(1) இரவு முழுவதும் கண்ணடித்தபடி
புறணி பேசிய விண்மீன்கள்,
கோபத்தில் முகம் சிவந்த கதிரவனின்
முன் வரத் தைரியம் இன்றி மேகக் கதவை மூடி
வான வீட்டில் பம்மிக் கொண்டன.
(2) என்றோ வானவெளியில் பயணித்த போது
விழுந்த விண்மீன் வைரங்களை
மீண்டும் மீண்டும் வந்த வழியே தேடியபடி
தினமும் வருகிறான் ஆதவன்.
(3) கோலமிட செம்மண் கரைத்து
வான வாசலில் வைத்து,
அரிசி மாவு எடுத்து வருமுன்
அவசரமாக வந்த கதிரவனின்
கால் தட்டியதில் கவிழ்ந்த செம்மண்
குழம்பால் சிவந்தது கீழ் வானம்
(4) நேற்று தன் கடுமையான பார்வையால் சுட்ட
கதிரவனைப் பார்க்க விரும்பாமல்
முகத்தைத் திருப்பிக் கொண்ட பூமியை
சமாதானப் படுத்த ஆரஞ்சு நிறச் சேலையுடன்
ஓடோடி வந்தான் ஆதவன்.
(5) விரல் சூப்பியபடி தொட்டிலில் உறங்கும்,
முந்தைய நாளிரவில் பிறந்த குழந்தைகளை
நேரில் பார்த்து ஆசி வழங்கி
வாழ்த்துச் சொல்ல ஓடி வருகிறான்
தினமும் கதிரவன் கிழக்கு வானில்.
No comments:
Post a Comment