Tuesday, 21 November 2017

முகநூல் கிறுக்கல்கள் (9)

1) காலி நாற்காலிகளின்
மௌன மகாநாடு
திருமணம் முடிந்த அரங்கம்.

2) நின்று கொண்டிருந்த
வெளியில் ஓடிப்போய்
ஏறிக் கொண்டது விமானம்.

3) ரகசியம் சொல்லிக்
காதை கடித்துக்கொண்டு
இருக்கிறது ஃப்ளூடூத்.

4) கருப்பான பெண்ணை
பிடிக்காதவனின் வெளுத்த
கேசத்திற்கு கருஞ் சாயம்.

5) சேற்றில்  சென்றும்
தடம் பதிக்கிறது
தானியங்கி சக்கரம்.

6) வயலில் அணி வகுத்து
வரிசையில் நாற்றுகள்
வான் மழைக்குப் பிரார்த்தனை.

7)  வரப்பில் உறங்குது
நாற்றுக் கட்டுகள்
பறிக்கப்பட்டு வந்த களைப்போ?

8) இறுக்கிய கட்டில் நாற்றுகள்
கட்டுப் பிரித்ததும் காலூன்றின
புது நிலத்தில்

9) நில மகள் விரும்பும்
பச்சைவண்ண ஆடை நெசவு
நாற்று நடுதல்.

10) அணிவகுத்த பச்சை வண்ணப்
படைகள் பசிப்பிணி போக்க
தயாராகுது நாற்றங்கால்.

11) கண் நிறைந்த பசுமை
 ஆகும் நான்கு திங்களில்
வயிறு நிறைக்கும் சோறு.

12) நாற்றென்னை உயிர்க்க
நீ குனிந்தாய் நான் குனிவேன்
நீ உயிர்க்க நெல்லாய்.

13) கைகளில் பிடித்த உயிர் கட்டு
நாற்று பயிரானால் வருமே
கைகொள்ளாமல் பணக்கட்டு.

14) தூவிய வித்து ஆனது நாத்து
நடுகையில் கலங்குது
மண்ணோடும் நதி பார்த்து.

15) விவசாயி கால்பட்ட
புனித நீரை அள்ளிப்
பருகும்  கதிரவன்.

Friday, 10 November 2017

முகநூல் கிறுக்கல்கள் (8)

1) பள்ளிக்களுக்கு விடுமுறை இல்லை 
உற்சாகமாக மேகச்சீருடை
அணிந்து வந்து விடுகிறது மழை.

2) கடிகாரச் செக்கில் ஆட்டிய
வாழ்க்கையில் கசப்பும் இனிப்புமாக
பிண்ணாக்கு நினைவுகள்.

3) வான் நோக்கிய சிறு வட்டக் குடையில்
விடாது பொழிகிறது பொய் மழை
தொலைக்காட்சி செய்திகள்.

4) வீட்டுக்குள் தொலைக்காட்சியில்
ஆர்வமாய் செய்தி பார்க்கும் சிறுவன்
வெளியே தூறலாக மழை.

5) கரைக்குத் தன் காதலைச் சொல்ல
சரியான வார்த்தை கிடைக்கவில்லை
அழித்தழித்து எழுதும் அலை.

6) வெட்டிக் கூறிட்டுக் காணாமல்
போய் விட்ட மலையின் சிறுபகுதி
என் வீட்டுச் சமையலறையில்.

7) கழுத்தை நெரிக்கும் கடன்  சாராயக்கடையில் மதுப்புட்டியின்
கழுத்தைத் திருகுபவனுக்கு.

8) பள்ளிக்களுக்கு விடுமுறை இல்லை  உற்சாகமாக மேகச்சீருடை அணிந்து வந்து விடுகிறது மழை.

9) சிலையான தலைவர்கள்
கூண்டுச் சிறையில்
சாதிக் கலவரம்.

10) ஓடி வரும் வெள்ள நீருக்கு
 நெடுக அலங்கார வளைவுகள்
ஆற்றுப் பாலங்கள்.

11) தினமும் ஒரு துளி உதிரம் சுவைத்த காட்டேரி காட்டியது நான் எவ்வளவு இனியவன் என, குளுக்கோமீட்டர்.

