காலக் கிழவன்
மெல்ல வினாடிக் கோலூன்றி
தட்டுத்தடுமாறி வினோதமான
மாரத்தான் ஓட்டத்தை ஓடுகிறது குட்டையும்
நெட்டையுமாய் கால்கள் கொண்ட
மாற்றுத்திறனாளி முதியவராய் காலம்.
குழல் விளக்கு
நான்கடி நீள கண்ணாடிக்
குழாய்க்குள் யாருக்கும்
தெரியாமல் ஒளிந்திருந்த
ஒளியை குழாயை விட்டு
வெளியே தள்ளி விட்டு ஓடிக் கொண்டிருந்தது குறும்பு செய்த
சிறுபிள்ளையெனத் தன்னை
மறைத்துக் கொண்ட மின்சாரம்.
எறும்பூறல்
உறவுகள் கைவிட்டு மரித்துப்
போன தம் இனமில்லாத
சிற்றுயிர் உடல்களையும்
தேடிப்போய் இறுதி ஊர்வலம்
நடத்திக் கொண்டிருக்கின்றன எறும்புகள்.
காகங்கள்
இருட்டில் திருட்டுத்தனமாக
எட்டிப் பார்க்கும் பிடிக்காத
நிகழ்வுகளான எலிகளை
அடித்துக் கொன்று தெருவில்
வீசியதும் கொத்திக்கொத்தி
அருவெறுப்பூட்ட பறந்து
வருகின்றனவே நினைவுக் காகங்கள்.
நரை
கரும் பலகைத் தலையில்
சிக்கலான வாழ்க்கைப் பாடத்தை
புரிய வைக்க அனுபவ சாக்குக்கட்டி
கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக காலமென்ற
பேராசிரியர் எழுதியதோ நரைமுடிகள்?
பூமி
யார் சாப்பிட வேண்டி
இந்த பூமியை சூரியனின்
சூட்டில் ஓய்வின்றி விடாமல்
சுழற்றிச் சுழற்றி வாட்டுகிறார்கள்
அசைவ உணவு விடுதியில்
மாமிசத்தை தீயில் வாட்டுவது மாதிரி.
பதாகை
கொட்டிய ஊழல் மழையில்
லஞ்சப் பணம் சாலைகளில்
12 ' ×10 ' பதாகைகளாக
பூதாகரமாக வளர்ந்திருந்தது.
ஸூப்பர் அனைத்தும் இரசித்தேன்.
ReplyDeleteஅருமையான கவிதைத்துளிகள் ரசித்தேன்!
ReplyDelete