Friday 10 November 2017

முகநூல் கிறுக்கல்கள் (8)

1) பள்ளிக்களுக்கு விடுமுறை இல்லை 
உற்சாகமாக மேகச்சீருடை
அணிந்து வந்து விடுகிறது மழை.

2) கடிகாரச் செக்கில் ஆட்டிய
வாழ்க்கையில் கசப்பும் இனிப்புமாக
பிண்ணாக்கு நினைவுகள்.

3) வான் நோக்கிய சிறு வட்டக் குடையில்
விடாது பொழிகிறது பொய் மழை
தொலைக்காட்சி செய்திகள்.

4) வீட்டுக்குள் தொலைக்காட்சியில்
ஆர்வமாய் செய்தி பார்க்கும் சிறுவன்
வெளியே தூறலாக மழை.

5) கரைக்குத் தன் காதலைச் சொல்ல
சரியான வார்த்தை கிடைக்கவில்லை
அழித்தழித்து எழுதும் அலை.

6) வெட்டிக் கூறிட்டுக் காணாமல்
போய் விட்ட மலையின் சிறுபகுதி
என் வீட்டுச் சமையலறையில்.

7) கழுத்தை நெரிக்கும் கடன்  சாராயக்கடையில் மதுப்புட்டியின்
கழுத்தைத் திருகுபவனுக்கு.

8) பள்ளிக்களுக்கு விடுமுறை இல்லை  உற்சாகமாக மேகச்சீருடை அணிந்து வந்து விடுகிறது மழை.

9) சிலையான தலைவர்கள்
கூண்டுச் சிறையில்
சாதிக் கலவரம்.

10) ஓடி வரும் வெள்ள நீருக்கு
 நெடுக அலங்கார வளைவுகள்
ஆற்றுப் பாலங்கள்.

11) தினமும் ஒரு துளி உதிரம் சுவைத்த காட்டேரி காட்டியது நான் எவ்வளவு இனியவன் என, குளுக்கோமீட்டர்.

12) சிக்கலான கணக்குகளைத் தீர்க்கத் திறமையிருந்தும் காட்டிக் கொள்ளத் தெரியவில்லை, கால்குலேட்ருக்கு.

13) எண்ணெய் சிந்திய சாலையில்
இரவில் பெய்த மழை நீர் காலையில்  போட்டுருந்தது  ரங்கோலி.



14) நந்தவனத்தில் உறங்கும்
எலும்புக் கூடுகள்
கல்லறைத் தோட்டம்.

15) மேசைக்கு அடியில் பிறக்கிறது
குழந்தை வெள்ளுறை
உடையோடு, கையூட்டு.

16) எத்தகைய கொடும் பாவியும்
புனிதனாக ஒரே ஒரு இறப்பு போதுமானதாக இருக்கிறது.

17) தவறான வழியில் வரும்
'வருமானம்' பிடிபடும் போது
ஊரெங்கும் 'போகும் மானம்'.

18) அமைச்சர்களுக்கு முன் வாய்பொத்தி பவ்யமாகப் பேசினார் மறைந்த கட்சித்தலைவர், படப்பிடிப்பில்.

19) பாதங்களால் நிறைந்த வீடு.

நன்றாக நினைப்பிருக்கிறது பல முறை பாதங்களால் நிரம்பி இருந்தது வீடு அப்போது அப்பா தேர்தலில் போட்டியிட்டார்
அவர் வென்ற செய்தி வரும் வரை முதலில்

அடுத்து செங்கமல அக்கா கல்யாணத்தில்
மூன்று நாளா வீடு பாதங்களால் நெறஞ்சிருந்தது.

புயலும் மழையும் அடித்த போது, பின்கட்டில் மணக்க மணக்க உணவும் வீடு நிறைந்த சனங்களுமா நிறைந்திருந்தது.

போன வருஷம் பொங்கல் போது உறவினர்கள் குழந்தை குட்டிகளுடன் வந்து கொண்டாடிய போது

அப்புறம் ஆட்சி மாறிப் போய் விட்டாலும் அப்பா வெற்றி பெற்ற போதும் ராப்பகலா
வருமான வரி ரெய்டு வந்த போது

தப்பெதுவும் செய்யாவிட்டாலும் மானம் போன அதிர்ச்சியில் அப்பா மாரடைப்பில் இறந்த நாளில்

இப்படி பல வேறு காலங்களில் பாதங்களால் நிரம்பிய வீடு மனதை  நினைவடிகளால் தனியாகவே நிரப்பியது.

20) சீட்டெடுக்கும் கிளிகளுக்கு
சிறகுகள் தேவையில்லை
நெல் மணிக் கூலியே போதும்.

21) சுற்றி வந்தவன் தோள்
சுமந்த  மண்பானை துளைகளின்
வழியே ஒழுகுகிறது பந்தம்.


No comments:

Post a Comment