12) சிக்கலான கணக்குகளைத் தீர்க்கத் திறமையிருந்தும் காட்டிக் கொள்ளத் தெரியவில்லை, கால்குலேட்ருக்கு.

13) எண்ணெய் சிந்திய சாலையில்
இரவில் பெய்த மழை நீர் காலையில்  போட்டுருந்தது  ரங்கோலி.



14) நந்தவனத்தில் உறங்கும்
எலும்புக் கூடுகள்
கல்லறைத் தோட்டம்.

15) மேசைக்கு அடியில் பிறக்கிறது
குழந்தை வெள்ளுறை
உடையோடு, கையூட்டு.

16) எத்தகைய கொடும் பாவியும்
புனிதனாக ஒரே ஒரு இறப்பு போதுமானதாக இருக்கிறது.

17) தவறான வழியில் வரும்
'வருமானம்' பிடிபடும் போது
ஊரெங்கும் 'போகும் மானம்'.

18) அமைச்சர்களுக்கு முன் வாய்பொத்தி பவ்யமாகப் பேசினார் மறைந்த கட்சித்தலைவர், படப்பிடிப்பில்.

19) பாதங்களால் நிறைந்த வீடு.

நன்றாக நினைப்பிருக்கிறது பல முறை பாதங்களால் நிரம்பி இருந்தது வீடு அப்போது அப்பா தேர்தலில் போட்டியிட்டார்
அவர் வென்ற செய்தி வரும் வரை முதலில்

அடுத்து செங்கமல அக்கா கல்யாணத்தில்
மூன்று நாளா வீடு பாதங்களால் நெறஞ்சிருந்தது.

புயலும் மழையும் அடித்த போது, பின்கட்டில் மணக்க மணக்க உணவும் வீடு நிறைந்த சனங்களுமா நிறைந்திருந்தது.

போன வருஷம் பொங்கல் போது உறவினர்கள் குழந்தை குட்டிகளுடன் வந்து கொண்டாடிய போது

அப்புறம் ஆட்சி மாறிப் போய் விட்டாலும் அப்பா வெற்றி பெற்ற போதும் ராப்பகலா
வருமான வரி ரெய்டு வந்த போது

தப்பெதுவும் செய்யாவிட்டாலும் மானம் போன அதிர்ச்சியில் அப்பா மாரடைப்பில் இறந்த நாளில்

இப்படி பல வேறு காலங்களில் பாதங்களால் நிரம்பிய வீடு மனதை  நினைவடிகளால் தனியாகவே நிரப்பியது.

20) சீட்டெடுக்கும் கிளிகளுக்கு
சிறகுகள் தேவையில்லை
நெல் மணிக் கூலியே போதும்.

21) சுற்றி வந்தவன் தோள்
சுமந்த  மண்பானை துளைகளின்
வழியே ஒழுகுகிறது பந்தம்.


Sunday, 5 November 2017

முகநூல் கிறுக்கல்கள் (7)

1) இப்போதைய  கடவுளிடம் மனு கொடுத்து  முறை வர ஒரு பிறவி காத்திருக்க
முறை வந்த போது கடவுள் மாறியிருந்தார்.

2) கடவுளுடன் செல்ஃபி எடுக்கையில்
பின்னோக்கி நகர்ந்து வீழ்ந்ததில்
பூமியில் புதுப் பிறவி.

3) பால் வேறுபாடில்லை வேலைக்குச் சேர்ந்த அனைவருக்கும் மாங்கல்யம்
ஆளறி ஆவண அட்டை.

4) பூனை கண்ணை முடியது
உலகம் இருண்டு விட்டது
செல்பேசியில் மின்னூட்டமில்லை.

5) சுவர் ஓரம் எறும்புப் புற்று
நினைவில் வந்தது சிறுவனாக
கடற்கரை மணலில் கட்டிய கோபுரம்.

6) காற்றுக்குத் தலை சீவ
நீள நீளமாய்  எத்தனை சீப்புகள்
தென்னங்கீற்று.

7) வெட்ட வெட்ட பொறுத்திருந்த பூமி
ஒரு கட்டத்தில் வலியில்
பொங்கி அழுதது , ஊற்று.

