இக்கரையும் அக்கரையுமாய்
அலையும் மேய்ச்சல் மாடோ
காலம் மேயும் கடிகார ஊசல்.



41) அங்குமிங்கும் அலைந்து
காலத்தைக் கழிக்கும் கடிகார ஊசல்
கைவிடப்பட்ட பெற்றோரோ?



42) இடதும் வலதுமாய் ஓடி ஓடி 
அலைகிறதே இந்த கடிகார ஊசல்கள்
தேர்தல் கூட்டணிக்கு முயற்சியோ?



43) காத்திருக்கும் காதலனோ 
பொறுமையின்றி இடதும் வலதுமாய்
அலைகிறதே கடிகார ஊசல்.


44) அங்குமிங்கும் அலைகிறதே
இந்த கடிகார ஊசல்கள்
தேடுபவர் கிடைக்கவில்லையோ?



45) ஆயுதம் காட்டாமல் அகிம்சை மிரட்டல்
தேர்வடச் சங்கிலி கட்சிக்கரை வேட்டி 

சட்டைப்பைக்குள் சிரிக்கும் தலைவர்கள்.


46) பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் 
போராடாமல் அகிம்சையாக நிறைவேற 

சட்டைப்பையில் கனக்கிறார் தேசப்பிதா.




47) பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினர்
ஏட்டுக்கல்வி கற்காத பாமரர்கள்
புயல் நிவாரண முகாம்.


48) பூங்காவில் காலியாக இருக்கைகள்
காதல் சோடிகள் யாருமில்லை
அந்தி நேரத்தில் மழை.

49) இரவு முழுவதும் வானும் மண்ணும்
வாய் ஓயாது ஆசையாய் பேசியது
செய்தியில் கனமழை.

50) ஒன்றுக்குப் பத்தாகத் தலைகள்
சிந்திக்கத் தோன்றவில்லை
இலங்கை வேந்தன்.