Monday, 17 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (7)

(61) "அண்டை நாட்டு அரசரின் பேச்சு வாஸ்துவமான பேச்சு என்கிறார்களே அமைச்சரே, உண்மையா"?
"ஆம். மன்னா. அவர் பேசும் போது ஒவ்வொரு சொல்லையும் வாஸ்துப்படி திசை பார்த்துத்தான் பேசுவார்".


(62) "அந்த பத்திரிக்கையில் இந்த வாரம் வெளி வந்துள்ள கதை, கட்டுரை, கவிதை எல்லாவற்றிலும் வார்த்தைகள் கோர்வையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளதே, அமைச்சரே"

 "ஆம் மன்னா, அந்த பத்திரிக்கை இந்த வாரம் வாஸ்து சிறப்பிதழ் ஆக வெளி வந்துள்ளது”



(63) "மதுபானக் கடைகளில் 'கட்டிங்' பிரிப்பதில்தான் நிறைய தகராறுகள் வருகிறது என்று பத்திரிக்கைகளில் அடிக்கடி செய்தி வருகிறதே அரசே. என்ன செய்யலாம்"?
ஒவ்வொரு மதுபானக் கடையிலும் ஒரு
'கட்டிங் அம்புட்ஸ்மன்' பதவியை உருவாக்கி சரியாக அளந்து தர ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே".



(64) "பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பதை உடனடியாகத் தடை செய்யச் சொல்லி திடீரென உத்தரவிட்டீர்களே மன்னா, என்ன காரணம்"?
"ஒன்றுமில்லை. அதில் வரையப்பட்டுள்ள படம் அரசியின் முகச் சாயலில் இருக்கிறதென்று அரசியார் கோபமாக இருப்பதால்தான் அமைச்சரே".


(65) "மன்னர்மன்னா, சக்கரவர்த்தி பிரிக்ஸ் உச்சி மகாநாட்டை நாம் நடத்த ஆணையிட்டுள்ளாரே. ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா"?
"ஆம் அமைச்சரே, எல்லா செங்கல் சூளை முதலாளிகளுக்கும் உடனே அவசரச் செய்தி அனுப்பி விடுங்கள்".

(66) "என்ன அமைச்சரே, கோவிலுக்குச் செய்து வந்த தங்க ரதம் ஏன் பளபளவென்று ஜொலிக்காமல் கருத்துப் போய் இருக்கிறது என்று பக்தர்கள் கேட்கிறார்களே. என்ன நடந்தது"?
"அது மன்னா, கருப்புப் பணத்தில் வாங்கிய தங்கத்தில் செய்தது அல்லவா அதனால் அப்படி உள்ளது".

(67) "அரசே உங்கள் வீரத்தை கேலி செய்து புடவை, பிளவுஸ் பிட், வளையல், குங்குமம் எல்லாம் பக்கத்து நாட்டரசர்கள் அனுப்பியுள்ளார்கள். அவற்றை என்ன செய்ய மன்னா"?
"தீபாவளி நேரமல்லவா. தி. நகர் ரங்கநாதன் தெருவில் அவற்றை விற்க உடனே அமைச்சர்கள் செல்ல உத்தரவிடுகிறேன்".

(68) "மகாராஜா பெண்கள் ஆடை அணியகம் என்று ஒரு புது கடை திறந்துள்ளது மன்னா. வியாபாரம் சக்கைபோடு போடுகிறது மன்னர்மன்னா. கடை கல்லாவில் நம் வணிக அமைச்சரைப் பார்த்தேன் அரசே".
"அடப்பாவி நமக்கு வந்த புடவை மற்றும் இதர ஐட்டங்களை ஆட்டைய போட்டு விட்டானா. யாரங்கே கடையை உடனே சீல் வையுங்கள்".


(69) "அமைச்சரே, என்னவோ தெரியவில்லை இன்று காலை முதல் தன்மான உணர்ச்சியும், ரோசமும் மனதில் உற்றெடுக்கிறது".
"ஒரு கால் இன்று காலையில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் பற்பசை வைத்து பல் துலக்கியதால் இருக்குமோ அரசே"?