8) கேட்டவர்களுக்கு எல்லாம்
சீட்டுக் கிழிந்து கொண்டிருந்து
பேருந்து நடத்துனர்.

9) ஏறி விளையாடி வாலாட்டி விசுவாசம் , குப்பைதொட்டியில் யாரோ வீசிய
ஊசிய பிரியாணி, தெரு நாய்.

10) நாடகத்தில் காட்சி மாற்றமா?
உடை மாற்றப் போகிறார்களா?
எதற்கு வானில் கருமேகத் திரை?

Tuesday, 31 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (6)

1) இருட்டறையில் நடனம்
மௌனத்தின் நட்டுவாங்கம்
மெழுகுவர்த்தியின் சுடர்.

2) பள்ளிக் குழந்தையாக
கதவு திறக்கக் காத்திருந்தது
அறையில் அடைபட்ட இருட்டு.

3) நல்வரவு என்ற மிதியடி
அழுத்திக் கால் அழுக்கை
தேய்த்த விருந்தாளி.

4) சோதிடனின் தேடல்
பார்ப்பவனின்  கைரேகையில்
தன் பேரழுதிய அரிசியை.

5) கதிரவன் அணிந்த
குளிர் கண்ணாடி
கார்கால மேகம்.

6) முரண்டு பிடிக்கும் பிள்ளையாக
அழும் வானத்து மழையை
அதட்டி அடக்க முயலும் இடி.

7)எரி பொருள் சிக்கனம் விழிப்புணர்வு ஓட்டம் தொடங்கிய நினைவிடத்தில் அலங்கார அணையாத எரிவாயுத் தீபம்.

8) மலர் தூவிச் சென்ற ஊர்வலப் பாதையில்
யார்யாரோ நடக்கிறார்கள்
ஊர்வல நாயகன் தவிர, இறுதி ஊர்வலம்.

9) பட்டினியாய் எலி
அடுப்பில் உறங்கும் பூனை
சமையலறையில் எலிப் பொந்து.

10) தனி வீட்டில் இருக்க வாய்ப்பிருந்தும் 
பல வீடுகளில் ஒண்டுக் குடுத்தனம் அநேக ஜாதகங்களில் நவகோள்கள்.


Sunday, 29 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (5)

1) காலம்

சிறிதும் பெரிதுமாய் இருகரங்களும்
அறுபது விரல்களும் இருந்தும்
காலம் வழிந்தவாறே உள்ளது கடிகார விரலிடுக்கில்.

2) பாராட்டு

தேர்ந்த ரசிகனின் கரங்களில்
மௌனித்து மறைந்திருந்தன
பாராட்டும்  சொற்கள், கரவொலி.

3) விடுதலை

ஒருவாரமாக வெள்ளைப்புறாக்கள் கூண்டுகளில் கால்கள் கட்டப்பட்டு அடைந்து கிடந்தன, கொத்தடிமைகள் விடுதலையை கொண்டாட வரும் தலைவர் பறக்க விடுவதற்காக.

4) உறக்கம்

அரிவாளால் தலை சீவப்படப் போவதை அறியாமல் ஒன்றின் மீதொன்று சாய்ந்து சுகமாக உறங்கியவாறு ஆடிஆடி பயணித்துக் கொண்டிருந்தன தள்ளுவண்டியில்  இளநீர்க் குலைகள்.

5) வாழ்க்கை

குறுகிய வாய் கொண்ட
குடத்தில் தலை நுழைத்த
விடுபட வழி தெரியாமல்
குரைத்தவாறு அங்குமிங்கும்
அலையும்  நாயாக இச்சைகளில்
சிக்கிக் கொண்ட மனிதர்கள்
அலைகிறார்கள் இப்புவியில்.

6) மறுபிறப்பு

பரலோகம் பட்டு உடுத்தி
போனவனும் அடுத்து
பிறந்தான் அம்மணமாக.

7) அழுகை

 கண்ணை மூடிக்கொண்டு
வேகமாய் வந்து மலையில்
மோதிக் கொண்ட மேகம்
வலியில் அழுதது, மழை.


8) நுகர்வு

பெரிய தட்டு  நிறைய அன்னத்தை
பிஞ்சுக் கைவிரலால் அள்ளி
சிறிது உண்டும் நிறைய இறைத்தும்
விளையாடும் பிள்ளையாக
காலத்தை நுகர்கிறான் மனிதன்.

