காலக் கழுகுகள் இரண்டு வட்டமிடுகின்றன.
இன்னும் ஒரு கழுகு வந்து கொண்டே இருக்கிறது.
இன்னும் ஒரு கழுகு வந்து கொண்டே இருக்கிறது.
பழைய அழுகிப் போய் நாற்றமெடுக்கும் நினைவுகள்
தலையில் புழுத்துப் போய் நெளிகிறது.
வெறியோடு பாய்ந்து வந்த கழுகு
சட்டென மேல் எழும்புகிறது.
ஊசிப் போக ஆரம்பித்த இன்றைய நினைவுகள் நாற்றம் நாசியில்
எந்த நினைவுமின்றி படுக்கையில் கிடக்கும் வரை
புதிய கழுகு வரத்தேவை இல்லை.
அப்படியே வந்தாலும் உண்ண எதுவும் இல்லை.
பொய்யுரைத்துச் சேர்த்த பணமா,
காமத்தில் பிறன்மனை தொட்டு இழந்த மானமா,
மனைவியை துரோகித்த பாபமா,
அரியணை ஏற கொன்று குவித்தவர் ரத்தத்தின் கவிச்சமா,
நயவஞ்சக வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு
ஏமாந்து உயிர் விட்டோர் கண்ணீரா,
எதையும் உண்ணாமல் கழுகோ பாடாய் படுத்துகிறது.
அன்று கண்ணை மறைத்த எல்லாம் பேயுருக்
கொண்டு தாண்டவமாடும் கண் முன்னே.
முதுகில் ஏதோ அழுத்துகிறது.
முதுகில் ஏதோ அழுத்துகிறது.
கருப்பான உண்மை கண்ணுக்கு வழி காட்ட,
கூடவே வந்தன உண்ண மறுத்த காலக் கழுகுகள்.
உன் பாப மூட்டையை இறக்கி விட்டு அந்த வரிசையில் நில்.
குரல் வந்த திசையி்ல் ஒரு பேரொளி.
கழுகுகளைக் காணவில்லை.
No comments:
Post a Comment