Friday, 28 October 2016

சாலைக் குழந்தை

(1) சாலைக் குழந்தை கேட்டவரம்

நர்சிங் ஹோமில் பிறக்கவில்லை
தடுப்பூசி போட்டதில்லை
குளிச்சது கூட கார்ப்பரேசன் கக்கூஸ் தொட்டித் தண்ணியில தான்
எண்ணெய் குளி, சுடுதண்ணி குளி என்னன்னே தெரியாது
படுத்தது  எல்லாம் பிளாட்பார மரத்தடியில் தான்
பள்ளிக்கோடம் போக ஆசை தான்
ஆனா பாழாப் போன ஆதார் இல்லாம போகலை
அப்பனுக்கு கோட்டர் வாங்க போனது தான் என் ஷாப்பிங்
கணேஷ் பவன் ஊசிப்போன பலகாரம் தான் இதுவரை சாப்பிட்ட விருந்து
என் கண்ணுமின்னயே ஆத்தாளை அப்பன் போட்டு அடித்து தான் பார்த்த சண்டைப் படம்
சரி எல்லாம் போகட்டும் சாமி
இதுவரை எனக்கு எந்த வரமும் நீயும் தரலை
நானும் கேட்கலை
இந்த வாழ்வே பழகிடுச்சு
கூவம் நாத்தம் சுவாசிச்சு சென்ட் கூட நாத்தம் ஆகிப் போச்சு
சாவு ஊட்டுல டான்ஸ் ஆடி பசி மறக்க பழகிப் போயாச்சு
இப்ப ஒரே ஒரு வரம் கேட்கிறேன்
ஊரோட தீபாவளியாம் பட்டாசு வெடிச்சு  கொண்டாடறாங்க
அந்த பெரிய பணக்காரங்க வீட்டுப் புள்ளை போடற இந்த குருவி பட்டாசு  வெடிக்காத  பண்ணு
இந்த கிளிஞ்ச டவுசர் பாக்கெட்டில போட்டுக்கிறேன் அப்புறமா
நான் எடுத்து வெடிக்க
வரம் கேட்கிறேன் சாமி, தருவியா?


(2) ஜீவகாருண்யம்

"குட்மார்னிங் சார்.  அப்பாக்கு உடம்பு சரியில்லையாமே. இப்போ  எப்படி இருக்காங்க சார்"?

"குட்மார்னிங். ஒரே  தொந்தரவு, யூரின் போகணும், பாத்ரூம் போகணும் என்று.

 பணம் செலவானாலும்  பரவாயில்லைன்னு  ஹோமில் சேர்த்திட்டேன், ஆம்பிளை நர்ஸுங்க கவனிச்சிக்கிறாங்க.

எனக்கு சுத்தமா நேரமும் இல்லை.
நமக்கும் அருவெருப்பு பிரச்சனை இல்லை பாருங்க" என்றவர்,

 பொறுமையாக கையில் பிடித்திருந்த டாபர்மேன் இயற்கை உபாதை முடிக்க அரைமணி நேரமாக தெருவில் அலைந்து கொண்டிருந்தார் 'டாமி' இழுத்த இடத்திற்கெல்லாம் நாயாக.


(3) குடும்ப வாழ்க்கை

அந்த அனைத்து மகளிர்
 காவல் நிலையத்தில்
பல காலமாய் நிறுத்தி
வைக்கப்பட்ட  கார்களின்
அடர்ந்த புழுதி படிந்த
பின்பக்கத்து  கண்ணாடிகளில்
 தன் பிஞ்சு  விரலால்
அம்மா, அப்பா, குழந்தை, குடும்பம்
என்று எழுதி பாடம் நடத்தி
டீச்சர் விளையாட்டு விளையாடிக்
கொண்டிருந்தது
நேற்று ரெய்டில் பிடிபட்ட பாலியல் தொழிலாளியின் அனாதையான குழந்தை.


அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (2)

(11)
"நம்ம போராட்டத்துக்கு உரிய மரியாதையை அரசாங்கம் கொடுக்காத கேவலப்படுத்துறத, கண்டிக்கணும் அண்ணே".
"என்னடா சொல்லற, புரியலை".
"போராட்டத்தில எத்தினி கடையை,பஸ் எல்லாம் உடைச்சோம், தீ வைச்சோம், எத்தினி பேரை அடித்தோம். வெறும் 144 தடையுத்தரவுதான் போட்டிருக்காய்ங்க. நம்ம கவுரதைக்கு குறைந்தது 500,600 தடையுத்தரவு போடத்தாவல"?




(12)
 "அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வாசல் வரைக்கும் போய் விட்டு உடனேயே திரும்பி வந்து போட்டீங்களே, ஒன்னுமே புரியல அண்ணே"
"அது சகுனமே சரியில்லை. கூட்டம் நடக்கிற ரூம் கதவில் புஸ் (PUSH) ன்னு போட்டிருந்தது, அதான் திரும்பிட்டேன்".



(13) 
"இளவல் அடலேறாக தன்னந்தனியனாய் கர்நாடகத்திற்கு பாடம் கற்பிக்கச் செல்வதை நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது என்று தலைவர் நம்ம தம்பிய வாழத்தினாராமே அண்ணே. ஃபிளக்ஸ் பேனர் ரோடு முச்சூடும் பார்த்தேன்ணே.
நீங்க வீரப்பரம்பரை அண்ணே".
"ஆமாம். தம்பி பெங்களூருல வாத்தியார் வேலைக்கு சேர நாளைக்கு புறப்படுதுடா".