(70) "அமைச்சரே, தலைநகரில் எங்கே நான் நகர்வலம் போனாலும் கண்ணில் படும் இடத்தில் எல்லாம் ஒரே நாய்கள் கூட்டம் துரத்தி வருகிறது என்ன செய்யலாம்"?

"உங்களுக்கு கண்ணில் பொரை இருப்பதால் இருக்கலாம் மன்னா. உடனே கேட்ராக்ட் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்கிறேன்".


Friday, 14 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (6)

(51) "அண்டை நாட்டு விஷயமாக உங்கள் செயல்பாட்டைக் கண்டித்து சக்கரவர்த்தி அறிக்கை விட்டுள்ளாரே மன்னா. என்ன காரணம் மன்னா"
"ஒன்றுமே புரியவில்லை அமைச்சரே. அண்டை நாட்டரசர் திருநாடு ஏகியதாகத் தகவல் வந்தது. உடனே நல்லெண்ண நடவடிக்கையாக பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பத்திரிக்கைகளில் முழுப்பக்கம் வாழ்த்தி விளம்பரம் கொடுத்தேன்"

 (52) "ஆமாம் அமைச்சரே,
இந்த அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்று ஒரேயடியாக பத்திரிக்கைகள் எழுதுகின்றனவே".
"அதுவந்து......மன்னா"
"என்ன வந்து நொந்து... உடனே எத்தனை புது இயந்திரங்கள் தேவை என்று கணக்கெடுக்கும் பணியைத் துவக்குங்கள்".

(53) "அமைச்சர்கள் அனைவருடைய கரங்களும் கறைபட்ட கரங்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களே, இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் அமைச்சர்களே"?
"அது மன்னா, அரசு இயந்திரங்களை பழுது பார்த்த போது அப்படிக் கறை ஆகி விட்டது."


(54) "என்ன அமைச்சரே, இந்த முறை பட்ஜெட்டில் புதியதாக வரி போட்டிருக்கிறீர்களே, அது எதற்கு"?
"மன்னர் மன்னா, அது அரசு இயந்திரங்கள் உராய்வின்றி இயங்க இனிமே நிறைய 'கிரீஸ்' மற்றும் மசகு எண்ணெய் எல்லாம் வாங்க வேண்டுமல்லவா".


(55) "அண்டை நாட்டரசரை நான் நம் கலாச்சார விருந்திற்கு அழைத்ததில் என்ன தவறு? அந்த நாட்டுப் பத்திரிக்கைகள் 'பரோட்டா கால்' தவறு என்று விமர்சிக்கின்றன.என்ன பிரச்சனை"?

"அது ப்ரோட்டக்கால் (Protocol) என்ற அரசாங்க நெறிமுறை அரசே"






(56) "அமைச்சரே, நம் இளவரசியின் சுயம்வரத்திற்கு எல்லா அண்டை நாடுகளுக்கும் தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பி விட்டீர்களா?
"ஆம் அரசே, எல்லா நாட்டரசர்களுக்கும் இளவரசியின் பாரத் மேட்ரிமோனி புரொபைல் எண்ணை ஈ - மெயில் செய்து விட்டேன்"


(57) "அண்டை நாட்டரசர் என்னை போராளி என்று ஐக்கிய குறுநில மன்னர்கள் சபையில் பேசி என் புகழை உலகறியச் செய்தாராமே அமைச்சரே"
"அதுவா மன்னா, பதுங்கு குழியில் இருந்த படி கம்பு சுற்றி, உதார் விடுவதால், உங்கள் வீரம் முகநூல் போராளியை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று குறிப்பிட்டார்".



(58) "அமைச்சரே, அரண்மனையை Gated community ஆக மாற்றி விடுங்கள். ஆதார் அட்டை காட்டினால்தான் அனுமதி என்று உத்தரவிடுகிறேன்"?
"ஏன் மன்னா, இப்போதுள்ள காவல் போதுமே...... இன்னும் ஏன் கூடுதல் செலவு".
"நேற்று இரவு யாரோ ஒருவன் என்னைத் போல் உடையணிந்து என் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். நல்லவேளை நேற்றிரவு அரசியார் ஊரில் இல்லை". 



