Tuesday, 28 June 2016

காலக் கழுகுகள்

காலக் கழுகுகள் இரண்டு வட்டமிடுகின்றன.
இன்னும் ஒரு கழுகு வந்து கொண்டே இருக்கிறது.

பழைய அழுகிப் போய் நாற்றமெடுக்கும் நினைவுகள் 
தலையில் புழுத்துப் போய் நெளிகிறது.

வெறியோடு பாய்ந்து வந்த கழுகு 
சட்டென மேல் எழும்புகிறது.

ஊசிப் போக ஆரம்பித்த இன்றைய நினைவுகள் நாற்றம் நாசியில்
எந்த நினைவுமின்றி படுக்கையில் கிடக்கும் வரை 
புதிய கழுகு வரத்தேவை இல்லை. 















அப்படியே வந்தாலும் உண்ண எதுவும் இல்லை.
பொய்யுரைத்துச் சேர்த்த பணமா,

காமத்தில் பிறன்மனை தொட்டு இழந்த மானமா,
மனைவியை துரோகித்த பாபமா,

அரியணை ஏற கொன்று குவித்தவர் ரத்தத்தின் கவிச்சமா, 
நயவஞ்சக வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு
ஏமாந்து உயிர் விட்டோர் கண்ணீரா,

எதையும் உண்ணாமல் கழுகோ பாடாய் படுத்துகிறது.
அன்று கண்ணை மறைத்த எல்லாம் பேயுருக்
கொண்டு தாண்டவமாடும் கண் முன்னே.
முதுகில் ஏதோ அழுத்துகிறது.

கருப்பான உண்மை கண்ணுக்கு வழி காட்ட, 
கூடவே வந்தன உண்ண மறுத்த காலக் கழுகுகள். 

உன் பாப மூட்டையை இறக்கி விட்டு அந்த வரிசையில் நில்.
குரல் வந்த திசையி்ல் ஒரு பேரொளி.


கழுகுகளைக் காணவில்லை.

Tuesday, 21 June 2016

சூரியன்

(1) இரவு முழுவதும் கண்ணடித்தபடி
புறணி பேசிய விண்மீன்கள்,









கோபத்தில் முகம் சிவந்த கதிரவனின்
முன் வரத் தைரியம் இன்றி மேகக் கதவை மூடி
 வான வீட்டில் பம்மிக் கொண்டன.



(2) என்றோ வானவெளியில் பயணித்த போது
விழுந்த விண்மீன் வைரங்களை








மீண்டும் மீண்டும் வந்த வழியே தேடியபடி
தினமும் வருகிறான் ஆதவன்.


(3) கோலமிட செம்மண் கரைத்து
வான வாசலில் வைத்து,
அரிசி மாவு எடுத்து வருமுன்








அவசரமாக வந்த கதிரவனின்
கால் தட்டியதில் கவிழ்ந்த செம்மண்
குழம்பால் சிவந்தது கீழ் வானம்


(4) நேற்று தன் கடுமையான பார்வையால் சுட்ட
கதிரவனைப் பார்க்க விரும்பாமல்
முகத்தைத் திருப்பிக் கொண்ட பூமியை









சமாதானப் படுத்த ஆரஞ்சு நிறச் சேலையுடன்
ஓடோடி வந்தான் ஆதவன்.



(5) விரல் சூப்பியபடி தொட்டிலில் உறங்கும்,
முந்தைய நாளிரவில் பிறந்த குழந்தைகளை
நேரில் பார்த்து ஆசி வழங்கி



வாழ்த்துச் சொல்ல ஓடி வருகிறான்
தினமும் கதிரவன்  கிழக்கு வானில்.


Monday, 13 June 2016

கரகாட்டம்

இந்த வருஷம் நம்ம ஊர் செல்லியம்மன் கோவில் கொடை அமர்களம்.

சினிமா புகழ் பெரியனூர் கமலா பார்ட்டியின் கரகம்.

கண்ணால ஊசி எடுக்கறது அருமை.