(14)
 "அந்த கட்சி சார்பாக போட்டியிட ஆள் கிடைக்கவில்லை போலிருக்கண்ணே".
"அப்படியா, யாரு சொன்னாங்க"?
"வேட்புபாளர் விருப்ப மனுவிற்கு கிரெடிட் கார்ட் வசதி உண்டு. 100% கேஷ் பேக் ஆபர், கிரெடிட் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை. உடனடி பைனான்ஸ் வசதி உண்டு. உடனே வருக என்று விளம்பர போஸ்டர் சிட்டி முழுசும் ஒட்டியிருக்காங்கண்ணே".





(15) 
கோட்டையில் பாம்பு - தினமலர் செய்தி(28.10.16)
ஒரு வேளை ஊழல் பெருச்சாளி எதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து தேடிப் போயிருக்குமோ?



(16)
பண முதலைகளுக்குக் கிடிக்கிப்பிடி!
பண முதலைகளை பாதுகாக்க புதியதாக பண்ணை அரசு அமைக்காது!!
சக்கரவர்த்தி அரசவையில் திட்டவட்டம்!!!
இப்போது உள்ள அரசவையும், அமைச்சருமே போதுமானது என்று அறிவிப்பு.


(17)
"அந்த 'மானாவாரி' நெலத்த அண்ணன் வாங்கி தியேட்டர் கட்டினாரே, வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா"?
"ஆமண்ணே, எல்லாம் முடிச்சி, இப்போ தீபாவளிக்கு 'கடலை' போட்டிருக்காரு".


(18)
"ஊழல் பெருச்சாளிகளைப் பிடிக்க மலைப்பாம்புகளை அரசு வாங்கும்"
அரசவையில் மன்னர் திடீர் அறிவிப்பு!!!
"அண்ணே, அந்த பாம்புகளின் மேல அரசு முத்திரை, பதிவெண் எழுதும் ஒப்பந்தத்தை மன்னரிடம் சொல்லி என் மச்சானுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே".


(19)
"மணல் கொள்ளையர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும், அதற்கான ஆசிரியர்கள் விரைவில் தேரந்தெடுக்கப்படுவார்கள்"
என்று அரசவையில் மன்னர் அறிவிப்பு.

(20)
பத்திரப் பதிவில் அதிரடி!
இனி இரு வண்ண தாள்களில் பத்திரப் பதிவு!!
மக்களுக்குச் சலுகை அறிவிப்பு!!!
டுபாக்கூர் நாட்டில் இனிமேல்
உரிமையுள்ள பத்திரங்களுக்கு வெள்ளை நிற முத்திரைத் தாளும்,
உரிமை இல்லாத பத்திரங்களுக்கு பச்சை நிற முத்திரைத் தாளும் பயன்படுத்தப்படும்.
உரிமை இல்லாத பத்திரப் பதிவுக்கு
பத்திரத்தின் உள்ளே புக் மார்க் ஆக வைக்கப்படும் ரூ500, ரூ1000 துண்டுச் சீட்டுகள் இனி வைக்க தேவையில்லை என்று அந்நாட்டின் மன்னர் அறிவித்தார்.
இதனால் ஏழை மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.


Tuesday, 25 October 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (1)

(1) "அண்ணே தலைவர் என்னதான் உங்க பால்ய நண்பர் என்றாலும் நீங்க பொதுக்குழுவில் அவரை அப்படி 'சித்தப்பு' என்று கூப்பிடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்"


(2) "அண்ணே, தலைவர் உங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கி விட்டாரே, இனி என்ன செய்ய உத்தேசம்"?
"ஹூம். கடவுள் இருக்காண்டா குமாரு.  நாட்டுக் கட்சியில ஆல்டோ தரதா சொல்லி தூது விட்டிருக்காய்ங்க"



(3) "என்னதான் பல்வலி அதிகமா இருந்தாலும் உள்ளூரில டாக்டரை பாருங்கண்னு சொன்னோம்.  அத்தெ கேட்காத டெல்லி யில போய் வைத்தியம் பாரத்தீங்க, இப்ப பாருங்க டெல்லிக்குப் போன அண்ணன் பல்லைப் புடுங்கிட்டாய்ங்க ன்னு எதிர் கோஷ்டி சொல்லிட்டுத் திரியுது அண்ணே”



(4) "என்னப்பா, நம்ம வூட்டு மின்ன ஒரே ரௌடிகளா நிற்கிறாய்ங்க, என்ன விசயம்"?
"இந்த காளிப்பயல முளைப்பாரிக்கு அண்ணன்  ஆள் எடுக்கிறாருன்னு டவுணுக்குப் போய் ஆள் கூட்டி வரச் சொன்னீக. அந்த பொச கெட்ட பய அண்ணன் மொள்ளமாறிக்கு ஆள் எடுக்கிறாய்ங்கன்னு டவுணுல போய்    தப்பா சொல்லியிருக்கான் அண்ணே"



(5) "அண்ணே, அந்த கேரளா பார்ட்டி ரொம்ப குசும்பு புடிச்சவன்".
"அப்படியா என்ன சொன்னான் அவன்"?
பாலாற்று மண்  பத்து லோடு வேணும் என்று கேட்கலமில்ல, அத்தெ விட்டு திராவிட மண்ணு பத்து லோடு அனுப்பச் சொல்லுன்னு நக்கலா பேசறான்ணே".