(59) "அரசே குடி நீர் பிரச்சனை தீவிரமாக உள்ளது. எங்கே பார்த்தாலும் ஒரே போராட்டமாகவே உள்ளது. என்ன செய்ய மன்னா"?
"மங்குணி அமைச்சரே, எல்லா மதுபானக் கடையிலும் ஒரு குவாட்டருக்கும் ஒரு பாக்கெட் தண்ணீர் இலவசமாக தந்தால் பிரச்சனை தீர்ந்து விடுமே". 



(60) "நவராத்திரி விழாவை முன்னிட்டுக் குடி மக்கள் மனம் மகிழ்ச்சியடைய ஏதோ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வரச் சொன்னீரகளே மன்னா"?

"ஆம். அமைச்சரே, இனி ஆண்டு தோறும் எல்லா மதுபானக் கடைகளிலும் அந்த ஒன்பது நாட்களிலும் வாங்கும் குவாட்டர்களுக்கு 100 கிராம் கடலைச் சுண்டல் இலவசமாக வழங்கி குடி மக்கள் உடல் நலம் பேணப்படும் என்று உடனே அறிவியுங்கள்".

Sunday, 9 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (5)

(41) "என்ன அமைச்சரே,ஆயுத பூஜைக்கு ஒரே பேப்பர் கட்டுக்களாக வைத்திருக்கறீர்கள்".
"ஆம் மன்னா, நாம் கொட்டேஷன் பில் மட்டும் தானே வாங்கினோம்".

(42) "வாங்கிய ஆயுதங்களின் புகைப்படம் அல்லது வீடியோ காட்ட வேண்டும் என்று மக்களை பங்காளிகள் தூண்டி விட்டுக் கலவரம் செய்ய சொல்கிறார்கள் அரசே"
"யாரங்கே, பழைய சுதந்திர தின அணி வகுப்பு வீடியோவை போட்டோஷாப் செய்து காட்டி மக்களை திருப்திக்கு படுத்த தெரியாத இந்த அமைச்சரை கழுவேற்ற உத்தரவிடுகிறேன். இழுத்துச் செல்லுங்கள்".

(43) "மன்னா, பேப்பர் ஆயுதத் திட்டம் பற்றி அறிந்து கொள்ள ராணுவ அமைச்சரான எனக்கு ஆவலாக உள்ளது"
"ஆயுதங்கள் வாங்காமல் அதற்கான 25 சதவீதம் காசை சக்கரவர்த்தியின் அரசில் ஒப்படைத்தால் காகிதத்தில் ரசீதும் 75 சதவீதம் கமிஷனும் தருவார்கள். போரின் போது ரசீதைக் காட்டி ஆயுதங்களை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் அமைச்சரே. இதனால் எந்த பராமரிப்புச் செலவு இருக்காதாம்".

(44) "அரசே, ஆயுத பூஜைக்கு வந்த மக்கள் ஆயுதங்களுக்குப் பதில் பேப்பர் கட்டுக்களைப் பார்த்து கோபமாகி ஆயுதங்களைக் காட்டச் சொல்லி பிரச்சனை பண்ணுகிறார்கள்".
"நாம் பேப்பர் ஆயுதத் திட்டத்தில் ஆயுதங்கள் வாங்கியதை எடுத்துச் சொல்லவில்லையா, அமைச்சரே"

 (45) "அரசே, வாங்கப்பட்ட ஆயுதங்கள் பட்டியலை எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியிடுங்கள் நம்வீரர்கள் சந்தேகம் நீங்கி விடும்".
"ஆம். அமைச்சரே. முதுகுக் கவசமும், கனத்த செருப்பும் மட்டுமே ஒரு இலட்சம் வாங்கியிருக்கிறோமே.தைரியமாக புறமுதுகிட்டு ஓடி வரலாமே"



(46) "காவலன் போல வேடமிட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் நகர்வலம் போன அரசர் இன்னும் வரவில்லை அமைச்சரே, கவலையாக உள்ளது".
"கவலை வேண்டாம் அரசியாரே, வி.ஜி.பி தங்கக் கடற்கரை நுழைவாயிலில் சிலை மனிதனாக நிற்க வைத்து விட்டார்களாம்".