தன் மேல ஊசியா குத்தும் பார்வைகள்,

பிள்ளை பால் குடித்தானோ இல்லையோ




கவலையோடு கூட்டத்தை விழியால் மேய, 
வந்தது கூசும் ஆபாச சைகையுடன் கேலிச் சிரிப்பும்பேச்சும்.

4 மணி நேரமாக ஆடிய கால்வலி ஒருபுறம் 
"இன்னும் மூணு தெருதான் பாக்கி நின்னு ஆடு" என்ற துரத்தல்

எல்லாவற்றையும் அபாரமான அலங்காரத்துடன்,போர்ட்டபிள் ஜென்செட் ஒளியில்,

சாந்தமாக கையில் கூர் வேலிருந்தும் சகித்துக் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தது 
அந்த பரிதாபத்துக்குரிய பெண் தெய்வம்.

நம்மை விட சகிப்புத்தன்மை செல்லியம்மனுக்கு அதிகம்தான்.

மனசாட்சி

பத்மாசனமிட்டு,புறக்கண் மூடி என்னை அறிய முற்பட்டேன்.

அகக்கண் திறந்து காட்சி மலர்ந்தது.


அழுக்கான, நாற்றமடிக்கும், பாசி படர்ந்த குளம், அதனருகே நான்.


குளத்தை நெருங்க முடியாத அளவுக்கு அதில் நரகல், குப்பைகூளங்கள்,உடைந்த ,உடையாத மதுக் குப்பிகள், சிகரெட்,பீடித துண்டுகள் சுற்றிலும் சிறுநீர் தேங்கி மயக்கம் வரவழைத்தது.







அப்போதுதான் கவனித்தேன், அவனை.


யார் நீ என வினவினேன்.


குளத்தின் காவலன் என்றவனை கோபத்துடன் ,


 "நீ காவல் இருந்துமா இது இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது" என்றேன்.


அவன் சிரித்தபடி,

"இப்பெல்லாம் யாரும் என்னை மதிப்பதோ, என் சொல் கேட்கவோ விரும்புவதில்லை" எனறான்.


என் தேடுதல் விவரம் சொன்னதும், அவன்,


 "குளத்தில் இறங்கி மூழகித்தேடு" என்றான்.

 
"இதிலா? என்னால் முடியாது. குளம் சுத்தமாயிருந்தால் முடியும்" என்றேன்.


அதற்கவன், "சரி, நீங்களே இறங்கி சுத்தம் செய்யுங்கள்",எனறதும் சினம் தலைக்கேற,


" நீ செய்ய வேண்டிய வேலையை என்னைச் செய்யச் சொல்ல நீ யாரடா" என்றேன்.
அவன் மிக அமைதியாக முறுவலித்தபடி

 
" நானா, உன் மனசாட்சி" என்றான்.


"அப்போ இந்தக் குளம்" எனறேன்.


'அதுதான் உன் மனம்' எனறான்.

Saturday, 4 June 2016

ஜம்பாவின் மயிலிறகு

அந்த எட்டாப்பு ‘ஏ’ பிரிவில் மூணாவது பெஞ்சில் மூணு பேர் உட்காரலாம்
இடது பக்கம் நளினி நடுவில துளசி வலது ஓரத்தில ஜம்பா.

நளினி வராத நாளில் துளசிக்கு ஜம்பா ஒரு மயிலிறகு பரிசு தந்தாள்.
அது அவ அப்பா காட்டில வேட்டைக்கு போன போது கிடைச்சதாம்.

அதை புத்தகத்தில் வச்சிருந்தா குட்டி போடுமாம், ஜம்பா சொன்னாள்
குட்டி போடற வரைக்கும் ஒரு வாரத்துக்கு புத்தகத்தை திறக்கக் கூடாதாம்.

அன்னிக்கு திங்கள் கிழமை.
கணக்கு நோட்டில துளசி அதை பத்திரமா வைத்தாச்சு.