(6) "ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஆயிரம் தொண்டர்களை கட்சி மாத்தினதுக்கு என்ன கிடைச்சுது அண்ணே"?
"அந்த வயித்தெரிச்சல ஏன் கேட்கிற. 2% கமிஷனா இருபது தொண்டர்களை நம்ம கட்சிக்கு வைச்சிக்கச் சொல்லிட்டாங்க".



(7) "அந்த கட்சியில புதுசா நேர்முகத் தேர்வு வைச்சதில் உங்கள எப்படின்ணே எடுத்த எடுப்பில தலைமைக் கழக பேச்சாளராக்கினாங்க"?
 ஸ்லோகன் சொல்லச் சொல்லிக் கேட்டாங்க. எல்லாரும் ' தூக்குமேடை பஞ்சு மெத்தை' அப்படில்லாம் சொன்னாங்க. நான் 'கரண்டுக் கம்பியும் கட்டிக்கரும்பு, தண்டவாளமும் தலையணை' என்று சொன்னேன்.தலைவர் ஒடனே ஓகே சொல்லிட்டாரு".



(8) "என்னண்ணே கடல் தண்ணி, கூவம் தண்ணி எல்லாம் 10 மில்லி சாஷே, ஆஸ்பத்திரி கழிவுகள் 10 கிராம் பாக்கெட் போட  பேங்க் லோன் அப்ளிகேஷன் சேங்ஷன் ஆயிடுச்சா"?
"ஆமாடா, இப்போ அரசியல் தலைவர்களுக்கு போராட்டம் பண்ணறவய்ங்க இதையெல்லாம் தபாலில் அனுப்புறாய்ங்க. அதான் மேனஜரை கேட்டேன். புதிய வியாபார உத்தி ன்னு உடனே சாங்ஷன் பண்ணிட்டாரு".



(9) "இந்த புலனாய்வு பத்திரிக்கை ஆளை ஏன்ணே பகைச்சிக்கிட்டீங்க"?
"என்னடா என்ன ஆச்சு"?
"போன வாரம் போத்தீஸில் இரண்டு புடவை எடுத்து ஒன்னை அண்ணிக்கும்,இன்னொன்னை மாரியம்மன் கோவிலுக்கும் கொடுத்தீங்களா.
கிரித்திரியம் புடிச்சவன்  அதை  ஒரு புடவை மனைவிக்கும் மற்றதை மாரியம்மாக்கும் கொடுத்தா எழுதிப்போட்டான். அண்ணி செமகாண்டுல இருக்காங்கண்ணே".



10) "அண்ணே முன்ன நாம ஓட்டுக்கு காசு கொடுத்ததை நினைவுபடுத்தி  எலக்சன் போஸ்டரில் என்ன வாக்கியம் போடலாமின்னு கேட்டீங்களே. அதுக்கு ஸ்லோகன் தயாரா இருக்கண்ணே".

"அப்படியா, சொல்லு பார்ப்போம்".

"அன்றே  ஆயிரமாயிரமாய் கொடுத்துச் சிவந்த கரத்தை இன்று ஐந்தாண்டுகள் மேசை தட்டிச் சிவக்க, நம் டுபாக்கூரார்  அண்ணன் அவர்களுக்கே  வாய்ப்பளியுங்கள்"


மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (10)

(91) "போர்க்களம் புக உள்ள நம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்த வேண்டாமா, அமைச்சரே"?

"நாம் வருடந்தோறும் தவறாமல் 'பம்மிக் காட்டுவோம்' தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை ஊர்ஊராய் முகாமிட்டு நடத்துகிறோமே, மன்னர்மன்னா"



(92) "நதி நீர் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்ய நடுவராக உங்களை சக்கரவர்த்தி நியமித்ததை ஏன் மறுத்து விட்டீர்கள் மன்னா"?


"அரண்மனையின் பாரம்பரிய பித்தளைச் சொம்பை அடுத்து வர அனுமதிக்கவில்லையே. அதற்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டாமா, 



(93) அமைச்சரே"."நேற்று ரயில் மறியல் போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. இன்று மறியல் செய்ய ஒருவரைக் கூட காணவில்லையே என்ன காரணம் அமைச்சரே?

"பிரேக் பிடிக்கவில்லை"!
ஆய்வில் பகீர்!!

நாட்டில் ஓடும் தொண்ணூறு விழுக்காடு ரயில் வண்டிகளில்!!!

என்று 'தினப்பூ' நாளிதழிலில் இன்று தலைப்புச் செய்தி வந்திருந்ததே அரசே".


(94) "யாரங்கே, எல்லா அமைச்சர்களையும் வரச் சொல்லுங்கள். அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து மஞ்சள், குங்குமம் இட்டு வரிசையில் உட்கார வைத்து பூசணிக்காய் சுற்றுங்கள்".

"உத்தரவு மன்னா. காரணம் கேட்டால் என்ன சொல்ல அரசே"

"அரசு இயந்திரங்களுக்கு ஆயுத பூசை செய்ய மன்னர் உத்தரவு என்று சொல்லுங்கள்".


(95) "மன்னா மரண தண்டனை வழங்கும் அளவிற்கு நான் என்ன தவறு இழைத்தேன்"?