(47) " லோக் பாதாலத் அமைப்பை ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளீர்களே அரசே, அப்படி என்றால் என்ன அமைப்பு அது என்று சட்ட வல்லுநர்கள் கேட்கிறார்கள் மன்னா"
"தீர்ப்பளித்து முடிவு கட்டக் கூடாத அரசியல்வாதிகள் வழக்குகளை பாதாளத்தில் கிடப்பில் போடும் அமைப்பு தான் அது அமைச்சரே"

(48) "அரசே, மகாராணியாரை நம் தலைநகரின் மேயராக அறிவித்து விட்டீர்களே. மேயர் பதவி என்ன குடும்ப சொத்தா என்று கேட்டு சிலர் கலகம் செய்கிறார்கள்"
"அரசியார் ஒற்றனிடம் நான் காலையில் நடைப் பயிற்சி செல்லும் நேரத்தையும், பூங்காவையும் அல்லவா கேட்டார். அதனால்தான், அமைச்சரே"

(49) "தலைவரே, பஞ்சாயத்துத் தேர்தலை தள்ளி வச்சிட்டாங்களே உங்கள் கட்சி நிலைப்பாடு என்ன"?
"அதுவரை இடைக்கால பஞ்சாயத்தாக கடடைப்பஞ்சாயத்து செய்ய அனுமதி கேட்டிருக்கிறோம்"


(50) "அமைச்சரே, அடுத்த மாதம் முதல் மழைக்காலம் அல்லவா. என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்"?

"ஐந்து சிறிய சொகுசு நீர்மூழ்கிப் படகுகள் பதுங்கு குழி பயன்பாட்டிற்கு வாங்க உலகளாவிய டெண்டர் விட்டு இருக்கிறோம் மன்னா".

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (4)

(31) "அமைச்சரே, ஒரு சந்தேகம் நம் நாட்டிற்கும் பக்கத்து நாட்டிற்கும் இடையில் இந்த லைன் ஆப் கண்ட்ரோல் என்கிறார்களே அது எங்கிருக்கிறது? நான் பார்த்ததே இல்லையே".
"இருக்கிறது மன்னா, நீங்கள் வெட்டியுள்ள முதல் பதுங்கு குழியிலிருந்து 100 கிமீ தூரத்திலுள்ளது".



(32) "நம் நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்கள் அண்டை நாட்டில் தாக்கப்படுவதையும், அவர்கள் நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்கள் இங்கு தாக்கப்படுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் அரசே"?
"இனி இரு நாட்டிற்கும் இடையில் ஓடும் எல்லா வாகனங்களுக்கும் நமது எல்லையில் தற்காலிகமாக அந்தந்த மாநில போலிப் பதிவெண் போர்டு மற்றும் ஆர்.சி புத்தகம் 10000 ரூபாய் கட்டினால் உடனே வழங்க தக்க ஏற்பாடுகள் செய்து விடலாம் அமைச்சரே".


(33) "அமைச்சரே உடனே அண்டை நாட்டில் மன்னருக்கு அவசரச் செய்தி அனுப்புங்கள்"
"என்ன பிரச்சனை மன்னா"?

" ஒரு சொட்டு தண்ணீர் விட மாட்டோம் என்ற நடவடிக்கையாக அங்கிருந்து நம் நாட்டிற்கு வருபவர்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டிலை எல்லாம் பறிமுதல் செய்து பெரிய டிரம்களில் ஊற்றச் சொல்வதை கண்டித்துத்தான் அமைச்சரே”.

(34) "நீங்களும், அரசியாரும் இணைந்து நடிக்கும் படம் முழுவதும் இரவில் ரகசியமாக எடுக்கிறார்களே மன்னா. கதை என்ன? படப்பிடிப்பு லொக்கேஷன் எங்கே அரசே?
"கிருஷ்ணாம் பேட்டையில், நான் விக்ரமனாகவும் அரசி வேதாளமாகவும், 
அமைச்சரே".




(35) "ஒற்றர் படைத் தலைவர் அதி முக்கியமான தகவலுடன் காத்திருக்கிறார் அரசே"
"அமைச்சரே உடனே வரச் சொல்லுங்கள். இன்று எந்தெந்த வீடுகளில் என்ன சுண்டல் என்ற அதி முக்கியமான அவசரத் தகவலுடன் வந்திருப்பார்”.







