Sunday 29 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (5)

1) காலம்

சிறிதும் பெரிதுமாய் இருகரங்களும்
அறுபது விரல்களும் இருந்தும்
காலம் வழிந்தவாறே உள்ளது கடிகார விரலிடுக்கில்.

2) பாராட்டு

தேர்ந்த ரசிகனின் கரங்களில்
மௌனித்து மறைந்திருந்தன
பாராட்டும்  சொற்கள், கரவொலி.

3) விடுதலை

ஒருவாரமாக வெள்ளைப்புறாக்கள் கூண்டுகளில் கால்கள் கட்டப்பட்டு அடைந்து கிடந்தன, கொத்தடிமைகள் விடுதலையை கொண்டாட வரும் தலைவர் பறக்க விடுவதற்காக.

4) உறக்கம்

அரிவாளால் தலை சீவப்படப் போவதை அறியாமல் ஒன்றின் மீதொன்று சாய்ந்து சுகமாக உறங்கியவாறு ஆடிஆடி பயணித்துக் கொண்டிருந்தன தள்ளுவண்டியில்  இளநீர்க் குலைகள்.

5) வாழ்க்கை

குறுகிய வாய் கொண்ட
குடத்தில் தலை நுழைத்த
விடுபட வழி தெரியாமல்
குரைத்தவாறு அங்குமிங்கும்
அலையும்  நாயாக இச்சைகளில்
சிக்கிக் கொண்ட மனிதர்கள்
அலைகிறார்கள் இப்புவியில்.

6) மறுபிறப்பு

பரலோகம் பட்டு உடுத்தி
போனவனும் அடுத்து
பிறந்தான் அம்மணமாக.

7) அழுகை

 கண்ணை மூடிக்கொண்டு
வேகமாய் வந்து மலையில்
மோதிக் கொண்ட மேகம்
வலியில் அழுதது, மழை.


8) நுகர்வு

பெரிய தட்டு  நிறைய அன்னத்தை
பிஞ்சுக் கைவிரலால் அள்ளி
சிறிது உண்டும் நிறைய இறைத்தும்
விளையாடும் பிள்ளையாக
காலத்தை நுகர்கிறான் மனிதன்.

9) பசி

வயிற்றின் வடவாக்கினி பந்தாக
திருவிழாவில் டிராகன் வேடமிட்டு
ஆடும் வித்தைக்காரனின் வாயில்.

10) தேடல்

சோதிடன் தன் உருப்பெருக்க கண்ணாடியால் தேடிக்கொண்டிருந்தான்
தன் பேரழுதிய
அரிசியை சோதிடம்
பார்ப்பவனின் கைரேகையில் .


1 comment:

  1. மூன்றாவது மிகவும் இரசித்தேன் நண்பரே...

    ReplyDelete