"அப்படி தண்டனை நான் தரவில்லையே அமைச்சரே? என்னவாயிற்று?

"பன் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் இன்று அரசியார் செய்து காட்டப் போகும் தீபாவளி சிறப்புப் பலகாரங்களை நான் ருசி பார்க்க வர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளாரே, தெரியாதா மன்னா"?




(96) “ டெபிட் மற்றும் 'ருபே' கார்ட்களின் ரகசியக் குறியீடு எண்களைத் திருடி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்து விட்டது மன்னா".
"அப்படியா உடனே அதன் பெயரை 'பெப்பே' கார்ட் என்று மாற்றி விடுங்கள் அமைச்சரே.

(97) "அமைச்சரே இந்த அரசு அதிகாரிகள் படு மோசம். நான் கூட மேயரை சரியாக பதில் சொல்லாதவர் என தவறாக நினைத்தேன்"
.
"அப்படியா மன்னா"?

"ஆம். இன்றைய நாளிதழ்களில் பாருங்கள்.
'அதிகாரிகளிடம் விடை பெற்றார் மேயர்' என்று செய்தி வந்துள்ளதே".

(98) "சக்கரவர்த்தி அண்டை நாட்டுடனான நட்புப் பாலத்திற்கு கை கொடுத்தார் என்று சொன்னீர்களே அரசே, எப்படி"?
"அண்டை நாட்டு மன்னன் 'பிரிட்ஜ்' ஆட கூப்பிட்டார்.ஒரு கை குறைந்தது. அப்போது சக்கரவர்த்தியும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டார் அமைச்சரே".

(99) "இளவரசர் இரண்டு நாளாக ஏதோ ஜி யிடம் ஃபோன் பேச வேண்டும் என்று கேட்டு ஒரே நச்சரிப்பு. உடனே எண் வாங்கித் தர ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே".

"விசாரித்தேன் அரசே, அது பக்கத்து நாட்டு இளவரசி விஜி யிடம் ஃபோன் பேச வேண்டும் என்று இளவரசர் சொன்னார்கள்”


(100) "அந்த படைத்தளபதியை ஏன் மன்னா பதவி நீக்கம் செய்யச் சொல்கிறீர்கள்"?

"சீன வீரர்களுடன் நம் வீரர்கள் ஒரு வாரம் கூட்டுப் பயிற்சி செய்ய தினசரி ஐந்து லட்ச ரூபாய்க்கு சைனீஸ் வெஜிடபிள் கூட்டு செய்ய காய் வாங்கியதாக பில் வைத்திருக்கிறார் அமைச்சரே ”.


Monday, 24 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (9)

(81) "டுபாக்கூர் நாட்டின் நிதியமைச்சர் இதற்கு முன் என்ன வேலையிலிருந்தார் அமைச்சரே"?

"நகைக்கடை வைத்திருந்தார் மன்னா".

"அது தானே பார்த்தேன். ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் சேதாரம் இரண்டு ரூபாய் என்று அங்கே சுற்றுலா போன இளவரசரிடம் வாங்கி விட்டார்களாம்".


(82) "மன்னா, சீன பட்டாசுகளை விற்கத்தடை போட்டாலும் கள்ளத்தனமாக விற்கிறார்கள், என்ன செய்யலாம்"?

"எல்லா சீன பட்டாசுகளையும் அரசே கொள்முதல் செய்து பதிலுக்கு போலி பத்து ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து விடலாம் அமைச்சரே"



(83) "மன்னர் மன்னா, நேற்றிரவு நம் படை வீரர்கள் உங்கள் தலைமையில் வெற்றிகரமாக'சர்ஜிகல் ஸ்டிரைக்' செய்து திரும்பினார்களாமே. காலையில் பத்திரிக்கைகளில் பார்த்தேன்". 

"ஆமாம். பதுங்கு குழிக்கு மின்னல் வேகத்தில் சென்று எறும்புப் புற்றுகளில் கெமாக்ஸின் தூவி, கரப்பான் பூச்சிக்கு ஹிட் அடித்து விட்டு உடனே திரும்பி விட்டோம் அமைச்சரே".

(84) தீபாவளி போனஸ் கேட்டு போராடி வந்த அரண்மனை ஊழியர்களின் சங்கப் பிரதிநிதிகள் உங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோதும் பின்னரும் வாய் மூடி செல்வது ஆச்சரியமாக உள்ளது மன்னா. இது எப்படி சாத்தியம்"?


"பேச்சு வார்த்தை தொடங்கும் முன் அனைவருக்கும் அரசியார் தயாரித்த தீபாவளி இனிப்பு கொடுத்தேன். அதை தின்ற பின் வாய் திறக்க அவர்களால் எப்படி இயலும் அமைச்சரே"



(85) அண்டை நாட்டரசர் வாயாலேயே வடை சுடுவதில் வல்லவர் என்பதில் சந்தேகமே இல்லை அமைச்சரே"

"அதை எப்படி மன்னா கண்டுபிடிக்க உங்களால் முடிந்தது"?

"எப்போதுமே அவரைத் சுற்றி பத்து காக்கைகள் ஆமாம் போட்டபடி கூடவே வருவதைப் பாரக்கிறேனே".