(36) "அண்டை நாட்டரசருடன் நல்லிணக்க உறவை ஏற்படுத்த செயற்படு குழு அமைத்துள்ளீர்களாமே அரசே"
ஆம். அமைச்சரே. நம் அரசியாரின் நவராத்திரி கொலுவிற்கு அண்டை நாட்டு அரசியை அழைத்து வர என் தலைமையில் மகளிர் குழு அமைத்துள்ளேன்”.


(37) "நதிகள் இணைப்பு தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட 80% முடிந்து விட்டன என்று சக்கரவரத்திக்கு.அறிவிக்கச் சொல்கிறீர்களே மன்னா, எப்படி?
"நாடு முழுவதும் வெட்டப்பட்டுள்ள மெகா பதுங்கு குழிகளை இணைத்தாலே போதுமே அமைச்சரே, இணைப்புக் கால்வாய்கள் தயாராகி விடாதா"?



(38) "அரசே, அரசியார் நடத்தும் நர்சரி பள்ளியில் குடிமக்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமாக சேர்க்க வருகிறார்களே அதன் ரகசியம் என்ன?
"அது ஒன்றுமில்லை,விளம்பரப் போஸ்டர்களில் நிறைய சறுக்கு மரங்கள் பள்ளியில் உள்ளது என்பது அச்சுப்பிழையால் சரக்கு மரம் என்று அச்சாகி விட்டது"


(39) "அரசே நீங்கள் பிரான்ஸ் நாட்டில் குடியேறப் போவதாக நாட்டில் பேச்சு அடிபடுகிறதே, அது உண்மையா"
"அந்த வயற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள் அமைச்சரே. நான் அங்கே குடியேறினால் அங்குள்ள ஆல்ப்ஸ் மலையும், ரைன் நதியும் காணாமல் போகும் அபாயம் உள்ளது என நிராகரித்து விட்டனர்"


(40) "இனி பக்கத்து நாட்டிற்குச் செல்லும் நம் நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் குடி தண்ணீர் வீதம் கட்டாயம் கொண்டு வர வேண்டுமாம். அவர்களுக்கு அங்கு தண்ணீர் வழங்க மாட்டார்களாம் அரசே".

"ஆகா. நல்ல சந்தர்ப்பம் . எல்லையில் எங்கிருந்து எங்கு போனாலும் அவர்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களை பறி முதல் செய்து பன் மடங்கு விலை வைத்து நம் நாட்டு தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்வோம் அமைச்சரே".




Saturday, 1 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (3)

(21) "கவனித்தீர்களா அமைச்சரே, ‘ஐந்து ஆண்டுகளில் ஐம்பது அணைகள்’ ஒரு புரட்சிகரமான திட்டம் என்று சக்கரவர்த்தியே பாராட்டிஇருக்கிறார் தெரியுமா"?

"ஆறுகளே இல்லாத இடங்களில் அணைகள் கட்டும் திட்டத்தை வேறு என்ன சொல்ல முடியும், மன்னா"?


(22)"அரசவையில் புதியதாக சியர் கேர்ல்ஸ் நியமிக்கப் போகிறதாக கேள்விப்பட்டோமே மன்னா"

"ஆம். அமைச்சரே. அரசவையை குளிர் பதனம் செய்யப் போவதால் வேலை இழக்கும் சாமரம் வீசும் பெண்களுக்கு மாற்றுப் பணிதர வேண்டாமா, அமைச்சரே"


(23) "மன்னா ஏதோ அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற வரச் சொல்லியதாக நிதி அமைச்சரை கூட்டி வரச் சொன்னீரகளாமே"

"ஆம், அமைச்சரே. பங்குச் சந்தையில் வரத்தகர்கள் தங்கள் பங்குகளை வியாபாரம் செய்ய மார்கெட் வளாகம் தலைநகரில் கட்டப்படும். பங்குகளை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகளை அரசிடம் மட்டுமே வாங்க வேண்டும்".