9) பசி

வயிற்றின் வடவாக்கினி பந்தாக
திருவிழாவில் டிராகன் வேடமிட்டு
ஆடும் வித்தைக்காரனின் வாயில்.

10) தேடல்

சோதிடன் தன் உருப்பெருக்க கண்ணாடியால் தேடிக்கொண்டிருந்தான்
தன் பேரழுதிய
அரிசியை சோதிடம்
பார்ப்பவனின் கைரேகையில் .


Thursday, 19 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (4)

1) கிழிந்த சேலை

காற்று உடுத்தி சுற்றிச்சுற்றி
நடனமாடும் பூமிப் பெண்ணின்
ஓசோன் கரை  சேலையில் பொத்தல்.

2) விடுதலை

எரிகலனில் அழுத்தி சிறைப்பட்ட
வாயு அறியாது, திறப்பானைத் திருகி விடுதலை தந்த அடுத்த வினாடியே
தீ வைத்துக் கொளுத்துவார்கள் என்று.

3) வளர்ச்சி

கற்பனைக்கெட்டாத பல
பெரிய விஷயங்கள் எல்லாம்
ஒரு சிறு புள்ளியிலிருந்தே
வெடித்துத் தோன்றுகிறது
இப்பேரண்டத்தைப் போல்.

4) வரிசை

உண்மை  தனது முறைக்காக  வரிசையில் காத்திருந்த போது தாமதமாக வந்து சினேகமாய்ச் சிரித்து பேச்சுக்  கொடுத்தவாறு வரிசையில்
உள்ளே நுழைந்து உண்மைக்கு
முன் நின்றிருந்தது பொய்.

5) தலைப்பாகை
கிளைகளையும் இலைகளையும்
ஒட்ட வெட்டி மொட்டைபோடப்பட்ட
மரத்தின் தலையில் தலைப்பாகை
அரசியல் கட்சிக் கொடி.

6) மிரட்சி

வாலில் கட்டிய கூழாங்கற்கள்
இட்ட காலி தகர டப்பாவின்
ஒலி கேட்டு மிரண்டோடும்
கழுதையும் செய்வதறியாது
ஓடும் கவலை கற்கள்
இட்ட மனமும் ஓட்டம்
நின்றால்தான் எல்லாம்
சரியாகும் என்பதை
உணர்வதே இல்லை.

7) கால விளையாட்டு

மின்விசிறிக்காற்று
நிகழ்காலத்தில்
இறந்தகாலத்தையும்
வருங்காலத்தையும்
மூடி மூடித் திறந்து விளையாடிக்
கொண்டிருந்தது நாள்காட்டியில்.

8) வாழ்க்கை

அந்தக இரப்பாளியாக
அமர்ந்தவனின் வாழ்க்கைக்
கப்பரையில் யாரோ
வினாடிப் பிச்சையிடும்
டிக் டிக் ஒலி மட்டுமே காதில்
கேட்டபடி உள்ளது.
முடிவில் கப்பரையைத் துழாவ
எதுவுமே கையில் தட்டுப்படுவதில்லை.

9) பிரார்த்தனை

அது எப்படித்தான் அமைகிறதோ
ஆலயத்தில் ஆண்டவனிடம்
என் குறைகளைச் சொல்லி
வேண்டும் போதெல்லாம்
சப்தமாக யாரோ கோவில்
மணியை அடிப்பதில் அவருக்குக்
கேட்காமலே போய்விடுகிறது.


10) கண்ணீர்

தாம் இறந்து போனதே
தெரியாமல் மரத்திலிருந்து
குதித்து மண்ணில் புரண்டு
 விளையாடிய பழுத்த இலைகளுக்காகக்
கண்ணீர் வடித்தது மேகம், மழை.

Friday, 13 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (3)


காலக் கிழவன்

மெல்ல வினாடிக் கோலூன்றி
தட்டுத்தடுமாறி வினோதமான
மாரத்தான் ஓட்டத்தை ஓடுகிறது குட்டையும் 
நெட்டையுமாய் கால்கள் கொண்ட 
மாற்றுத்திறனாளி முதியவராய் காலம்.