(86) "அமைச்சரே, ஒரு வாரம் மும்பைக்குப்    போய் குடும்பத்துடன் தங்கியிருந்து வாங்கி வரும் அளவுக்கு என்ன வாங்கப் போகிறீர்கள்"

"அதுவா மன்னா, தங்கள் ஆணைப்படி பங்குச் சந்தையில் நல்ல பங்குகளைப் பாரத்து தேர்வு செய்து உங்களுக்கு வாங்க வேண்டுமல்லவா".



(87) பக்கத்து நாட்டரசர் மிகவும் ராஜதந்திரமாகப் பேசுவாராமே உண்மையா அமைச்சரே"?

"ஆம் அரசே, உங்களை சில்லறைப் புத்தி சின்னப்பயல் என்பதை எப்படி நாசூக்காக 'நாணய அறிவுடை இளையோன்' என்று குறிப்பிட்டுள்ளார் பார்த்தீர்களா".



(88) "அமைச்சரே, தீபாவளிக்கு புது உடைகள் எடுக்க  வேண்டும். உடனே தேரோட்டியை அழைத்து என்னுடைய தேரினை எடுத்து வரச்  சொல்லுங்கள்".

"மன்னிக்கவும் மன்னா, அரசியார், இளவரசர் மற்றும் இளவரசியார் எல்லாம் தேரோட்டி விபத்து ஏற்படுத்திய வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் எல்லாத் தேர்களையும் நீதிமன்றத்தில் ஜப்தி செய்து விட்டார்கள்".

(89) "அமைச்சரே தீபாவளி மாமூல் வசூல் இந்தாண்டு மிகவும் குறைந்து விட்டதே என்ன காரணம்"?
"மன்னா அப்போதே எச்சரித்தேன் நம் சந்தைப் பங்கு ஃபண்ட் மானேஜர் சரியில்லை என்று கேட்டீர்களா". 

(90) "தீபாவளிக்கு நான் எதாவது புதுமையாக செய்ய வேண்டாமா அமைச்சரே. நல்ல யோசனை சொல்லுங்கள்".

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நூறு ராக்கெட்கள் நீங்கள் விடப் போவதாக அறிவித்து விடலாம் அரசே"

"அதெல்லாம் முடியுமா, அமைச்சரே"?

"ஏன் முடியாது மன்னா, இங்கே விடும் நூறு ராக்கெட் பட்டாசுகளை அங்கே போய் விட்டு விடலாம்".

Saturday, 22 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (8)

(71) "என்ன அமைச்சரே, இளவரசர் என் அறுபதாம் வயது பூர்த்தியை முப்பெரும் விழாவாக எடுக்கப் போகிறாராமே, மற்ற இரு விழாக்கள் எதற்கு"?

இரண்டாவது விழா உங்கள் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மூன்றாவது ஓய்வு கால முதியோர் இல்லத்தில் தங்களின் புதுமனை புகு விழா, மன்னர்மன்னா”




 (72) "அமைச்சரே, கட்டியக்காரன் நாளை முதல் கட்டியம் கூறும் போது ராஜ கம்பீர, ராஜ குல திலக ஜிஜிஜிஜி சோறுகேசி மன்னர் வருகிறார் என்று கட்டியம் சொல்ல உத்தரவிடுகிறேன்"?

ஏன் மன்னா , எதற்கு இந்த திடீர் மாற்றம்?

"கட்டியம் சொல்லப்படுவது 4G ஆக இருக்க வேண்டாமா மங்குணி அமைச்சரே".






(73) "அரசே, நாங்கள் சொல்பவர்களைத்தான் அரசு உணவகங்களில் பணி அமர்த்த வேண்டும் என்று குறுநில மன்னர்களும், பாளையக்கார்களும் பிரச்சனை செய்வதாகத் தகவல் வந்துள்ளது".



"அப்படியா அமைச்சரே, இனி அவர்களே வேலை வாய்ப்பு அலுவலகங்கள், அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற அமைப்புகள் நடத்த சட்டபூர்வமாக அனுமதி தந்து விடலாம்".




(74) "இந்த அரசு சிவப்பு நாடாவில் சிக்கித் தவிக்கிறது என்கிறார்களே, அமைச்சரே. இந்தக் களங்கத்தை எப்படித் துடைப்பது"?


"இனி அரசாங்கக் கோப்புகள் நீலம்,மஞ்சள் நாடாக்களுடன் உற்பத்தி செய்ய உத்தரவு இட்டு விடலாம் மன்னர்மன்னா”





(75) "அரசே, சாலைகளில் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகரித்து விட்டது. நெரிசல் ஏற்பட்டால் குறைந்தது நிலைமையை சரியாக நான்கைந்து மணி நேரம் பிடிக்கிறது. என்ன செய்யலாம் மன்னா"?

"அவ்வளவுதானே, எல்லா வாகனங்களுக்கும் தெருவிற்குத் தெரு சுங்கச் சாவடி அமைத்து வரி வசூல் செய்ய உத்தரவிடுகிறேன்".







(76) "அரசே, ஒரு சந்தேகம். உங்களிடம் கேட்கலாமா"

"தாராளமாக அமைச்சரே. ஆமாம், என்ன சந்தேகம்"?


"இந்த மர்மக் காய்ச்சல் என்று பத்திரிக்கைகளில் குறிப்பிடும் காய்ச்சலுக்கு உலகின் மற்ற நாடுகளில் என்ன பெயர் அரசே"?