(24) "பக்கத்து நாட்டின் அரசர் எனக்கு ஏதோ பட்டம் தர அழைப்பு விட்டுள்ளாரே அமைச்சரே, எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா"

"அது காற்றாடி விடும் உங்கள் திறமையை கேள்விப்பட்டு அவர் பேரக்குழந்தைகளுக்கு காற்றாடி விட்டுக் காட்ட பட்டம் தர அழைப்பு விடுத்துள்ளார், மன்னா".


(25) "அரசே, சுறுசுறுப்பாக மாலை ஆறு மணிக்கே மாறு வேடத்தில் நகர்வலத்திற்கு கிளம்பி விட்டீர்களே".

"நவராத்திரி ஆயிற்றே. எல்லா வீடுகளிலும் கொலு வைத்து சுண்டல் தருவார்களே அமைச்சரே, மறந்து விட்டீர்களா”?





(26) "இளவரசர் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டாராமே, அரசே, பெருமையாக இருக்கிறது".
"அதுவா.... அரணமனைக் காவலர்களைக் கொண்டு புதுப்பட டிக்கெட்களை வாங்கி பிளாக்கில் விற்று சம்பாதிக்கிறார்".


(27) "மன்னா, பாரிக்கு அடுத்து முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளலே என்று புகழ்ந்து பாடிய புலவரை நாடு கடத்த உத்தரவிட்டீரகளாமே"?

"ஆம் அமைச்சரே, யாருக்கும் தெரியாமல்  நான் அவளுக்குத் தந்ததை எப்படியோ தெரிந்து கொண்டு அரசியார் முன்னிலையில் சொல்லி குடும்பத்தில் குழப்பம் உண்டு பண்ணி விட்டான் பாவி”



(28) "அரசே, வெளிநாட்டு தூதுவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் அரசவைக்கு வரப்போகிறார்கள். நீங்கள் இன்னும் தயாராகவில்லை. பவர்லால் சேட் அடகு கடைக்கு வேறு போகச் சொல்லுகிறீர்கள். என்ன பிரச்சனை மன்னா"?

"இளவரசர் கைச் செலவுக்குப் பணம் இல்லாமல் மணிமகுடத்தை பவர்லால் சேட்டிடம் அடகு வைத்து விட்டார் அமைச்சரே"


(29) "அண்டை நாட்டு இளவரசியை பெண் கேட்டுப் போகலாம் என்றால் அப் பெண் மீது நம் இளவரசர் மிகுந்த கோபத்தில் இருக்கிறாரே ஏன்அரசே? என்ன காரணம்"?

அதுவா, சென்ற முறை வேட்டையாடச் சென்ற போது நாய் துரத்தவே தலைதெறிக்க ஓடி வந்தாரல்லவா. அப்போது ஆலயமணி படத்தில் வரும் 'கண்ணான கண்ணனுக்கு அவசரமா? கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலியா' என்ற பாட்டுப் பாடி வெறுப்பேற்றினாளாம், அமைச்சரே"


(30) "என்னது, காவிரி பிரச்சனையில் நம் மக்கள் என் மீது அதிருப்தியாக உள்ளார்களா? இப்போது என்ன செய்ய அமைச்சரே"

"காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவியுங்கள் மன்னா. காலை பத்து மணிக்கு ஆரம்பியுங்கள். மாலை நான்கு மணிக்குள் எதாவது ஒரு குறுநில மன்னரை செட் அப் செய்து, வேண்டுகோள் விட வைத்து வழக்கம் போல் பிரியாணி சாப்பிட்டு முடித்துக் கொண்டு விடலாம்".

Friday, 30 September 2016

மன்னாதி மன்னன் - ஜோக்ஸ் (2)

(11) "அரண்மனையில் அந்தப்புரத்தைப் பழுது பார்க்க வந்த ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்தீர்கள் மன்னா"?

"இருபது சதவீதம் கமிஷன் கொடுத்தால் வழக்கமாக பழுது பார்க்காமலே பில் தருவேனே, அது போல இப்போதும் தந்தால் போதுமா என்கிறார் அமைச்சரே"


(12) "அமைச்சரே, பக்கத்து நாட்டு மன்னர் நம் தலைநகர் அருகே பல ஏக்கர் நிலம் வாங்கியுள்ளாராமே. இது எப்படி நடந்தது"?