 குழல் விளக்கு 

நான்கடி நீள கண்ணாடிக் 
குழாய்க்குள் யாருக்கும் 
தெரியாமல் ஒளிந்திருந்த
ஒளியை குழாயை விட்டு 
வெளியே தள்ளி விட்டு ஓடிக் கொண்டிருந்தது குறும்பு செய்த
சிறுபிள்ளையெனத் தன்னை
மறைத்துக் கொண்ட மின்சாரம்.


எறும்பூறல்

உறவுகள் கைவிட்டு மரித்துப்
போன தம் இனமில்லாத
சிற்றுயிர் உடல்களையும்
தேடிப்போய் இறுதி ஊர்வலம்
நடத்திக் கொண்டிருக்கின்றன எறும்புகள்.


 காகங்கள்

இருட்டில் திருட்டுத்தனமாக
எட்டிப் பார்க்கும் பிடிக்காத
நிகழ்வுகளான எலிகளை
அடித்துக் கொன்று தெருவில்
வீசியதும் கொத்திக்கொத்தி 
அருவெறுப்பூட்ட பறந்து
வருகின்றனவே நினைவுக் காகங்கள்.


நரை
  
கரும் பலகைத் தலையில்
சிக்கலான வாழ்க்கைப் பாடத்தை
புரிய வைக்க அனுபவ சாக்குக்கட்டி
கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக காலமென்ற
பேராசிரியர் எழுதியதோ நரைமுடிகள்?


பூமி

யார் சாப்பிட வேண்டி 
இந்த பூமியை சூரியனின்
சூட்டில் ஓய்வின்றி விடாமல்
சுழற்றிச் சுழற்றி வாட்டுகிறார்கள்
அசைவ உணவு விடுதியில்
மாமிசத்தை தீயில் வாட்டுவது மாதிரி.



பதாகை

கொட்டிய ஊழல் மழையில்
லஞ்சப் பணம் சாலைகளில்
12 ' ×10 ' பதாகைகளாக
பூதாகரமாக வளர்ந்திருந்தது.

Tuesday, 10 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (2)

மண் உறுத்தாத சிப்பிக்குள்
முத்தும் 
தோல்வி உறுத்தாத காதலுக்குள்
கவிதையும்
உருவாவதே இல்லை.



தேரிக் காட்டு செம்மண் 
சாலையில் வேகமாகச்
செல்லும் வாகனங்கள் நொடிப்
பொழுதில் எழுப்பிய புழுதி
மெல்ல மெல்ல அடங்குவது போல
யாரோ சொன்ன தொடர்பற்ற
ஒரு வார்த்தை கிளப்பிய
விரும்பாத நினைவுகள் மீண்டும்
அடங்க அதிக நேரம் பிடிக்கிறது.



ஏறிப் பயணம் செல்ல வேண்டிய
பேருந்து தவிர்த்து பிற எண்
பேருந்துகள் வருவதொத்து
அவள் கனவுவர வேண்டி
துயின்றவனின் கனவில்
வரிசை கட்டி வந்தன
விரும்பாத வேறு பல கனவுகள்.



கானல் நீரில் வானவில்
தூண்டில் இட்டு விண்மீன்
பிடிக்கத் தகுந்த கொழுத்த புழு
இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.



பனிக்கால குளிருக்கு
அடக்கமாக எச்சில் கூடு
சுற்றிக்கொண்டு
உறங்கிய புழுவிற்கு
மனிதன் சுடுநீர்க் குளியல் 
தந்து மீளா உறக்கத்தில்
ஆழ்த்தி போர்வையை
தந்திரமாக அபகரித்தான்.



கேளிக்கை நடன விடுதியில்
மேலாடைகளை ஒவ்வொன்றாகக்
களைந்து சுழற்சி வீசி வீசி
சுவாரசியத்தைக் கூட்டும்
நடனமாதாக வாழ்க்கை 
ஒவ்வொரு நாளாகக் களைந்து கொண்டு 

வந்து கிளர்ச்சியூட்டி
சற்றும் எதிர்பாராத ஒரு கட்டத்தில்
திடிரென்று முடிந்து விடுகிறது.