(77) "அண்டை நாட்டில் அணைதிறக்கும் போராட்டத்திற்கு பங்காளிகளுக்கு அழைப்பு விடுத்தோமே, என்ன சொன்னார்கள்?

"பாதுகாப்பு இல்லாத இடத்தில் போரிடுவது மன்னரின் இன்னுயிருக்கு ஆபத்து. 
மன்னர் இன்னுயிரை விட தண்ணீர் முக்கியமில்லை.
 ஆகவே இங்கேயே பத்திரமாக தேர் மறியல் போராட்டம் செய்து கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள் அரசே".





(78) "அரசவையில் நிலை கொள்ளாமல் நெளிந்தபடி இருந்தீர்களே என்ன பிரச்சனை மன்னா"

"அதுவா, புதியதாக வாங்கிய சிம்மாசனம் மிகவும் அரிக்கிறது அமைச்சரே என்ன காரணம்"?


"நீங்கள் அரியணை வாங்க அல்லவா உத்தரவிட்டீர்கள், சிம்மாசனம் இல்லையே மறந்து விட்டீர்களா மன்னா".





(79) "அமைச்சரே, நம் நாட்டில் புகழ் பெற்ற லாண்டரி உரிமையாளர்கள் அனைவரையும் உடனே வரவழையுங்கள்".

"ஆகட்டும் மன்னா. என்ன காரணம்"?


"அவர்களிடம் சக்கரவர்த்திக்கு 'வெள்ளை அறிக்கை' தயாரிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டுமல்லவா அமைச்சரே".




(80) "மன்னா, SEBI யிலிருந்து எச்சரிக்கை கடிதம் வந்துள்ளதே.
 என்ன பிரச்சனை"?

"அப்படியா, அரசியார் நடத்தும் தீபாவளி பண்டையும் பட்டியலிட்டு NSE, BSE இல் சேரக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தேன் அவ்வளவுதான்".


Monday, 17 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (7)

(61) "அண்டை நாட்டு அரசரின் பேச்சு வாஸ்துவமான பேச்சு என்கிறார்களே அமைச்சரே, உண்மையா"?
"ஆம். மன்னா. அவர் பேசும் போது ஒவ்வொரு சொல்லையும் வாஸ்துப்படி திசை பார்த்துத்தான் பேசுவார்".


(62) "அந்த பத்திரிக்கையில் இந்த வாரம் வெளி வந்துள்ள கதை, கட்டுரை, கவிதை எல்லாவற்றிலும் வார்த்தைகள் கோர்வையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளதே, அமைச்சரே"

 "ஆம் மன்னா, அந்த பத்திரிக்கை இந்த வாரம் வாஸ்து சிறப்பிதழ் ஆக வெளி வந்துள்ளது”



(63) "மதுபானக் கடைகளில் 'கட்டிங்' பிரிப்பதில்தான் நிறைய தகராறுகள் வருகிறது என்று பத்திரிக்கைகளில் அடிக்கடி செய்தி வருகிறதே அரசே. என்ன செய்யலாம்"?
ஒவ்வொரு மதுபானக் கடையிலும் ஒரு
'கட்டிங் அம்புட்ஸ்மன்' பதவியை உருவாக்கி சரியாக அளந்து தர ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே".



(64) "பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பதை உடனடியாகத் தடை செய்யச் சொல்லி திடீரென உத்தரவிட்டீர்களே மன்னா, என்ன காரணம்"?
"ஒன்றுமில்லை. அதில் வரையப்பட்டுள்ள படம் அரசியின் முகச் சாயலில் இருக்கிறதென்று அரசியார் கோபமாக இருப்பதால்தான் அமைச்சரே".


(65) "மன்னர்மன்னா, சக்கரவர்த்தி பிரிக்ஸ் உச்சி மகாநாட்டை நாம் நடத்த ஆணையிட்டுள்ளாரே. ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா"?
"ஆம் அமைச்சரே, எல்லா செங்கல் சூளை முதலாளிகளுக்கும் உடனே அவசரச் செய்தி அனுப்பி விடுங்கள்".

(66) "என்ன அமைச்சரே, கோவிலுக்குச் செய்து வந்த தங்க ரதம் ஏன் பளபளவென்று ஜொலிக்காமல் கருத்துப் போய் இருக்கிறது என்று பக்தர்கள் கேட்கிறார்களே. என்ன நடந்தது"?
"அது மன்னா, கருப்புப் பணத்தில் வாங்கிய தங்கத்தில் செய்தது அல்லவா அதனால் அப்படி உள்ளது".

(67) "அரசே உங்கள் வீரத்தை கேலி செய்து புடவை, பிளவுஸ் பிட், வளையல், குங்குமம் எல்லாம் பக்கத்து நாட்டரசர்கள் அனுப்பியுள்ளார்கள். அவற்றை என்ன செய்ய மன்னா"?
"தீபாவளி நேரமல்லவா. தி. நகர் ரங்கநாதன் தெருவில் அவற்றை விற்க உடனே அமைச்சர்கள் செல்ல உத்தரவிடுகிறேன்".

(68) "மகாராஜா பெண்கள் ஆடை அணியகம் என்று ஒரு புது கடை திறந்துள்ளது மன்னா. வியாபாரம் சக்கைபோடு போடுகிறது மன்னர்மன்னா. கடை கல்லாவில் நம் வணிக அமைச்சரைப் பார்த்தேன் அரசே".
"அடப்பாவி நமக்கு வந்த புடவை மற்றும் இதர ஐட்டங்களை ஆட்டைய போட்டு விட்டானா. யாரங்கே கடையை உடனே சீல் வையுங்கள்".