"அது, நீங்கள் மைத்துனர் பேரில் செய்யும் ரியல் எஸ்டேட் பிசினஸில் அவர் பினாமி பேரில் வாங்கியிருக்கிறார் அரசே".


(13) "மன்னா உடனடியாக ஒரு இலட்சம் பேருக்கு இலவச சிம் கார்ட் வழங்கும் திட்டத்தை ஏன் அறிவிக்க சொன்னீர்கள்"?

"சீனியர் சிங்கர் சீசன் 15 வது போட்டிகளில் அரசியார் கலந்து கொள்ளப் போவதாக நேற்றிரவு சொன்னார், அமைச்சரே" 


(14) "தலைவரே, மணல் திருட்டை ஒழிக்க என்ன செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் சொல்ல"?

" சகாரா பாலைவனத்தை குத்தகைக்கு எடுத்து பிரச்சனைகளைத் தீர்க்க ஆப்ரிக்க 
நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும்"

 Picture courtesy : http://cinema.dinamalar.com







(15) "பாகிஸ்தானில் நடக்க இருந்த சரக்கு மகாநாட்டை ஒத்தி வைத்து விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் அங்கே சரக்கு கிடைக்கவில்லை என்றால் 
சரக்கு கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப் போராடுவோம்"

"அய்யோ, அது சரக்கு மாநாடு இல்லை தலைவரே அது சார்க் கூட்டமைப்பின் மகாநாடு"


(16) " ஊதிய உயர்வு கேட்டு அரண்மனை ஊழியர்கள் போராடப் போகிறார்களாம் மன்னா"

"அப்படியா, இனி அரண்மனை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை பாதியாக குறைத்து ஆணை பிறப்பியுங்கள். அதை ரத்து செய்ய போரடுவார்கள். இதை விட்டு விடுவார்கள்"

(17) "அமைச்சரே, அரசியார் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். உடனே தக்க ஏற்பாடுகள் செய்யுங்கள்"

"அடடா மன்னா, தமிழ் திரையுலகில் பேய்ப்பட சீசன் முடிந்து விட்டதாக ஆஸ்தான இயக்குநர் சொல்கிறாரே, இப்படி தாமதமாகச் சொன்னால் என்ன செய்வது"


(18) "அப்பப்பா ஒரே வெயில், புழுக்கம். பச்சைமலையில் இரண்டு வாரம் தங்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே"

"மன்னா, கிரானைட் காரர்களுக்கு ரகசியமாக விற்ற பின் இப்போது அந்த மலை உங்கள் சுவிஸ் வங்கியில் உள்ளது".

(19)  "மிக உயர்ந்த தொழில் நுட்ப ரகசியத்தைக் கடத்த முயன்ற அண்டை நாட்டு ஒற்றன் கைது என்று செய்தித்தாளில் படித்தேன் அமைச்சரே. அது என்ன ரகசியம்"?

" அது ....தாங்கள் அரசியாரின் சேலைகளைத் துவைப்பதை விலாவாரியாக தன் செல்பேசி யில் படம் பிடித்திருந்தான் மன்னா".

(20) "மன்னர் மன்னா, அண்டை நாட்டிலிருந்து நிறைய தரமற்ற பொருட்கள் கடத்தப்பட்டு மலிவு விலையில் கிடைத்து வருவதால் தரமான நம் நாட்டுப் பொருட்கள் விற்பனை பாதிப்படைகிறது. இதை எப்படித்தடுப்பது?

"அது ஒரு பிரச்சனையே இல்லை.  தரமற்ற பொருட்களை நாமும்  தயாரித்து அண்டை நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று குறியிட்டு விற்பனை செய்யச் சொல்லிவிடலாம்".

Tuesday, 27 September 2016

மன்னாதி மன்னன் - ஜோக்ஸ் (1)

(1) "அமைச்சரே, இளவரசருக்கு தொலைநோக்கு சிந்தனை அதிகம் என்று அரண்மனைக் காவல் அதிகாரி சொன்னாரே. அப்படியா"
"ஆம் மன்னா. தலைநகர பெண்கள் மார்கழி மாதம் தெருக்களில் கோலம் போடுவதை அரண்மனை கண்ட்ரோல் அறையிலிருந்தே ரசிக்க எல்லாத் தெருக்களிலும் கேமிரா வைக்க இப்போதே உத்தரவிட்டுள்ளாரே".





