Friday 28 October 2016

சாலைக் குழந்தை

(1) சாலைக் குழந்தை கேட்டவரம்

நர்சிங் ஹோமில் பிறக்கவில்லை
தடுப்பூசி போட்டதில்லை
குளிச்சது கூட கார்ப்பரேசன் கக்கூஸ் தொட்டித் தண்ணியில தான்
எண்ணெய் குளி, சுடுதண்ணி குளி என்னன்னே தெரியாது
படுத்தது  எல்லாம் பிளாட்பார மரத்தடியில் தான்
பள்ளிக்கோடம் போக ஆசை தான்
ஆனா பாழாப் போன ஆதார் இல்லாம போகலை
அப்பனுக்கு கோட்டர் வாங்க போனது தான் என் ஷாப்பிங்
கணேஷ் பவன் ஊசிப்போன பலகாரம் தான் இதுவரை சாப்பிட்ட விருந்து
என் கண்ணுமின்னயே ஆத்தாளை அப்பன் போட்டு அடித்து தான் பார்த்த சண்டைப் படம்
சரி எல்லாம் போகட்டும் சாமி
இதுவரை எனக்கு எந்த வரமும் நீயும் தரலை
நானும் கேட்கலை
இந்த வாழ்வே பழகிடுச்சு
கூவம் நாத்தம் சுவாசிச்சு சென்ட் கூட நாத்தம் ஆகிப் போச்சு
சாவு ஊட்டுல டான்ஸ் ஆடி பசி மறக்க பழகிப் போயாச்சு
இப்ப ஒரே ஒரு வரம் கேட்கிறேன்
ஊரோட தீபாவளியாம் பட்டாசு வெடிச்சு  கொண்டாடறாங்க
அந்த பெரிய பணக்காரங்க வீட்டுப் புள்ளை போடற இந்த குருவி பட்டாசு  வெடிக்காத  பண்ணு
இந்த கிளிஞ்ச டவுசர் பாக்கெட்டில போட்டுக்கிறேன் அப்புறமா
நான் எடுத்து வெடிக்க
வரம் கேட்கிறேன் சாமி, தருவியா?


(2) ஜீவகாருண்யம்

"குட்மார்னிங் சார்.  அப்பாக்கு உடம்பு சரியில்லையாமே. இப்போ  எப்படி இருக்காங்க சார்"?

"குட்மார்னிங். ஒரே  தொந்தரவு, யூரின் போகணும், பாத்ரூம் போகணும் என்று.

 பணம் செலவானாலும்  பரவாயில்லைன்னு  ஹோமில் சேர்த்திட்டேன், ஆம்பிளை நர்ஸுங்க கவனிச்சிக்கிறாங்க.

எனக்கு சுத்தமா நேரமும் இல்லை.
நமக்கும் அருவெருப்பு பிரச்சனை இல்லை பாருங்க" என்றவர்,

 பொறுமையாக கையில் பிடித்திருந்த டாபர்மேன் இயற்கை உபாதை முடிக்க அரைமணி நேரமாக தெருவில் அலைந்து கொண்டிருந்தார் 'டாமி' இழுத்த இடத்திற்கெல்லாம் நாயாக.


(3) குடும்ப வாழ்க்கை

அந்த அனைத்து மகளிர்
 காவல் நிலையத்தில்
பல காலமாய் நிறுத்தி
வைக்கப்பட்ட  கார்களின்
அடர்ந்த புழுதி படிந்த
பின்பக்கத்து  கண்ணாடிகளில்
 தன் பிஞ்சு  விரலால்
அம்மா, அப்பா, குழந்தை, குடும்பம்
என்று எழுதி பாடம் நடத்தி
டீச்சர் விளையாட்டு விளையாடிக்
கொண்டிருந்தது
நேற்று ரெய்டில் பிடிபட்ட பாலியல் தொழிலாளியின் அனாதையான குழந்தை.


6 comments:

  1. மூன்று கதையும் மனதை வருத்தியது நண்பரே.
    இருப்பினும் நடைமுறை உண்மை இதுதானே இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்
    நேரமிருப்பின் எனது தளம் வரலாமே.... நண்பரே.

    ReplyDelete
  2. கண்டிப்பாக. உங்கள் தளம் இப்போதே வருகிறேன்.

    ReplyDelete
  3. மூன்றும் நெஞ்சை நெகிழ வைத்தன!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

      Delete
  4. three different good short stories...ji

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்.

      Delete