அவள் கனவிற்குள் தான்
வந்தது தெரியாமல்
செல்பேசியில் அவள்
முகநூல் பக்கத்தில் நட்பு
அழைப்பு தந்து கொண்டிருந்தான் அவன் .



வாயால் 'உஷ் உஷ்' என 
எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும்
மறு நிமிடமே பேசத் துவங்கும் 
சிறுவகுப்புக் குழந்தைகளாக 
துணி துவைப்பவர் 'ஸ் ஸ்' என்று 
வாய்க்கு வாய் எவ்வளவு முறை 
அடக்கினாலும் துணியாலும் பாறையாலும் 
சப்தம் போடாமல் இருக்கவே முடியவில்லை.


போலீஸ் இல்லாத பாதசாரிகள்
கடக்கும் இடத்தில் சாலையை
மிகுந்த பிரயாசையுடன் கூட்டத்தோடு 

கூட்டமாக கடக்க யத்தனிக்கும் 
முதியவரை இரக்கமே இல்லாமல் 
படு வேகமாக ஒலிப்பானை உரக்க ஒலித்தபடி
 மோதுவது போல வரும் பேருந்துக்கு கொம்பு 
இருக்கிறதோ இல்லையோ ஓட்டுநர்களுக்கு 
நிச்சயமாக இருக்கிறது.


விண்வெளி மெத்தையில் 
உறக்கம் வராமல்
புரண்டு புரண்டு
படுத்திருக்கிறது பூமி.



ஒரு உடல் நீங்கி மறுஉடல்
என்று உடல்களில் நுழைந்தும்
நீங்கியும் பயணிக்கிறேன்
வித விதமாய் உடல்கள்
எனக்கு எதுவுமே சரியாக இல்லை
தூரதூரமாய் வெளிச்சம்
காலில் ஏதோ குத்திய வலி
குனிந்து ஒருகால் உயர்த்தி
கையால் பிடுங்கிப் பார்த்தேன்
உடைந்த நட்சத்திரத்தின் எச்சம்
தூக்கி அதனை ஏறிந்த போது பிரபஞ்சத்தின் 

எல்லை வந்துவிட்டது.
இன்னும் ஒருயுகம் திரும்பி நடக்க 

சலிப்பாக இருக்கிறது என்றால்
தற்கொலை செய்து கொள்ள
அண்ட வெளியில் எங்கே குதிப்பது?



Saturday, 25 March 2017

முகநூல் கிறுக்கல்கள் (1)

(1) பறவையின் பாதை
கடற்கரை மணலில் நடந்த மனிதனின்
காலடித் தடங்களை ஓடி வந்து அழிக்கும்
அலையாக பறவைகளின் தடத்தை
அழித்து விளையாடுகிறது
மெலிதாய் வீசும் காற்று.

(2) விருட்சப் பாதை 
தான் பறந்த பாதையை
காற்று அழித்து விடும்
என்பதை அறிந்த பறவைகள்
வழியறிய புவி மீது விருட்சங்களை
விதைத்தபடி செல்லுகின்றன.

(3) பாதை தெரிந்தவன்
காற்றைக் கண்ணால் காணும்
வித்தை அறிந்தவனுக்கு வானில்
பறந்த பறவைகளின் பாதையைக்
காண்பதும் சாத்தியம் தான்.

(4) வாதை 
வலியோ வேதனையோ இல்லாது 
உறக்கத்தில் மரணம் யாசித்த 
இருதய நோயாளிக்கு இறைவன் 
மனமிறங்கி சர்க்கரை நோயையும் 
கூடுதலாக அருள்பாலித்து நிறைவேற்றினான்.

(5) படப்பிடிப்பு
தினம் டைரக்டர் யமதர்மனிடம் திட்டு 
வாங்குவதே வாடிக்கையாப் போய்விட்டது. 
இந்த மனிசங்க சரியாக நடிக்காமல் 
எத்தனை டேக் வாங்கி நம்ம உயிரெடுக்கிறாங்க 
என்று சித்திரகுப்த மேனேஜரிடம் 
புலம்பிக் கொண்டிருந்தாள் நித்திரா தேவி, 
உணவு இடைவேளையில்.