(69) "அமைச்சரே, என்னவோ தெரியவில்லை இன்று காலை முதல் தன்மான உணர்ச்சியும், ரோசமும் மனதில் உற்றெடுக்கிறது".
"ஒரு கால் இன்று காலையில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் பற்பசை வைத்து பல் துலக்கியதால் இருக்குமோ அரசே"?


(70) "அமைச்சரே, தலைநகரில் எங்கே நான் நகர்வலம் போனாலும் கண்ணில் படும் இடத்தில் எல்லாம் ஒரே நாய்கள் கூட்டம் துரத்தி வருகிறது என்ன செய்யலாம்"?

"உங்களுக்கு கண்ணில் பொரை இருப்பதால் இருக்கலாம் மன்னா. உடனே கேட்ராக்ட் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்கிறேன்".


Friday, 14 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (6)

(51) "அண்டை நாட்டு விஷயமாக உங்கள் செயல்பாட்டைக் கண்டித்து சக்கரவர்த்தி அறிக்கை விட்டுள்ளாரே மன்னா. என்ன காரணம் மன்னா"
"ஒன்றுமே புரியவில்லை அமைச்சரே. அண்டை நாட்டரசர் திருநாடு ஏகியதாகத் தகவல் வந்தது. உடனே நல்லெண்ண நடவடிக்கையாக பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பத்திரிக்கைகளில் முழுப்பக்கம் வாழ்த்தி விளம்பரம் கொடுத்தேன்"

 (52) "ஆமாம் அமைச்சரே,
இந்த அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்று ஒரேயடியாக பத்திரிக்கைகள் எழுதுகின்றனவே".
"அதுவந்து......மன்னா"
"என்ன வந்து நொந்து... உடனே எத்தனை புது இயந்திரங்கள் தேவை என்று கணக்கெடுக்கும் பணியைத் துவக்குங்கள்".

(53) "அமைச்சர்கள் அனைவருடைய கரங்களும் கறைபட்ட கரங்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களே, இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் அமைச்சர்களே"?
"அது மன்னா, அரசு இயந்திரங்களை பழுது பார்த்த போது அப்படிக் கறை ஆகி விட்டது."


(54) "என்ன அமைச்சரே, இந்த முறை பட்ஜெட்டில் புதியதாக வரி போட்டிருக்கிறீர்களே, அது எதற்கு"?
"மன்னர் மன்னா, அது அரசு இயந்திரங்கள் உராய்வின்றி இயங்க இனிமே நிறைய 'கிரீஸ்' மற்றும் மசகு எண்ணெய் எல்லாம் வாங்க வேண்டுமல்லவா".


(55) "அண்டை நாட்டரசரை நான் நம் கலாச்சார விருந்திற்கு அழைத்ததில் என்ன தவறு? அந்த நாட்டுப் பத்திரிக்கைகள் 'பரோட்டா கால்' தவறு என்று விமர்சிக்கின்றன.என்ன பிரச்சனை"?

"அது ப்ரோட்டக்கால் (Protocol) என்ற அரசாங்க நெறிமுறை அரசே"






(56) "அமைச்சரே, நம் இளவரசியின் சுயம்வரத்திற்கு எல்லா அண்டை நாடுகளுக்கும் தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பி விட்டீர்களா?
"ஆம் அரசே, எல்லா நாட்டரசர்களுக்கும் இளவரசியின் பாரத் மேட்ரிமோனி புரொபைல் எண்ணை ஈ - மெயில் செய்து விட்டேன்"


(57) "அண்டை நாட்டரசர் என்னை போராளி என்று ஐக்கிய குறுநில மன்னர்கள் சபையில் பேசி என் புகழை உலகறியச் செய்தாராமே அமைச்சரே"
"அதுவா மன்னா, பதுங்கு குழியில் இருந்த படி கம்பு சுற்றி, உதார் விடுவதால், உங்கள் வீரம் முகநூல் போராளியை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று குறிப்பிட்டார்".



(58) "அமைச்சரே, அரண்மனையை Gated community ஆக மாற்றி விடுங்கள். ஆதார் அட்டை காட்டினால்தான் அனுமதி என்று உத்தரவிடுகிறேன்"?
"ஏன் மன்னா, இப்போதுள்ள காவல் போதுமே...... இன்னும் ஏன் கூடுதல் செலவு".
"நேற்று இரவு யாரோ ஒருவன் என்னைத் போல் உடையணிந்து என் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். நல்லவேளை நேற்றிரவு அரசியார் ஊரில் இல்லை". 



(59) "அரசே குடி நீர் பிரச்சனை தீவிரமாக உள்ளது. எங்கே பார்த்தாலும் ஒரே போராட்டமாகவே உள்ளது. என்ன செய்ய மன்னா"?
"மங்குணி அமைச்சரே, எல்லா மதுபானக் கடையிலும் ஒரு குவாட்டருக்கும் ஒரு பாக்கெட் தண்ணீர் இலவசமாக தந்தால் பிரச்சனை தீர்ந்து விடுமே". 