(2) "இருநாட்களாக இரவு நேரத்தில் பாலியல் குற்றங்கள் எதுவும் நடந்த செய்திகள் வரவில்லையே அமைச்சரே"
"நம் இளவரசர் ஒருவார நல்லெண்ண சுற்றுப்பயணமாக பக்கத்து நாட்டுக்குச் சென்று இரண்டு நாட்களாகி விட்டது அரசே"



(3) "மன்னா நீங்கள் போருக்கே போவதில்லையே, அப்புறம் எதற்கு போர்கருவிகள் வாங்க விளம்பரம் தந்திருக்கறீர்கள்"?
"அதுவா, இளவரசர் கமிஷன் பணம் பாக்கெட் மணிக்காக விளம்பரம் தந்திருப்பார்".


(4) "மன்னா, உங்கள் உத்தரவுகள் தெளிவாக இல்லாததால், பெரும் குழப்பம். பார்ப்பதை எல்லாம் கலவரம் செய்பவர்கள் திருடுகிறார்களாம் கேட்டால் உங்கள் உத்தரவுப் படி நடப்பதாக வேறு சொல்கிறார்களாம்".
"அப்படியா, தெளிவாகத் தானே உத்தரவிட்டேன்".
"கலவரம் செய்வோருக்கு மன்னர் எச்சரிக்கை. கண்டதும் சுட உத்தரவு என்று".




(5) "மன்னா பக்கத்து நாட்டின் அரசர் தடுப்பணைகளை நம் நாட்டில் பாயும் நதி மீது கட்டப் போகிறாராம். நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்"
"சற்றும் தாமதிக்காமல் அவருக்கு திருமுகம் அனுப்புங்கள். மணல், ஜல்லி சப்ளை கூலி வேலை செய்யும் ஆட்கள் காண்ட்ராக்டை என் மைத்துனருக்கே வழங்க வேண்டுமென்று"





 Image courtesy: www.tamil.2daycinema.com



(6) "மன்னா இந்த காவேரி பிரச்சனை பற்றி சக்கரவர்த்தி உங்களைக் கேட்டதற்கு அவர் மயக்கமடையும்படி என்ன பதில் அளித்தீர்கள்"?
"அது என் சொந்த பிரச்சனை. அரசியே அதைப் பற்றி கேட்கவில்லை. பிரச்சனை பெரிதானால் ஜீவனாம்சம் தந்து விடுகிறேன் என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன் அவ்வளவுதான், அமைச்சரே”


(7) "அமைச்சரே பக்கத்து நாட்டில் நடக்கும் மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள நமக்கு அழைப்பு அனுப்பவில்லையே"
" ஆம் மன்னா. எல்லாம் தோல்வி பயம் தான் காரணம். புறமுதுகிட்டு ஓடுவதில் உங்கள் வேகம் உலகறிந்ததாயிற்றே”.



(8) "மன்னா நம் நாட்டில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது என்று எல்லாரும் சொல்கிறார்கள்"
"அப்படியா, இனி எல்லா அரசு அலுவலர்களும் மொட்டையடித்து வர உடனே உத்தரவிடுகிறேன் அமைச்சரே"



(9) "அமைச்சரே, பக்கத்து நாட்டில்
என்னை நல்ல leftist என்று பேசிக் கொள்கிறார்களே"
"ஆம் அரசே எந்தப் போரிலும். போர்களத்தை விட்டு முதலில் ஓடுவது நீங்கள்தான் என்பதால் அப்படி அழைக்கிறார்கள்".


(10) " என்ன தரகரே, மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் ஏன் இப்படி வள்வள் ன்னு விழறாங்க. அவர்களைப் பற்றி ஏன் எச்சரிக்கை செய்யவில்லை"
"இல்லை அரசே, அவர்கள் பையனின் ஜாதகத்தில் குடும்பம் பற்றிய தகவல் என்ற இடத்தில் ஆத்திரடாக்ஸ் பேமிலி என்று குறிப்பிட்டிருந்தார்களே”.