Saturday, 25 March 2017

முகநூல் கிறுக்கல்கள் (1)

(1) பறவையின் பாதை
கடற்கரை மணலில் நடந்த மனிதனின்
காலடித் தடங்களை ஓடி வந்து அழிக்கும்
அலையாக பறவைகளின் தடத்தை
அழித்து விளையாடுகிறது
மெலிதாய் வீசும் காற்று.

(2) விருட்சப் பாதை 
தான் பறந்த பாதையை
காற்று அழித்து விடும்
என்பதை அறிந்த பறவைகள்
வழியறிய புவி மீது விருட்சங்களை
விதைத்தபடி செல்லுகின்றன.

(3) பாதை தெரிந்தவன்
காற்றைக் கண்ணால் காணும்
வித்தை அறிந்தவனுக்கு வானில்
பறந்த பறவைகளின் பாதையைக்
காண்பதும் சாத்தியம் தான்.

(4) வாதை 
வலியோ வேதனையோ இல்லாது 
உறக்கத்தில் மரணம் யாசித்த 
இருதய நோயாளிக்கு இறைவன் 
மனமிறங்கி சர்க்கரை நோயையும் 
கூடுதலாக அருள்பாலித்து நிறைவேற்றினான்.

(5) படப்பிடிப்பு
தினம் டைரக்டர் யமதர்மனிடம் திட்டு 
வாங்குவதே வாடிக்கையாப் போய்விட்டது. 
இந்த மனிசங்க சரியாக நடிக்காமல் 
எத்தனை டேக் வாங்கி நம்ம உயிரெடுக்கிறாங்க 
என்று சித்திரகுப்த மேனேஜரிடம் 
புலம்பிக் கொண்டிருந்தாள் நித்திரா தேவி, 
உணவு இடைவேளையில்.

(6) கணக்கு நோட்டு
என்ன இது? 
பாபக் கணக்கை எல்லாம் 
புண்ணியக் கணக்கு நோட்டில்
தலைப்பை மாற்றி எழுதி
எடுத்து வருகிறாய் என்ற 
எமதர்மனிடம் பாபக் கணக்கு நோட்டுகள் 
விரைவில் காலியாகி விடுகிறது. 
புண்ணியக் கணக்கு நோட்டுகள் 
பல அப்படியே எழுதப்படாமல் காலியாக 
உள்ளன என்றான் சித்திரகுப்தன்.

(7) உறக்கம் 

எத்தனை மணி நேரம் 
எத்தனை நாள்
எத்தனை முறை 
ஒத்திகை 
கண் இமைக்கும்
கண நேர மரணத்திற்கு.

(8) வர்ண ஜாலம்

பெருமழை பெய்த நாளின்
பின் மதியப் பொழுதொன்றில்
வழுக்கும் சேற்று சாலையில் 
பொத்தல் விழுந்த குடை ஒருகையிலும் 
மறு கையில் சீமெண்ணைப் போதலுமாய் 
நடந்து வந்த அந்த ஏழைச் சிறுவன் 
கால் வழுக்கிய கணத்தில் 
கை தவறி உடைந்த போத்தலில்
மிகுந்த சிரமத்திற்கிடையே 
வாங்கி வந்த மண்ணெண்ணைய் 
சேற்று நீரில் காட்டிய வர்ணஜாலத்தை 
ரசிக்க முடியவில்லை.

(9) உயிர்ப்பயணம்

அண்டவெளியில் உயிர்களின் வாழ்க்கைப் பயணம் 
முடிவற்ற பயணத்தின் பல கட்ட ராக்கெட்டாக பூத உடல்கள்
ஒவ்வொரு கட்டமாக ராக்கெட்டுகள் இறப்பில் கழன்று விழ
முன்னேறும் பயணத்தில் அதிவேகமாக எரிந்தவாறு வெளியேறிக் கொண்டிருக்கிறது கணநேரமும் நில்லாத காலமெனும் எரிபொருள் 
செயற்கைக்கோள் பளுவாக ஏற்றிச் செல்லும் ஆன்மா 
எரிபொருள் தீர்ந்து இந்திரிய இன்பமெனும் 
வட்டப் பாதையில் நிலை பெற்று விட்டால் 
அதில் உழன்றபடியே சுற்றிச் சுற்றி வந்தழியும்
ராக்கெட்டை செலுத்தியவனையும் செல்லுமிடத்தையும்
அறிதலே வாழ்வின் பொருள் என்பதுணர்ந்த ஆன்மா 
கல்பகோடி காலத்தில் தானாகவே
அண்டமாகிப் போகிறது.

(10) இரட்டை வேடதாரிகள்
அன்னையர் அனைவரும் தெய்வம் என்று ஒருபுறம் சொல்லி 
விலைமகள் என்று மறுபுறம் எள்ளி 
இரட்டைவேடமிடும் வெட்கம் கெட்ட 
கேவலமான சமூகம் 
வரப்போகும் யாரோ ஒருவனுக்காக நள்ளிரவிலும் தன்னை அழகு படுத்திக் கொண்டு 
கதவு திறந்து காத்திருக்கும் பாலியல் தொழிலாளி நிலைக்கு 
தன்னையும் ஆக்கி விட்ட வேதனையிலும்
அந்தகைய கேடு கெட்ட மனிதர்களுக்கும் அலங்காரமாய் 
ஆசி வழங்க ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் 
நடு இரவில் ஆலயங்களில் செய்வதறியாமல் பரிதாபமாக நின்றன 
சிலையாகிப் போன பெண் தெய்வங்கள்.

(11) முதிர்ச்சி
அந்த கூட்டத்தில் இலக்கிய மழையில்
நனைந்து வீடு திரும்பிய இளைஞனின்
தலை நரைத்துப் போய் இருந்ததது.

 (12) விதி 
வண்டி இழுத்த போது அடிவாங்கிய
மாட்டின் தலைவிதி இறந்தும்
இன்னும் பலமாக மேள வாத்தியத்தில்
வாங்க வேண்டும் என்று எழுதியிருந்தது.

1 comment:

  1. பத்தாவது மிகவும் அருமை நண்பரே - கில்லர்ஜி

    ReplyDelete