Saturday, 4 June 2016

ஜம்பாவின் மயிலிறகு

அந்த எட்டாப்பு ‘ஏ’ பிரிவில் மூணாவது பெஞ்சில் மூணு பேர் உட்காரலாம்
இடது பக்கம் நளினி நடுவில துளசி வலது ஓரத்தில ஜம்பா.

நளினி வராத நாளில் துளசிக்கு ஜம்பா ஒரு மயிலிறகு பரிசு தந்தாள்.
அது அவ அப்பா காட்டில வேட்டைக்கு போன போது கிடைச்சதாம்.

அதை புத்தகத்தில் வச்சிருந்தா குட்டி போடுமாம், ஜம்பா சொன்னாள்
குட்டி போடற வரைக்கும் ஒரு வாரத்துக்கு புத்தகத்தை திறக்கக் கூடாதாம்.

அன்னிக்கு திங்கள் கிழமை.
கணக்கு நோட்டில துளசி அதை பத்திரமா வைத்தாச்சு.

இன்னமே அடுத்த திங்கள் வரையில கணக்கு நோட்டை திறக்க முடியாது.
மறு நாள் வீட்டுப் பாடக்கணக்கு நோட்டு புதுசா வாங்கி எழுதி வச்சா
வசந்தி மிஸ் திட்டும். திட்டு மட்டும் தானே பரவாயில்லை.

வரலாறு நோட்டில் நல்லவேளை வைக்கலை.
வரலாறு அருள் மிஸ் அடித்து முட்டிபோடச் சொல்லும்.
ஏன்தான் இந்த மிஸ் எல்லாம் இப்படி பிசாசா இருக்கு?

ஒரு வாரமும் துளசிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
தினமும் கடவுளிடம் குட்டி குறையில்லாம பொறக்க நொடிக்கு ஒரு முறை வேண்டுதல்.
அந்த திங்கள் வரை பித்துப்பிடித்த மாதிரி இருந்தது.

ஜம்பாவிடம் பல கேள்விகள் கேட்க வேண்டும். குட்டிக்கு என்ன ஆகாரம் போட வேண்டும், எப்படிக் குளிப்பாட்ட வேண்டும், 



குட்டி பால் கேட்டால் ஆவின் பால் கொடுக்கலாமா? அப்படியில்லாட்டா என்ன குடிக்கும்? இப்படி ஏகத்திற்கும் கேள்விகள் மனதில்.


ஞாயிறு இரவில் கனவில் வந்த முருகன் அவளிடம் மயிலைக் கேட்க அழுகை வந்தது.

காலையில் நோட்டை பிரிக்க மயில் இறகு குட்டியை காணவில்லை.

சீக்கிரமே பள்ளிக்கு வந்து ஜம்பாவிடம் கேட்டால் அவளுக்கும் தெரியவில்லை.
சாயங்காலம் ஜம்பா அவள் வீட்டிற்கு போய் அப்பாவை கேட்கலாம் என்றாள்.

பேட்டை ரயிலடியில் ஜம்பாவின் கூடார வீட்டில் அவர்கள் போன போது
ஜம்பா அப்பாவிடம் இறகு குட்டி போடாத விஷயத்தை சொன்னாள்.

அவர் சிரித்து அந்த இறகை வாங்கிக் கொண்டார்.
அடுத்த வாரம் குட்டி போட்டபின் ஜம்பாவிடம் கொடுத்தனுப்புவதாக சொன்னார்.

மறுவாரம் திங்கள் கிழமை. மனசு பூராவும் மயிலிறகுதான்.
சாப்பிடக் கூட விருப்பமில்லை.

பள்ளிக்கு நேரத்தே வந்து ஜம்பாவின் வருகைக்கு காத்திருந்தா, ஜம்பா வரவேயில்லை.
சாயங்காலம் அவள் ரயிலடி கூடாரத்திற்குப் போனாள்.

போய் நின்ற துளசியைப் பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம்.
அவள் ஜம்பாவை விசாரித்தால் அவளை பார்க்க முடியாது
பெரியமனுசி ஆகிட்டா என்றனர்.

பள்ளிக்கும் வரமாட்டாளாம்.
அழுகையா வந்தது துளசிக்கு. மயிலிறகு பற்றி கேட்டபோது
ஜம்பாவின் அப்பா கோசன் இரண்டு முழுத் தோகைகள் தந்து அனுப்பி வைத்தார்.

இப்போ மாதிரி இருக்கு. 40 வருடம் ஓடிப்போயாச்சு.
கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாச்சு.

பலது இந்த அவசர சென்னை வாழ்க்கையில் மறந்தும் போயாச்சு
ஆனா, தினமும் பூஜை அறையில் முருகன் படத்தின் இருபுறமும் வைக்கப்பட்ட
அந்த மயில் தோகைகள் ஜம்பாவை அவள் அப்பாவை
துளசிக்கு நினைவூட்டிக்கொண்டேயிருந்தன.


எந்த ரயிலடிக் கூடாரத்தைப் பார்த்தாலும் கண்ணீர் வந்தது.

No comments:

Post a Comment