(60) "நவராத்திரி விழாவை முன்னிட்டுக் குடி மக்கள் மனம் மகிழ்ச்சியடைய ஏதோ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வரச் சொன்னீரகளே மன்னா"?

"ஆம். அமைச்சரே, இனி ஆண்டு தோறும் எல்லா மதுபானக் கடைகளிலும் அந்த ஒன்பது நாட்களிலும் வாங்கும் குவாட்டர்களுக்கு 100 கிராம் கடலைச் சுண்டல் இலவசமாக வழங்கி குடி மக்கள் உடல் நலம் பேணப்படும் என்று உடனே அறிவியுங்கள்".

Sunday, 9 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (5)

(41) "என்ன அமைச்சரே,ஆயுத பூஜைக்கு ஒரே பேப்பர் கட்டுக்களாக வைத்திருக்கறீர்கள்".
"ஆம் மன்னா, நாம் கொட்டேஷன் பில் மட்டும் தானே வாங்கினோம்".

(42) "வாங்கிய ஆயுதங்களின் புகைப்படம் அல்லது வீடியோ காட்ட வேண்டும் என்று மக்களை பங்காளிகள் தூண்டி விட்டுக் கலவரம் செய்ய சொல்கிறார்கள் அரசே"
"யாரங்கே, பழைய சுதந்திர தின அணி வகுப்பு வீடியோவை போட்டோஷாப் செய்து காட்டி மக்களை திருப்திக்கு படுத்த தெரியாத இந்த அமைச்சரை கழுவேற்ற உத்தரவிடுகிறேன். இழுத்துச் செல்லுங்கள்".

(43) "மன்னா, பேப்பர் ஆயுதத் திட்டம் பற்றி அறிந்து கொள்ள ராணுவ அமைச்சரான எனக்கு ஆவலாக உள்ளது"
"ஆயுதங்கள் வாங்காமல் அதற்கான 25 சதவீதம் காசை சக்கரவர்த்தியின் அரசில் ஒப்படைத்தால் காகிதத்தில் ரசீதும் 75 சதவீதம் கமிஷனும் தருவார்கள். போரின் போது ரசீதைக் காட்டி ஆயுதங்களை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் அமைச்சரே. இதனால் எந்த பராமரிப்புச் செலவு இருக்காதாம்".

(44) "அரசே, ஆயுத பூஜைக்கு வந்த மக்கள் ஆயுதங்களுக்குப் பதில் பேப்பர் கட்டுக்களைப் பார்த்து கோபமாகி ஆயுதங்களைக் காட்டச் சொல்லி பிரச்சனை பண்ணுகிறார்கள்".
"நாம் பேப்பர் ஆயுதத் திட்டத்தில் ஆயுதங்கள் வாங்கியதை எடுத்துச் சொல்லவில்லையா, அமைச்சரே"

 (45) "அரசே, வாங்கப்பட்ட ஆயுதங்கள் பட்டியலை எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியிடுங்கள் நம்வீரர்கள் சந்தேகம் நீங்கி விடும்".
"ஆம். அமைச்சரே. முதுகுக் கவசமும், கனத்த செருப்பும் மட்டுமே ஒரு இலட்சம் வாங்கியிருக்கிறோமே.தைரியமாக புறமுதுகிட்டு ஓடி வரலாமே"



(46) "காவலன் போல வேடமிட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் நகர்வலம் போன அரசர் இன்னும் வரவில்லை அமைச்சரே, கவலையாக உள்ளது".
"கவலை வேண்டாம் அரசியாரே, வி.ஜி.பி தங்கக் கடற்கரை நுழைவாயிலில் சிலை மனிதனாக நிற்க வைத்து விட்டார்களாம்".

(47) " லோக் பாதாலத் அமைப்பை ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளீர்களே அரசே, அப்படி என்றால் என்ன அமைப்பு அது என்று சட்ட வல்லுநர்கள் கேட்கிறார்கள் மன்னா"
"தீர்ப்பளித்து முடிவு கட்டக் கூடாத அரசியல்வாதிகள் வழக்குகளை பாதாளத்தில் கிடப்பில் போடும் அமைப்பு தான் அது அமைச்சரே"

(48) "அரசே, மகாராணியாரை நம் தலைநகரின் மேயராக அறிவித்து விட்டீர்களே. மேயர் பதவி என்ன குடும்ப சொத்தா என்று கேட்டு சிலர் கலகம் செய்கிறார்கள்"
"அரசியார் ஒற்றனிடம் நான் காலையில் நடைப் பயிற்சி செல்லும் நேரத்தையும், பூங்காவையும் அல்லவா கேட்டார். அதனால்தான், அமைச்சரே"

(49) "தலைவரே, பஞ்சாயத்துத் தேர்தலை தள்ளி வச்சிட்டாங்களே உங்கள் கட்சி நிலைப்பாடு என்ன"?
"அதுவரை இடைக்கால பஞ்சாயத்தாக கடடைப்பஞ்சாயத்து செய்ய அனுமதி கேட்டிருக்கிறோம்"


(50) "அமைச்சரே, அடுத்த மாதம் முதல் மழைக்காலம் அல்லவா. என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்"?

"ஐந்து சிறிய சொகுசு நீர்மூழ்கிப் படகுகள் பதுங்கு குழி பயன்பாட்டிற்கு வாங்க உலகளாவிய டெண்டர் விட்டு இருக்கிறோம் மன்னா".