(6) கணக்கு நோட்டு
என்ன இது? 
பாபக் கணக்கை எல்லாம் 
புண்ணியக் கணக்கு நோட்டில்
தலைப்பை மாற்றி எழுதி
எடுத்து வருகிறாய் என்ற 
எமதர்மனிடம் பாபக் கணக்கு நோட்டுகள் 
விரைவில் காலியாகி விடுகிறது. 
புண்ணியக் கணக்கு நோட்டுகள் 
பல அப்படியே எழுதப்படாமல் காலியாக 
உள்ளன என்றான் சித்திரகுப்தன்.

(7) உறக்கம் 

எத்தனை மணி நேரம் 
எத்தனை நாள்
எத்தனை முறை 
ஒத்திகை 
கண் இமைக்கும்
கண நேர மரணத்திற்கு.

(8) வர்ண ஜாலம்

பெருமழை பெய்த நாளின்
பின் மதியப் பொழுதொன்றில்
வழுக்கும் சேற்று சாலையில் 
பொத்தல் விழுந்த குடை ஒருகையிலும் 
மறு கையில் சீமெண்ணைப் போதலுமாய் 
நடந்து வந்த அந்த ஏழைச் சிறுவன் 
கால் வழுக்கிய கணத்தில் 
கை தவறி உடைந்த போத்தலில்
மிகுந்த சிரமத்திற்கிடையே 
வாங்கி வந்த மண்ணெண்ணைய் 
சேற்று நீரில் காட்டிய வர்ணஜாலத்தை 
ரசிக்க முடியவில்லை.

(9) உயிர்ப்பயணம்

அண்டவெளியில் உயிர்களின் வாழ்க்கைப் பயணம் 
முடிவற்ற பயணத்தின் பல கட்ட ராக்கெட்டாக பூத உடல்கள்
ஒவ்வொரு கட்டமாக ராக்கெட்டுகள் இறப்பில் கழன்று விழ
முன்னேறும் பயணத்தில் அதிவேகமாக எரிந்தவாறு வெளியேறிக் கொண்டிருக்கிறது கணநேரமும் நில்லாத காலமெனும் எரிபொருள் 
செயற்கைக்கோள் பளுவாக ஏற்றிச் செல்லும் ஆன்மா 
எரிபொருள் தீர்ந்து இந்திரிய இன்பமெனும் 
வட்டப் பாதையில் நிலை பெற்று விட்டால் 
அதில் உழன்றபடியே சுற்றிச் சுற்றி வந்தழியும்
ராக்கெட்டை செலுத்தியவனையும் செல்லுமிடத்தையும்
அறிதலே வாழ்வின் பொருள் என்பதுணர்ந்த ஆன்மா 
கல்பகோடி காலத்தில் தானாகவே
அண்டமாகிப் போகிறது.

(10) இரட்டை வேடதாரிகள்
அன்னையர் அனைவரும் தெய்வம் என்று ஒருபுறம் சொல்லி 
விலைமகள் என்று மறுபுறம் எள்ளி 
இரட்டைவேடமிடும் வெட்கம் கெட்ட 
கேவலமான சமூகம் 
வரப்போகும் யாரோ ஒருவனுக்காக நள்ளிரவிலும் தன்னை அழகு படுத்திக் கொண்டு 
கதவு திறந்து காத்திருக்கும் பாலியல் தொழிலாளி நிலைக்கு 
தன்னையும் ஆக்கி விட்ட வேதனையிலும்
அந்தகைய கேடு கெட்ட மனிதர்களுக்கும் அலங்காரமாய் 
ஆசி வழங்க ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் 
நடு இரவில் ஆலயங்களில் செய்வதறியாமல் பரிதாபமாக நின்றன 
சிலையாகிப் போன பெண் தெய்வங்கள்.

(11) முதிர்ச்சி
அந்த கூட்டத்தில் இலக்கிய மழையில்
நனைந்து வீடு திரும்பிய இளைஞனின்
தலை நரைத்துப் போய் இருந்ததது.

 (12) விதி 
வண்டி இழுத்த போது அடிவாங்கிய
மாட்டின் தலைவிதி இறந்தும்
இன்னும் பலமாக மேள வாத்தியத்தில்
வாங்க வேண்டும் என்று எழுதியிருந்தது.