இன்னமே அடுத்த திங்கள் வரையில கணக்கு நோட்டை திறக்க முடியாது.
மறு நாள் வீட்டுப் பாடக்கணக்கு நோட்டு புதுசா வாங்கி எழுதி வச்சா
வசந்தி மிஸ் திட்டும். திட்டு மட்டும் தானே பரவாயில்லை.

வரலாறு நோட்டில் நல்லவேளை வைக்கலை.
வரலாறு அருள் மிஸ் அடித்து முட்டிபோடச் சொல்லும்.
ஏன்தான் இந்த மிஸ் எல்லாம் இப்படி பிசாசா இருக்கு?

ஒரு வாரமும் துளசிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
தினமும் கடவுளிடம் குட்டி குறையில்லாம பொறக்க நொடிக்கு ஒரு முறை வேண்டுதல்.
அந்த திங்கள் வரை பித்துப்பிடித்த மாதிரி இருந்தது.

ஜம்பாவிடம் பல கேள்விகள் கேட்க வேண்டும். குட்டிக்கு என்ன ஆகாரம் போட வேண்டும், எப்படிக் குளிப்பாட்ட வேண்டும், 



குட்டி பால் கேட்டால் ஆவின் பால் கொடுக்கலாமா? அப்படியில்லாட்டா என்ன குடிக்கும்? இப்படி ஏகத்திற்கும் கேள்விகள் மனதில்.


ஞாயிறு இரவில் கனவில் வந்த முருகன் அவளிடம் மயிலைக் கேட்க அழுகை வந்தது.

காலையில் நோட்டை பிரிக்க மயில் இறகு குட்டியை காணவில்லை.

சீக்கிரமே பள்ளிக்கு வந்து ஜம்பாவிடம் கேட்டால் அவளுக்கும் தெரியவில்லை.
சாயங்காலம் ஜம்பா அவள் வீட்டிற்கு போய் அப்பாவை கேட்கலாம் என்றாள்.

பேட்டை ரயிலடியில் ஜம்பாவின் கூடார வீட்டில் அவர்கள் போன போது
ஜம்பா அப்பாவிடம் இறகு குட்டி போடாத விஷயத்தை சொன்னாள்.

அவர் சிரித்து அந்த இறகை வாங்கிக் கொண்டார்.
அடுத்த வாரம் குட்டி போட்டபின் ஜம்பாவிடம் கொடுத்தனுப்புவதாக சொன்னார்.

மறுவாரம் திங்கள் கிழமை. மனசு பூராவும் மயிலிறகுதான்.
சாப்பிடக் கூட விருப்பமில்லை.

பள்ளிக்கு நேரத்தே வந்து ஜம்பாவின் வருகைக்கு காத்திருந்தா, ஜம்பா வரவேயில்லை.
சாயங்காலம் அவள் ரயிலடி கூடாரத்திற்குப் போனாள்.

போய் நின்ற துளசியைப் பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம்.
அவள் ஜம்பாவை விசாரித்தால் அவளை பார்க்க முடியாது
பெரியமனுசி ஆகிட்டா என்றனர்.

பள்ளிக்கும் வரமாட்டாளாம்.
அழுகையா வந்தது துளசிக்கு. மயிலிறகு பற்றி கேட்டபோது
ஜம்பாவின் அப்பா கோசன் இரண்டு முழுத் தோகைகள் தந்து அனுப்பி வைத்தார்.

இப்போ மாதிரி இருக்கு. 40 வருடம் ஓடிப்போயாச்சு.
கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாச்சு.

பலது இந்த அவசர சென்னை வாழ்க்கையில் மறந்தும் போயாச்சு
ஆனா, தினமும் பூஜை அறையில் முருகன் படத்தின் இருபுறமும் வைக்கப்பட்ட
அந்த மயில் தோகைகள் ஜம்பாவை அவள் அப்பாவை
துளசிக்கு நினைவூட்டிக்கொண்டேயிருந்தன.


எந்த ரயிலடிக் கூடாரத்தைப் பார்த்தாலும் கண்ணீர் வந்தது.