Thursday, 19 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (4)

1) கிழிந்த சேலை

காற்று உடுத்தி சுற்றிச்சுற்றி
நடனமாடும் பூமிப் பெண்ணின்
ஓசோன் கரை  சேலையில் பொத்தல்.

2) விடுதலை

எரிகலனில் அழுத்தி சிறைப்பட்ட
வாயு அறியாது, திறப்பானைத் திருகி விடுதலை தந்த அடுத்த வினாடியே
தீ வைத்துக் கொளுத்துவார்கள் என்று.

3) வளர்ச்சி

கற்பனைக்கெட்டாத பல
பெரிய விஷயங்கள் எல்லாம்
ஒரு சிறு புள்ளியிலிருந்தே
வெடித்துத் தோன்றுகிறது
இப்பேரண்டத்தைப் போல்.

4) வரிசை

உண்மை  தனது முறைக்காக  வரிசையில் காத்திருந்த போது தாமதமாக வந்து சினேகமாய்ச் சிரித்து பேச்சுக்  கொடுத்தவாறு வரிசையில்
உள்ளே நுழைந்து உண்மைக்கு
முன் நின்றிருந்தது பொய்.

5) தலைப்பாகை
கிளைகளையும் இலைகளையும்
ஒட்ட வெட்டி மொட்டைபோடப்பட்ட
மரத்தின் தலையில் தலைப்பாகை
அரசியல் கட்சிக் கொடி.

6) மிரட்சி

வாலில் கட்டிய கூழாங்கற்கள்
இட்ட காலி தகர டப்பாவின்
ஒலி கேட்டு மிரண்டோடும்
கழுதையும் செய்வதறியாது
ஓடும் கவலை கற்கள்
இட்ட மனமும் ஓட்டம்
நின்றால்தான் எல்லாம்
சரியாகும் என்பதை
உணர்வதே இல்லை.

7) கால விளையாட்டு

மின்விசிறிக்காற்று
நிகழ்காலத்தில்
இறந்தகாலத்தையும்
வருங்காலத்தையும்
மூடி மூடித் திறந்து விளையாடிக்
கொண்டிருந்தது நாள்காட்டியில்.

8) வாழ்க்கை

அந்தக இரப்பாளியாக
அமர்ந்தவனின் வாழ்க்கைக்
கப்பரையில் யாரோ
வினாடிப் பிச்சையிடும்
டிக் டிக் ஒலி மட்டுமே காதில்
கேட்டபடி உள்ளது.
முடிவில் கப்பரையைத் துழாவ
எதுவுமே கையில் தட்டுப்படுவதில்லை.

9) பிரார்த்தனை

அது எப்படித்தான் அமைகிறதோ
ஆலயத்தில் ஆண்டவனிடம்
என் குறைகளைச் சொல்லி
வேண்டும் போதெல்லாம்
சப்தமாக யாரோ கோவில்
மணியை அடிப்பதில் அவருக்குக்
கேட்காமலே போய்விடுகிறது.


10) கண்ணீர்

தாம் இறந்து போனதே
தெரியாமல் மரத்திலிருந்து
குதித்து மண்ணில் புரண்டு
 விளையாடிய பழுத்த இலைகளுக்காகக்
கண்ணீர் வடித்தது மேகம், மழை.

No comments:

Post a Comment